பொங்கல் இருந்தால்தானே ஜல்லிக்கட்டு கேட்பார்கள்.. மத்திய அரசின் கேம்

பொங்கல் இருந்தால்தானே ஜல்லிக்கட்டு கேட்பார்கள்.. மத்திய அரசின் கேம்


டெல்லி: ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாள் அன்று கட்டாய பொதுவிடுமுறை என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் திருநாளன்று விருப்ப விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. தேவைப்படும் பகுதிகளில் மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும் என்பதே இந்த அறிவிப்பு சொல்லும் சேதி.
பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். ஆனால் காளையை காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்ததன் விளைவாக இப்போது ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், பொங்கலுக்கான கட்டாய விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. "பொங்கல் என்று ஒன்று இருந்தால்தானே, ஜல்லிக்கட்டு கேட்டு போராடுவீர்கள், அந்த பொங்கலே இல்லைன்னா.." என்று நகைச்சுவை நடிகை ஆர்த்தி பேசும் டோனில் கூறியுள்ளது மத்திய அரசு.
ஜல்லிக்கட்டு பஞ்சாயத்துக்கே விடிவு பிறக்காத இந்த சூழலில், இப்போது பொங்கலுக்காகவும் பொங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் தமிழர்கள். இதன் மூலம் ஜல்லிக்கட்டு குறித்த சர்ச்சை, அது தொடர்பான விவாதம் நீர்த்துப்போக வாய்ப்புள்ளது. எப்படியும் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி செய்யப்போவதில்லை என்றபோதிலும், குறைந்தபட்சம் மக்களின் கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு ஆடும் சதுரங்க வேட்டை இதுவோ என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
"ஒருவேளை பொங்கல் தொடர்பான இந்த உத்தரவை தமிழகத்தின் எதிர்ப்பை தொடர்ந்து அரசு வாபஸ் வாங்கலாம். அப்போது தமிழர் நலன் காத்த கட்சி என்ற நல்ல பெயரை செயற்கையாக ஏற்படுத்திக்கொண்டு, ஜல்லிக்கட்டு நடத்தாமல் விட்ட அவப்பெயரிலிருந்து ஓரளவுக்கு பாஜக தப்பலாம், என்பதே திட்டமாக இருக்கும்" என்று தெரிவிக்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.