ஜனவரி 2017: மீண்டு(ம்) எழுகிறதா இந்திய கார் சந்தை?

ஜனவரி 2017: மீண்டு(ம்) எழுகிறதா இந்திய கார் சந்தை?

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மந்தமாக காணப்பட்ட இந்திய கார் சந்தை, 2017-ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் மீண்டும் முன்னேற்ற பாதைக்கு திரும்பியுள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி அதிகபட்சமாக 26 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்தாண்டு ஜனவரி மாத விற்பனை, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், மாருதி சுஸூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ரெனோ, ஃபோர்டு, ஃபோக்ஸ்வாகன், டட்சன், ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் வளர்ச்சியும்; மஹிந்திரா, ஹோண்டா, செவர்லே, நிஸான், ஃபியட், மிட்சுபிஷி ஆகிய நிறுவனங்கள் வீழ்ச்சியும் கண்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜனவரியில் 2,27,944 மாருதி கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்தாண்டு அதே ஜனவரி மாதத்தில் கார் விற்பனை 15% வளர்ச்சி கண்டு, 2,62,308 கார்கள் விற்பனையாகியுள்ளன. மேலும் ஜனவரி 2017 மாதத்தில், இந்தியாவின் மொத்த கார் விற்பனையில், 51% சதவீத பங்களிப்பை அளித்து சாதனை படைத்துள்ளது மாருதி சுஸுகி.

இந்திய கார் சந்தையின் பங்களிப்பின்படி, டாப் 5 கார் நிறுவனங்களைப் பற்றிக் காண்போம்;

1. மாருதி சுஸூகி:

இந்திய கார் சந்தையின் ஜாம்பாவானாக இருந்துவரும் மாருதி சுஸூகி, கடந்த ஜனவரி மாதம் மட்டும் இந்தியாவில் விற்பனையான கார்களில், 51% பங்களிப்பை தனியொரு நிறுவனமாக பதிவுசெய்துள்ளது. மாருதியின் ஆல்டோ, டிஸையர், வேகன்-ஆர், பெலினோ போன்றவை குறிப்பிடத்தக்க அளவில் விற்பனை வளர்ச்சியை கண்டுள்ளன.

2. ஹூண்டாய்:

தொடர்ந்து பல மாதங்களாக, இந்திய கார் சந்தையில் இரண்டாவது இடத்தை பிடித்து வரும் ஹூண்டாய் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 17.6 சதவீகிதத்திலிருந்து 15.9 சதவீகிதமாக குறைந்துள்ளது. இருந்தாலும் கிராண்ட் i10, எலீட் i20 மற்றும் க்ரேட்டா ஆகிய மாடல்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பின் காரணமாக, கார் விற்பனை 11 சதவீகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் இயான், எக்ஸென்ட், வெர்னாவின் விற்பனையானது, வீழ்ச்சியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. மஹிந்திரா:

மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தோடு ஒப்பிடும்போது, 7 சதவீதம் குறைந்திருக்கிறது; ஆனால் பொலேரோ, ஸ்கார்பியோ ஆகிய மாடல்கள் குறைத்த அளவிலான வளர்ச்சியை கண்டுள்ளன.

4. ஹோண்டா:

2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், 17,135 கார்களை விற்றது ஹோண்டா நிறுவனம்; இதுவே ஜனவரி 2017-ல் 9 சதவீகிதம் வீழ்ந்து, 15,592 கார்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது. இவர்களின் தயாரிப்பான அமேஸ், பிரியோ ஆகிய மாடல்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாடல்களும் இரண்டு இலக்க வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

5. டாடா:

மொத்த இந்திய கார் சந்தை பங்களிப்பில், 4.9 சதவீதத்தை கொண்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனை, கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 2,197 கார்கள் அதிகம் விற்பனை ஆகியுள்ளது. ஒருபுறம் இண்டிகோ, நானோ, இண்டிகா ஆகிய மாடல்களின் விற்பனை 25%-76% வரை குறைந்தாலும்; ஜெஸ்ட், ஹெக்ஸா, டியாகோ ஆகியவற்றின் விற்பனை தொடர்ந்து கணிசமான எண்ணிக்கையில் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.

