வாஸ்துவும் வர்ணங்களும்.. வீட்டிற்கு எந்தெந்த நிறங்களை பூச வேண்டும்..!

வாஸ்துவும் வர்ணங்களும்.. வீட்டிற்கு எந்தெந்த நிறங்களை பூச வேண்டும்..!

 நாம் காதால் கேட்டு புரிந்து கொள்வதை விட கண்களால் பார்ப்பது நம் மனதில் எளிதிலும் ஆழமாகவும் பதியும். அதனால் தான் நம் பாடத்திட்டத்தில் கூட, நாம் படிப்பதை நாமே செய்து பார்த்து புரிந்து கொள்ள கற்றுக்கொடுக்கின்றனர்.
நம் கண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சக்தி, அதில் பதியும் பிம்பத்தை அப்படியே மனதில் நிறுத்திக்கொள்ளும். பின்னொரு சமயத்தில் அந்த பிம்பத்தின் பெயரை கேட்டாலே நம் கண்முன் அந்த பிம்பமே வந்து செல்லும். அதுவே எதையும் காட்சிப்படுத்தும் சக்தி என்பது....
இதை எதற்காக கூறுகிறேன் என்றால் நம்மை படைத்த கடவுள் எல்லா பொருட்களும் கருப்பு வெள்ளையாக இருந்தால் நமக்கு சலிப்பு தட்டிவிடும் என்று எண்ணியோ என்னவோ அனைத்தையும் பல வர்ணங்களாக்கியுள்ளான்.

நம் கண்கள் வர்ணங்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமல் நமக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. அதிலும் நமக்கு ஒவ்வொரு வர்ணத்தை பார்க்கும் பொழுதும் வெவ்வேறு விதமான உணர்வுகள் உண்டாகின்றன.
எடுத்துக்காட்டாக பூந்தோட்டத்தை பார்க்கின்றபோது கிடைக்கின்ற மகிழ்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளை பார்க்கின்ற போது கிடைக்கின்ற மகிழ்ச்சி, நீர் வீழ்ச்சியை பார்க்கின்ற போது கிடைக்கின்ற புத்துணர்வு என வெவ்வேறு மனநிலை தோன்றும்.
இதுபோன்ற உணர்ச்சிகள் நம் வீட்டிலும் நமக்கு ஏற்படுகின்றது. நம் வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு உணர்வு நிலை உள்ளது. அதை சரியாக வெளிப்படுத்துவதும், தவறாக வெளிப்படுத்துவதும் நாம் அதற்கு பூசும் வர்ணங்களே தீர்மானிக்கின்றன.
பொதுவாக நாம் எல்லா அறைகளுக்கும் ஒரே நிறத்தையே எப்போதும் பூசுவது உண்டு. அப்படி செய்யும் பொழுது ஒரே மாதிரியான மனநிலை நமக்கு ஏற்படும். ஆனால் நாம் வேலை செய்யும்போது இருக்கும் மனநிலை உறங்கும்போது தேவையில்லை. அதேபோல சமைக்கும்போது இருக்கும் மனநிலை படிக்கும் போது தேவையில்லை. இதை சரிசெய்வதே அங்கு நாம் பூசும் நிறங்கள்.
சரி, அப்படியானால் எந்தெந்த அறைக்கு எந்தெந்த நிறங்கள் பூச வேண்டும் என்று பார்ப்போம். கட்டிடத்தின் வெளிப்பகுதிக்கு வெள்ளை அல்லது வெளிர் மஞ்சளே சிறந்தது. கட்டிடத்தின் உள்ளே வரவேற்பறைக்கு Off White என கூறப்படும் வெள்ளை நிறமும், படுக்கை அறையின் உள் சுவற்றிற்கு வெளிர் ஊதா நிறமும், சமையலறையின் உள் சுவற்றிற்கு வெளிர் ஆரஞ்சு நிறமும், படிக்கும் அறையின் உள் சுவற்றிற்கு வெளிர் பச்சை நிறமும் சிறப்பானவையாக இருக்கும். வீட்டின் வர்ணங்களை கொண்டு எண்ணங்களைத் தீட்டுவோம்....!

