பணப்புழக்கம் குறைவால் விலை வீழ்ச்சி: வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
பணப்புழக்கம் முடங்கியதால், பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதற்கு அனைத்து தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.செல்லாத ரூபாய் நோட்டுகளை நவ.,8ல், பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு முன்னதாக நாட்டில் அழுகும், நீண்ட நாட்கள் கெடாமல் உள்ள, அனைத்து பொருட்கள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், பண்டங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. நவ.,8க்கு பின் நிலைமை தலைகீழ் ஆனது. பருப்பு, பயிறு வகைகள், உணவு பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. விலை வீழ்ச்சி நம்ப முடியாத அளவுக்கு இருப்பதால், மக்கள் மட்டுமின்றி வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.அதே சமயம், வணிகம் முடங்கி வருகிறது. இதனால் விலை வீழ்ச்சி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.ஈரோடு மாவட்ட தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன் கூறியதாவது: பணப்புழக்கம் இல்லாததே பொருட்களின் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். உற்பத்தியான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.
உணவு பொருட்களை, நீண்ட நாட்களுக்கு இருப்பு வைக்க முடியாது. முன்பு, 60, 90 நாட்கள் கடனுக்கு பொருட்களை வாங்கி சென்றனர். தற்போது வாரம், 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே, வங்கியில் எடுக்க முடிகிறது. இதனால் ' கேஷ்-அண்ட்-கேரி' என்ற நிலையில் வியாபாரம் நடக்கிறது.
இதனால், விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அழுகும் தன்மை கொண்ட பொருட்களை, நீண்ட நாட்களுக்கு வைக்க முடியாது என்பதால், விற்றால் போதும் என்ற எண்ணத்தில், குறைந்த லாபத்தில் விற்கின்றனர். தற்போதுள்ள விலை வீழ்ச்சி தற்காலிகமானது தான். உள்நாட்டு உற்பத்தி விகிதம், 7.6 சதவீதத்தில் இருந்து, 7.2 சதவீதமாக குறைந்துள்ளது.