கடந்த 2016 ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக, இந்தியாவில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத கார் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், ஆட்டோமொபைல் துறையினரிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட், இந்த மாதம் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையே அளித்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி மாத புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கார்களின் விற்பனையில் ஏற்றத்தை காண்பித்திருக்கிறது; இந்தியாவில் சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் ஜிஎஸ்டி மசோதாதான், கார் உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்திய வல்லுனர்களை புறக்கணித்தது தவறு; சீன அரசின் தேசிய நாளிதழ் கருத்து

இந்திய வல்லுனர்களை புறக்கணித்தது தவறு; சீன அரசின் தேசிய நாளிதழ் கருத்து

பீஜிங் : 'அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில், தலைசிறந்து விளங்கும் இந்திய வல்லுனர்களை புறக்கணித்து விட்டு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடியதன் மூலம், சீனா மிகப்பெரிய தவறு செய்து விட்டது' என, அந்நாட்டின் அரசு நாளிதழான, 'குளோபல் டைம்ஸ்' தெரிவித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த இந்த நாளிதழ், முதன்முறையாக, நம் நாட்டிற்கு ஆதரவான கட்டுரையை வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:கடந்த சில ஆண்டுகளாக, வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள், அவற்றின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை, சீனாவில் அமைக்க ஆர்வம் காட்டின. இதனால், சீனாவில் வரலாறு காணாத வகையில், தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. தற்போது, உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் பார்வை, இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. சீனர்களை விட, குறைவான ஊதியத்தில், திறமை வாய்ந்த வல்லுனர்கள் இந்தியாவில் கிடைப்பதும், இளையோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதும் தான், இதற்கு காரணம்.
உதாரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த, சி.ஏ., டெக்னாலஜிஸ் நிறுவனம், சீனாவில், 300 வல்லுனர்களுடன் செயல்பட்டு வந்த, அதன் ஆய்வு மையத்தை மூடி விட்டு, இந்தியாவில், 2,000 வல்லுனர்களைக் கொண்ட பிரிவை அமைத்துள்ளது. இது போல, சீனாவில் உள்ள, பல ஆய்வு நிறுவனங்கள், இந்தியாவில் கால்பதித்து வருகின்றன. சீனா, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு, கோடிக் கணக்கான டாலர்களை பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. அது போல, வலைதளங்கள் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், ஆய்வு மையங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும், ஏராளமான ஊக்கச் சலுகைகளை வழங்குகிறது.
இருந்த போதிலும், சீனாவில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதும், பணியாற்றக் கூடிய வயதில் உள்ளோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும், பாதகமான அம்சங்களாக உள்ளன. அதனால், சீன அரசின் முயற்சியால், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு திட்டங்கள் பெருகினாலும், அவற்றுக்கான வல்லுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. சீனா, இந்திய வல்லுனர்களை புறக்கணித்து, அமெரிக்க, ஐரோப்பிய வல்லுனர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது தவறு. அதுமட்டுமின்றி, இந்திய அறிவியல் வல்லுனர்களை ஈர்ப்பதில் போதிய அக்கறை காட்டவும், சீனா தவறி விட்டது.
இதை உணர்ந்து, தற்போது இந்தியா போன்ற நாடுகளில் உள்ள, தொழில்நுட்ப வல்லுனர்களை ஈர்ப்பதில், சீனா கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது. சீனாவின் குய்ஸோ மாகாணத்தில் உள்ள நிறுவனங்கள், இந்திய வல்லுனர்களை ஈர்க்கும் நோக்கில், வீடு, காப்பீடு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பாவனாவை ஏன் கடத்தினோம்? சுனில் பகீர் வாக்குமூலம்

