“அங்க இருக்கிறவங்க எல்லாம் பணத்தோட விசுவாசிகள்” கொந்தளிக்கும் தீபா தொண்டர்கள்

“அங்க இருக்கிறவங்க எல்லாம் பணத்தோட விசுவாசிகள்” கொந்தளிக்கும் தீபா தொண்டர்கள்


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக, அன்றாடம் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகளால், அ.தி.மு.க-வின் சாமான்யத் தொண்டர்கள் பலரும் அக்கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதனால் உள்கட்சி பூசல் தொடர்ந்து புகைந்த வண்ணம் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்கள் தலைமையை கேள்விகேட்க, அதற்கு இதுவரை எவ்விதப் பதிலும் வரவில்லை. மேலும் கட்சிக்கு சசிகலா தலைமை வகிப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் பல தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் பதவி வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு, ஜெ.-வின் அண்ணன் மகள் தீபாவைச் சந்தித்து, அரசியலுக்கு வருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தீபா வீட்டின் முன்பு தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தீபா வீட்டை நோக்கி நூற்றுக்கணக்கில் வந்துகொண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளரான பிறகு, ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர். இவர்களின் ஒரே விருப்பம் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்பதே. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முன்னாள் மாவட்டச் செயலளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் என ஏராளமானோர் தினந்தோறும் சென்னை வந்து, தீபாவைச் சந்தித்து அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
'அம்மாவின் வாரிசே எங்களை ஆள வா' என்ற கோஷத்துடன் குவியும் தொண்டர்கள், 'உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்; சீக்கிரம் அரசியலுக்கு வாருங்கள்; தமிழகத்தைக் காப்பாற்றுங்கள்' என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர். தொண்டர்களின் சட்டைப் பையில் ஜெயலலிதா மற்றும் தீபாவின் படங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகள் உள்ளன. மேலும் பல தொண்டர்களின் மொபைல்போன் திரையிலும் தீபாவின் படம் உள்ளதைக் காண முடிகிறது.
தீபா வீட்டின் முன் குவிந்திருக்கும் தொண்டர்கள் சிலரிடம் பேசினோம்...
"தீபா அம்மா அரசியலுக்கு வரணும்; எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் கட்டிக்காத்த அ.தி.மு.க., இப்போ அழிவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. அ.தி.மு.க மீண்டும் எழுச்சி பெறணும்னா அவங்க அரசியலுக்கு வரணும்னு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அம்மா மருத்துவமனையில் இருக்கும்போதே, மன்னார்குடி கும்பல் மிகப்பெரிய சூழ்ச்சி பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்க. இப்போ அங்க இருக்குற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களும், அம்மாவோட விசுவாசி கிடையாது. எல்லாம் பணத்தோட விசுவாசிங்க. அம்மா இருக்கும்போது நல்லா நடிச்சிருக்காங்க. இப்போ அம்மா இல்லாமல் போனதும் வாய்க்கு வந்தபடி அறிக்கை விடுறாங்க. அவங்க இஷ்டத்துக்கு பொதுச் செயலாளரா யாரையோ நியமிக்கிறாங்க" என்றார்கள். மேலும் அனைத்து தொண்டர்களும் கோஷமாக சொன்ன ஒரு விஷயம் "அடிமைகளை காசு கொடுத்து வாங்கலாம். ஆனால் அடிமட்ட தொண்டனை ஒருபோதும் வாங்க முடியாது" என்பதுதான்.
தொண்டர்களின் ஆதரவு மற்றும் அழைப்பை ஏற்று, எம்.ஜி.ஆர் பிறந்த தினமான ஜனவரி 17-ம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக தீபா அறிவித்துள்ளார். இதனால், கடந்த சில தினங்களாக மேலும் அதிக எண்ணிக்கையிலான தொண்டர்கள் அன்றாடம் தீபா வீட்டின் முன் குவிகிறார்கள். அங்கு வருவோர் பற்றிய விவரங்களை அறிய தீபா வீட்டின் முன்பு பதிவுப் புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு, இருவர் அமர்ந்து உள்ளனர். இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேல் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களின் பெயர், முகவரி, அவர்கள் கட்சியில் என்ன பொறுப்பில் இருந்தார்கள்? அல்லது தற்போது உள்ளார்கள்? அவர்களின் தொடர்பு எண் போன்ற விவரங்கள் குறிக்கப்பட்டு வருகின்றன. சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் இதுவரை வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தொண்டர்கள் அனைவரையும் தனித்தனியே சந்திக்க முடியாது என்பதற்காக, கடிதங்களை தொண்டர்கள் போடுவதற்கு ஏதுவாக இரண்டு பெட்டிகள் தீபா வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ளன. ஒருநாளைக்கு ஐந்தாயிரத்துக்கும் அதிகமான கடிதங்கள் அந்தப் பெட்டிகளில் விழுகின்றதாம்.
சமீப காலமாக தமிழகம் முழுவதும் சசிகலா பேனர் கிழிக்கப்பட்டும், அவர் முகத்தில் சாணி அடிக்கப்பட்டும் தொண்டர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால், தீபா மீதான எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகரித்துள்ளது