'ஜெ., மரணம் குறித்து விசாரிக்க சகாயம் குழு'
சென்னை: 'ஜெயலலிதா மறைவு குறித்து விசாரிக்க, சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும்' என, இந்திய வருவாய் அதிகாரி பாலமுருகன் மனு கொடுத்துள்ளார்.'முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவு, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவரது மரணம் குறித்து, விசாரணை நடத்த வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும், கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய வருவாய் அதிகாரி பாலமுருகன், ஜெயலலிதா மறைவில் உள்ள சந்தேகங்களுக்கு விடை காண, 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையில், குழு அமைக்க வேண்டும்' என, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், நேற்று மனு கொடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஊழியர்கள், ஏற்பு ரசீது வழங்கவில்லை. மனுவை யாருக்கு அனுப்புவது என்பது தெரியாததால் ரசீது வழங்க முடியாது என, தெரிவித்துள்ளனர்.