பாவனாவை ஏன் கடத்தினோம்? சுனில் பகீர் வாக்குமூலம்

சென்னை: மலையாள நடிகை பாவனா ஏன் கடத்தினோம் என்பது குறித்து அந்தக் கடத்தலின் முக்கிய குற்றவாளியான சுனில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த வாரம் ஓடும் காரல் நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகினர் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியும் பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநருமான சுனில் உள்ளிட்ட 9 போரை போலீலார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சுனிலிடம் காவல் துறையினர் பாவனா கடத்தல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில், பாவனாவை மிரட்டி பணம் பறிக்கவே அவரை கடத்தினோம். இதனால் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை விடியோவாக எடுத்து மிரட்டினோம்.

இதைப் பார்த்து அவர் பயந்து பணம் கொடுத்துவிடுவார் என நினைத்தோம். ஆனால் அவர் போலீஸிடம் புகார் அளித்துவிட்டார் என்று கூறினார்.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக சந்தேகிக்கும் நபர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், அந்தத் தகவல்களை எல்லாம் ரகசியமாக வைத்துள்ளனர். விரைவில் அது தொடர்பான செய்திகளையும் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலாவை சின்னம்மா என்று கூப்பிட எனக்கு ...

சசிகலாவை சின்னம்மா என்று கூப்பிட எனக்கு ...



ஜெயா டிவியின் செய்தி வாசிப்பாளரும், அதிமுகவின் பேச்சாளருமான பாத்திமா பாபு இன்று திடீரென ஓபிஎஸ் அணியில் இணைந்தார். ஜெயலலிதா பிறந்த நாளில் இந்த முடிவை எடுத்துள்ள பாத்திமா பாபு, சசிகலா ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதையும், ஓபிஎஸ் அணிதான் உண்மையான அதிமுக என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது:

ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தா வாயால், சசிகலாவை செய்தி வாசிக்கும்போது சின்னம்மா என்று அழைக்க சொல்லியது எனக்கு நெருடலை தந்தது.

அதனால்தான் மக்களின் முதல்வராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளேன்.

“மக்களுக்காக இறங்கி வந்து பணியாற்றும் பண்பும், மக்களோடு மக்களாகப் பழகும் தன்மையும், பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் குணமும் ஓபிஎஸ் அவர்களிடம் மட்டும்தான் இருக்கிறது. தற்போதைய முதல்வருக்கு 122 எம். எல். ஏக்க மட்டும்தான் ஆதரவு கொடுத்துள்ளார்.

ஆனால் ஒன்றரைக் கோடி கட்சித் தொண்டர்களும், ஏழு கோடிக்கும் மேலான தமிழக மக்களும் அம்மா வழி நடக்கும் பன்னீர் செல்வத்தின் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால் உண்மையான அ. தி. மு. க கட்சியும் ஓ. பி. எஸ் வசம்தான் இருக்கிறது.
என்று பாத்திமா பாபு கூறியுள்ளார்.

பல் துலக்கும்போது இந்த தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க...

பல் துலக்கும்போது இந்த தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க...

பொதுவாக நாம் எப்போது காலையில் எழுந்து, பற்களை நன்றாக துலக்கி, சுத்தமாக குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் இந்த நல்ல பழக்கத்தை எப்போதுமே தவறாமல் கடைபிடித்து வந்தால், பல நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் நம்மை அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

பல் துலக்குவதற்கு நீண்ட நாட்களாக ஒரே டூத் பிரஷைப் பயன்படுத்தினால், வாயில் கிருமிகளின் வளர்ச்சியை அதிகமாக்கிவிடும். எனவே ஒரு டூத் பிரஷை 2 மாதத்திற்கு மேல் பயன்படுத்தாமல், புதிய டூத் பிரஷை வாங்கி பல் துலக்க வேண்டும்.

