வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் மூலம் விரைவான நடவடிக்கை எடுத்து இலங்கை பிடியில்...

வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் மூலம் விரைவான நடவடிக்கை எடுத்து இலங்கை பிடியில்...

சென்னை,

வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் மூலம் விரைவான நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் நான் தொடர்ந்து தங்களுக்கு கோரிக்கை விடுத்ததை ஏற்று, தகுந்த நடவடிக்கைகளை எடுத்ததற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக, அந்த 51 மீனவர்கள் விடுவிக்கப்படும் நடவடிக்கை முழுமையாக முடிவடைந்து, அவர்கள் இந்திய நாட்டிற்குள் வருவதற்குள், இலங்கை கடற்படையினர் ஏற்றுக்கொள்ள முடியாத தந்திரங்களை பயன்படுத்தி, பாரம்பரிய கடற்பகுதியான, பாக் ஜலசந்தியில் அமைதியான முறையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் சிலரை கைது செய்துள்ளனர்.

எந்திர படகுகளில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்களையும், ராமேசுவரத்தை சேர்ந்த மற்றொரு 4 மீனவர்களையும் 8–ந்தேதி (நேற்று) அதிகாலையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த 10 மீனவர்களும், அவர்களது படகுகளும், இலங்கையில் உள்ள காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் பகுதிகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் அடிக்கடி இதுபோல் இலங்கை கடற்படையினரால் கைது செய்வது தமிழக அரசுக்கு கடுமையான கவலையை ஏற்படுத்துகிறது. கடந்த 2016–ம் ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினர் நடத்திய 38 கைது சம்பவங்கள் மூலம், 290 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதும், 53 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதும் தாங்கள் நன்கு அறிவீர்கள். அதனை தொடர்ந்து, மரியாதைக்குரிய எங்களது தலைவர், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்த தீவிர நடவடிக்கையினால் 290 மீனவர்களும் இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த 290 மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள், மீன்பிடி வலைகள் இன்னும் இலங்கை அரசு விடுவிக்காமல் உள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இலங்கை அரசு இப்படி ஒரு வஞ்சனை உத்தியை பின்பற்றுகிறது என்று ஏற்கனவே எங்களது பாசத்துக்குரிய தலைவர் ஜெயலலிதா சுட்டிக்காட்டி இருந்தார். இலங்கை அரசின் இந்த செயல், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போலவும், மனவேதனையை தரும் விதமாகவும் உள்ளது.

இலங்கை பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் 118 படகுகள், பராமரிக்கப்படாமல் அழியும் நிலையில் உள்ளது. இந்த படகுகள் எல்லாம் 2 வடகிழக்கு பருவ மழையில் நனைந்து, சிதைந்த நிலையில் உள்ளது. அதனால் தான் எங்களது மரியாதைக்குரிய தலைவர் ஜெயலலிதா, அந்த படகுகளை எல்லாம் பிடிபடும்போது இருந்த அதே நிலையில் உடனடியாக மீட்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

மேலும், பாக் ஜலசந்தியில், இந்தியா – இலங்கை கடல் எல்லை குறித்த சர்வதேச விவகாரம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. 1974–ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே செய்துக் கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து எங்களது பாசத்துக்குரிய தலைவர் ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் ஏற்கனவே தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், பின்னர் ஒரு மனுதாரராக தமிழக அரசு இணைந்து கொண்டது.

மேலும், ஆழ்கடல் மீன் பிடி மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.1,650 கோடி விரைவாக ஒதுக்கவேண்டும் என்றும், இதனால் தமிழக மீனவர்களின் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும் என்றும் மத்திய அரசுக்கு எங்களது மரியாதைக்குரிய தலைவர் ஜெயலலிதா, பலமுறை கோரிக்கையை முன்வைத்தார். கடந்த டிசம்பர் மாதம் 19–ந்தேதி தங்களை நான் சந்தித்தபோது, மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தினேன்.

எனவே, தற்போது மத்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் மூலம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கையில் இருக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தங்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.