காலையில் பற்களை துலக்கும் போது, 2 நிமிடமாவது நன்றாக துலக்க வேண்டும். இதனால் நம் வாயில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்பட்டு, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

பற்களை துலக்கி முடித்ததும், குளியல் அறையில் டூத் பிரஷ் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் குளியல் அறையில் இருக்கும் கிருமிகள் டூத் பிரஷில் பரவும். எனவே அதை மீண்டும் பயன்படுத்தும் போது வாயில் கிருமிகள் நுழைந்து, பல் மற்றும் ஈறுகளை பாதிப்படையச் செய்யும்.

பற்களைத் துலக்கும் போது, நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் நாக்கில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தாது.

பற்களைத் துலக்கிய உடனே நீரால் வாயைக் கொப்பளிக்காமல்,பற்களைத் நன்றாக துலக்கிய பின் 15 நிமிடம் கழித்து வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாயில் உள்ள கிருகிகள் அழிந்து போய்விடும்.

வாட்சப்பில் வந்தாச்சு புதிய 'ஸ்டேட்டஸ்' வசதி!

வாட்சப்பில் வந்தாச்சு புதிய 'ஸ்டேட்டஸ்' வசதி!

சென்னை: உலகின் பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்சப்பில் தற்போது புதிதாக 'ஸ்டேட்டஸ்' என்னும் மேம்படுத்தப்பட்ட வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள தகவல் பரிமாற்ற செயலிகளில் வாட்சப் முதல் இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் முகநூலுடன் இணைக்கப்பட்ட பிறகு வாட்சப்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக 'ஸ்டேட்டஸ்' என்னும் மேம்படுத்தப்பட்ட வசதி தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனாளர்கள் இதனைப் பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள், எமோஜிக்கள் மற்றும் GIF படங்களை தத்தமது ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ள முடியும். இப்படி உருவாக்கப்படும் ஒரு புதிய ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்துக்கு ஆக்டிவாக இருக்கும்.

இதற்கு முன்பே வாட்சப்பில் பரிமாறப்படும் செய்திகளுக்கு இருப்பது போல பிறர் எளிதில் பார்க்க முடியாத 'என்கிரிப்ஷன்' வசதியம் உள்ளது.

வாட்சப்பில் இந்த புதிய வசதியைப் பெற கூகிள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் போதும். வாட்ஸ் அப்பில் ஏற்கனவே உள்ள 'சாட்ஸ்' மற்றும் 'கால்ஸ்' ஐகான்களுக்கு நடுவே 'ஸ்டேட்டஸ்' எனப்படும் புதிய ஐகான் உண்டாகி இருக்கும்.

மேலும் இடப்பக்கத்தில் கேமரா வசதியும் உருவாகி இருக்கும். இதில் புகைப்படங்கள், செல்ஃபி, வீடியோக்களை எடுத்து அதையும் உங்கள் ஸ்டேட்டஸாக வைக்கலாம். அவ்வாறு பயன்படுத்தப்படும் புகைப்படத்தில் எமோஜிக்கள் சேர்க்கவும், தகவல்கள் எழுதவும் இந்த புதிய அப்டேட் வழி செய்கிறது.

ஜெயலலிதா மரணத்தை விசாரித்தால் சசிகலா ஆயுள் கைதிதான்.. மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா மரணத்தை விசாரித்தால் சசிகலா ஆயுள் கைதிதான்.. மு.க.ஸ்டாலின்


ஜெயலலிதா மரணம் குறித்த முறையான விசாரணை மேற்கொண்டால் சசிகலா ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
நேற்று திருச்சியில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், ‘வருங்கால சந்ததியினர் நலமுடன் வாழ தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தைக் காப்பாற்றும் கடமை திமுகவுக்கு உண்டு.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக முறையாக விசாரிக்கப்பட்டால், பெங்களூரு சிறையில் இருப்பவர்கள் ஆயுள் கைதியாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறினார்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் தான் போடும் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணம் குறித்த நீதிவிசாரணை குறித்ததாகத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

350 கி.மீ வேகத்தில் கடலுக்கு அடியில் சீறும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்..!

350 கி.மீ வேகத்தில் கடலுக்கு அடியில் சீறும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்..!

இந்திய ரயில்களின் வேகம் மட்டும் டெக்னாலஜியால் அதிகமாகிக்கொண்டே போனாலும், அவை சொன்ன நேரத்துக்கு வராமல் தாமதமாக வருவது வழக்கம் தான். இப்போது டெக்னாலஜியின் அடுத்த பாய்ச்சலால் சீறப்போகிறது இந்தியன் ரயில்வே. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. இதையும் மற்ற ரயில் பாதைகளை போல அமைப்பார்கள் இதுல என்ன இருக்குனு யோசிக்கிறீங்களா? இருக்கு பாஸ்..

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் கடலுக்கு அடியில் ஓடப்போகிறது என்பதுதான் சிறப்பு. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்து கடலுக்கு அடியில் இந்த ட்ரெயினில் பயணம் செய்தால் ஒரு ‘வாவ்’ அனுபவமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். டபுள் டெக் ட்ரெயினுக்கே க்யூல நின்னு போனவங்க பாஸ் நாம.

மும்பையில் இருந்து அகமதாபாத் இடையே 508 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படும் இந்த புல்லட் ரயில் பாதையில் 7 கி.மீ தூரம் ஆழ்கடலின் அடியில் அமையப்போகிறது. தானே மற்றும் விரார் நகரங்களுக்கு இடையே 21 கி.மீ தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைய இருக்கிறது. இந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் பயிர்கள் பயிரிடப்படும் பாசனப்பரப்பு அதிகமாக இருப்பதால் அது பாதிப்படையாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த சுரங்கப்பாதையை வடிவமைத்துள்ளார்கள். இதுதான் இந்த புராஜக்ட்டில் பாரட்டப்பட வேண்டிய அம்சம்.

இந்த ரயில் அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தில் செல்லும் என்பதால் இரு நகரங்களுக்கு இடையேயான தொலைவை 3 மணி நேரங்களில் எளிதாக கடக்கலாம். மேலும் இரண்டும் மெட்ரோ நகரங்கள் என்பதால் புல்லட் ரயில் போக்குவரத்து மேலும் பல வசதிகளை மேம்படுத்த உதவும். புல்லட் ரயிலால் பயண நேரம் வெகுவாக குறையும்.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கடலின் அடியில் 70 அடி ஆழத்தில் உள்ள மண் படுகைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் தொடங்கி விட்டன. 97,636 கோடி ரூபாய் செலவாகும் இந்த திட்டத்திற்கு ஜப்பான் 81 சதவிகிதம் நிதி உதவி அளிப்பதோடு மட்டுமில்லாமல் ரயில் பாதை கட்டுமானம் மற்றும் இயக்கத்திலும் உதவி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. நடைபெற்று வரும் பரிசோதனைகள் முடிவடைந்ததும் ரயில் பாதை கட்டுமானத்தை வரும் 2018 ம் ஆண்டில் தொடங்கி 2023 ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் உலகளாவிய அளவில் முன்னிலையில் இருப்பது ஜப்பான் நாடுதான் அங்கு 1964 ஆண்டிலேயே அதிவேக ரயில்கள் ஓடத் துவங்கி விட்டன.மேலும் கடலுக்கு அடியில் ரயில் பாதையை அமைப்பது என்பது நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். அவர்களுக்கு அது பழக்கமான ஒன்றுதான். 1988 ஆம் ஆண்டே ஜப்பானின் ஹொன்சு மற்றும் ஹொக்கிடோ தீவுகளுக்கு இடையே 54 கி.மீ தூரத்திற்கு ஆழ்கடலின் அடியில் செல்லும் இரு வழி ரயில் பாதையை வடிவமைத்து அதில் புல்லட் ரயில் ஓட்டியவர்கள் ஜப்பானியர்கள். எனவே இந்தியாவின் புல்லட் ரயில் சகாப்தத்தையும் சிறப்பாக தொடங்கி வைப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

அதுக்கு முன்பாக நம்ம பிரதமர் மோடிகிட்ட ஒரு கேள்வி. போன நவம்பர் மாசம் திடீர்னு ஒரு நாள் நைட்டு 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதுனு சொல்லிட்டு எங்கள பணம் எடுக்க ஊர் ஊரா சுத்த விட்டு நீங்க ஜப்பானுக்கு போய் புல்லட் ட்ரெயில ஓட்டுற மாதிரி போஸ் குடுத்தீங்களே.. அது இந்த ரயில இந்தியாவுக்கு கொண்டு வர்றதுக்குக்குதானா?

2018 ஆம் ஆண்டு வரை ஜியோ இலவசம் தொடரும் : முகேஷ் அம்பானி அறிவிப்பு

2018 ஆம் ஆண்டு வரை ஜியோ இலவசம் தொடரும் : முகேஷ் அம்பானி அறிவிப்பு


பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜியோவின் இலவச சேவை தொடரும், என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

கடந்த 170 நாட்களில் 100 மில்லியன்களுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று சாதனையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ-வின் பல்வேறு புதிய சலுகைகளை அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.

இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி பேசியதாவது:

* ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 2018 மார்ச் 31ஆம் தேதி வரை இலவச டேட்டா தொடரும்

* இந்த சலுகை ஏற்கனவே இந்த சேவையில் சேர்ந்தவர்களுக்கும், வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் சேருபவர்களுக்கும் பொருந்தும்.

* ஜியோ பயன்பாட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் 100 கோடி GB-க்கு அதிகமான டேட்டாவை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு நாளைக்கு 3.3 கோடி GB பயன்பாட்டுக்கும் அதிகமாகும்.

* நாட்டில் உள்ள மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை வைத்து இருக்கும் பேஸ் ஸ்டேஷன்களைவிட ஜியோ 4G-க்கு அதிக ஸ்டேஷன்கள் உள்ளன.

* கடந்த 170 நாட்களில் ஒரு நிமிடத்திற்கு 7 வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது

* மொபைல் டேட்டா பயன்பாட்டில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

* தினமும் 5.5 கோடி மணி நேர வீடியோ பயன்பாட்டை ஜியோ மேற்கொண்டு வருகிறது.

* 2017ல் நாட்டின் மக்கள் தொகையில் 99 சதவீத வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ பெற்று இருக்கும்

* ஆதார் முறையில் வாடிக்கையாளர்கள் சேர்ப்பு மற்றும் மொபைல் எண் மொபிலிட்டி ஆகியவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்

* டிஜிட்டல் வாழ்க்கையில் டேட்டா என்பது மனிதனுக்கு ஆக்சிஜனைப் போல் ஆகிவிட்டது.

* ஏப்ரம் 1ஆம் தேதியில் இருந்து ஜியோ கட்டணம் அமலுக்கு வரும்.

* ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின்னரும் ''வாய்ஸ் கால்'' இலவச சேவை தொடரும்

* போட்டியாளர்களை சமாளிக்க கூடுதலாக 20 சதவீத டேட்டாவை ஜியோ வழங்கும்

* தொலை தொடர்பு இயக்குனர்கள் மூலம் டேட்டா திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, மேலும் 20 சதவீத டேட்டா அதிகரிக்கப்படும்

* ஜியோ அடிப்படை உறுப்பினர் திட்டத்தில் இணைய வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ. 99 செலுத்த வேண்டியது இருக்கும்

* முதல் ஆண்டில் இந்தக் கட்டணம் மாதத்திற்கு ரூ. 99 ஆக இருக்கும். அடுத்த ஆண்டில் இருந்து இது மாதத்திற்கு ரூ. 303ஆக உயர்த்தப்படும்.

பறக்கும் கார் விற்பனைக்கு!

பறக்கும் கார் விற்பனைக்கு!


கமர்ஷியலாக அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் உலகின் முதல் பறக்கும் கார் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது PAL-V லிபர்டி (Liberty). $4,25,000 என்ற விலையில் (உள்ளூர் வரிகள் இல்லாமல்) கிடைக்கக்கூடிய இந்த பறக்கும் காரின் இந்திய மதிப்பு, ஜஸ்ட் 3.56 கோடி ரூபாய்தான்! 2018-ம் ஆண்டு இறுதிமுதலாக PAL-V Liberty-ன் டெலிவரிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவகை கார்களின் விதிமுறைகளைப் பின்பற்றி, பறக்கும் காரான லிபர்டியைத் தயாரித்திருப்பதாகக் கூறியுள்ள PAL-V நிறுவனம், ''விமானப் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்தின் வரலாற்றில் இது ஒரு மைல்கல்'' எனக் கூறியுள்ளது.

முதற்கட்டமாக லிபர்டி பயனீர் எடிஷன் (Liberty Pioneer Edition) எனும் ஸ்பெஷல் எடிஷனில் களமிறங்கும் இந்த பறக்கும் கார், 90 மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. Flight Instruction Session, Power Heating, Personalisation Options, CarbonFibre Detailing போன்ற பல வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. 90 கார்களில் சரிபாதி எண்ணிக்கை, ஐரோப்பியாவில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது. இவற்றின் டெலிவரிகள் முடிந்த பிறகு, லிபர்டி ஸ்போர்ட் (Liberty Sport) மாடலின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் என PAL-V நிறுவனம் தெரிவித்துள்ளது.

$3,99,000 என்ற விலையில் (உள்ளூர் வரிகள் இல்லாமல்) கிடைக்கக்கூடிய இந்த வேரியன்ட்டின் இந்திய மதிப்பு, 3.34 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை குறைவாக இருப்பதற்கு, இந்த வேரியன்ட்டுடன் வழங்கப்படும் குறைவான Personalisation Option-களே காரணம். ஆனால் Flying Lessons, Power Heating, Carbonfibre Detailing ஆகியவை இதனுடன் வழங்கப்படும் என்பது ஆறுதல்.

பறக்கும் காரான லிபர்டி, ஆட்டோ போல மூன்று சக்கரங்களை மட்டுமே கொண்டிருக்கிறது; கார் பறப்பதற்குத் தேவையான றெக்கைகள், காரின் கூரை மேலே பொசிஷன் செய்யப்பட்டுள்ளன. இந்த செட்-அப், இரண்டு Dual Propulsion - Rotax வகை இன்ஜின்களைக் கொண்டிருக்கும் GyroCopter விமானத்தை நினைவுபடுத்துகின்றன. இரண்டில் ஒரு இன்ஜின் சாலைப் பயன்பாட்டுக்கும், மற்றொன்று ஆகாயத்தில் பறப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இங்கே இருக்கக்கூடிய பெரிய Rotor, 664 கிலோ எடையுள்ள இந்த காரை மேலெழுப்புவதற்கு உதவுகிறது. இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ள பிளேடுகள், இந்த பறக்கும் காருக்குத் தேவையான உந்துசக்தியைத் தருகின்றன. இரண்டு பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய லிபர்டி, தாழ்வான சஸ்பென்ஷனைக் கொண்டிருக்கிறது.

சாலைப் பயன்பாட்டில் இருந்து பறப்பதற்குத் தயாராக, லிபர்டி காருக்கு 5 முதல் 10 நிமிடங்களே தேவைப்படும் என PAL-V நிறுவனம் கூறினாலும், காரின் ஓட்டுனர்தான் பின்பக்கத்தில் மடிந்த நிலையில் இருக்கும் இரண்டு Rotor பிளேடுகளை, வெளியே எடுத்து விரித்துவிட வேண்டும். இந்நேரத்தில் காரின் கூரையில் இருக்கும் றெக்கைகள் தானாக விரிந்துவிடும். ஆக கார் பறப்பதற்கு ரெடி!

லிபர்டியை ஓட்டுவதற்குப் பிரத்யேகமான லைசென்ஸ் தேவை என்பதுடன், பறக்கும்போதுய் நினைத்த மாத்திரத்தில் இதனை தரையில் இறக்கிவிட முடியாது. எந்த தடைகளும் இல்லாத 90-200x20 மீட்டர் இடமானது, லிபர்டி டேக்-ஆஃப் ஆவதற்கும் தரையிறங்குவதற்கும் தேவைப்படும் என்கிறது PAL-V நிறுவனம். எனவே Small AirStrip, AeroDome, Glider Site, UltraLight AirField ஆகியவை இதற்கு ஏற்றதாக இருக்கும் என நம்பலாம். மேலும் 246 கிலோ எடையைச் சுமக்கும் திறன் இருப்பது ப்ளஸ்.

லிபர்டி பறக்கும்போது வெளிப்படுத்தும் சத்தம், சிறிய விமானம் மற்றும் ஹெலிகாப்டர் போன்றவற்றைவிடக் குறைவாகவே இருக்கும் என PAL-V நிறுவனம் தெரிவித்துள்ளது. காராகப் பயன்படுத்தும்போது, 100bhp பவரை வெளிப்படுத்துகிறது லிபர்டியின் இன்ஜின். சாலையில் அதிகபட்சமாக 160கிமீ வேகம் வரை செல்லக்கூடிய லிபர்டி, 0 - 100கிமீ வேகத்தை வெறும் 9 விநாடிகளில் எட்டிவிடுகிறது.

லிட்டருக்கு 11கிமீ மைலேஜ் தரும் லிபர்டியின் 100 லிட்டர் டேங்கை ஒருமுறை நிரப்பினால், கிட்டத்தட்ட 1,314கிமீ தூரம் வரை செல்ல முடியும். பறக்கும்போது 3500 மீட்டர் உயரம் வரை செல்லக்கூடிய லிபர்டி, அதிகபட்சமாக 180கிமீ வேகத்தை எட்டுகிறது. இதற்கு லிபர்டியில் இருக்கும் 200bhp பவரை வெளிப்படுத்தும் இன்ஜினே காரணம். சாலைப் பயன்பாட்டைவிட ஆகாயத்தில் அதிக வேகம் செல்லும் லிபர்டி, மைலேஜில் பின் தங்கிவிடுகிறது - 500கிமீ தூரம் மட்டுமே அதிகபட்சம் பறக்க முடியும். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 26 லிட்டர் எரிபொருளைப் (Euro 95, Euro 98, E10, Avgas) பயன்படுத்துகிறது லிபர்டி!

நெதர்லாந்தில் அசெம்பிள் செய்யப்படும் இந்த பறக்கும் காரின் பாகங்கள், பலநாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இத்தாலியில் லிபர்டியின் டிஸைன் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2009 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் இந்த காரின் மாதிரிகளைக் கொண்டு, டெஸ்ட்டிங் பணிகள் நடைபெற்றன.

''பல ஆண்டு உழைப்பிற்குப் பிறகு, தொழில்நுட்ப ரீதீயாகப் பல இன்னல்களைத் தாண்டியே, எங்களது அணி இந்தப் புதுமையான பறக்கும் காரைத் தயாரித்திருக்கிறது. உலகெங்கும் இவ்வகை கார்களுக்கு இருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியே லிபர்டியை வடிவமைத்துள்ளோம்'' என PAL-V நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Robert Dingemanse கூறியுள்ளார். இந்த காரின் வீடியோ உங்கள் பார்வைக்கு.
நன்றி
விகடன்.