இன்றைய மருத்துவ சிந்தனை நாயுருவி

இன்றைய மருத்துவ சிந்தனை நாயுருவி

இன்றைய மருத்துவ சிந்தனை நாயுருவி


நாயுருவி இலையை உலர்த்திப் பொடி செய்து , தினமும் இருவேளை இரண்டு கிராம் அளவுக்குப் பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்த்தொற்று, இதய வால்வுகளில் கொழுப்பு படிதல், இதயச் செயல்திறன் குறைவு போன்ற பாதிப்புகள் தீரும்.

நாயுருவி விதையை (10 கிராம்) பொடி செய்து, துத்திக் கீரையோடு சேர்த்துக் கொதிக்கவைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

நாயுருவி இலையை அரைத்துச் சாறு எடுத்து, உடலில் பூசிக்கொண்டால் தேமல், படை போன்றவை குணமாகும்.

நாயுருவி இலையுடன் ஜாதிக்காயைச் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவிவந்தால் தேமல் மறையும்.

நாயுருவி செடியின் விதைகளைக் காயவைத்து இடித்துப் பொடி செய்து சலித்துக்கொள்ளவும். இதை தினமும் இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

நாயுருவிச் செடியைப் பறித்து தண்ணீரில் போட்டுக் காய்ச்சி இறக்கி பாட்டிலில் ஊற்றிவைத்து ,தினமும் காலையில் மட்டும் குடித்துவந்தால் வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

நாயுருவிச் செடியின் இலைகளை இடித்துச் சாறு எடுத்து காதில் இரண்டு துளிகள் விட்டால், காதில் சீழ் வடிவது நிற்கும்.

KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

விரைவில் வருகிறது யூடியூப் டிவி. கேபிள் ஆபரேட்டர்கள் கலக்கம்

விரைவில் வருகிறது யூடியூப் டிவி. கேபிள் ஆபரேட்டர்கள் கலக்கம்


வீடியோ இணையதளங்களில் உலகின் நம்பர் ஒன் அந்தஸ்தில் இருக்கும் யூடியூப் இணையதளம், அடுத்தகட்டமாக தொலைக்காட்சி சேவையில் இறங்கவுள்ளது.

இதன்படி புதிய சேனல் ஆபரேட்டர் சேவையை யூடியூப் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதில் அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் மாதம் $35 செலுத்தி இணைந்து வருகின்றன. இதுவரை கேபிள் ஆபரேட்டர்களிடம் குறிப்பிட்ட தொகை செலுத்தி ஒளிபரப்பாகி வந்த முன்னணி தொலைக்காட்சிகள் இனி யூடியூப் ஆபரேட்டர் மூலம் ஒளிபரப்பாகும். அதுமட்டுமின்றி செட் ஆஃப் பாக்ஸ் வசதி போல,இந்த யூ டியூப் வசதியில் நிகழ்ச்சிகளை பதிவு செய்து ஓய்வு நேரத்தில் பார்க்கும் வசதியும் இருப்பதால் வாடிக்கையாளர்கள் பெரும் அடைவர்

யூடியூப் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் அமெரிக்காவின் கேபிள் ஆபரேட்டர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து இந்தியா உள்பட முக்கிய நாடுகளிலும் யூடியூபின் இந்த சேவை எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷை மகன் என்று உரிமை கோரிய வழக்கு: மரபணு சோதனை நடத்தக் கோரி மேலூர் தம்பதியர் புதிய மனு

நடிகர் தனுஷை மகன் என்று உரிமை கோரிய வழக்கு: மரபணு சோதனை நடத்தக் கோரி மேலூர் தம்பதியர் புதிய மனு

நடிகர் தனுஷுக்கு மரபணு பரிசோதனை நடத்தக் கோரி, மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதை சரிபார்க்க ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஆஜரான தனுஷின் உடலில் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதனிடையே, நடிகர் தனுஷுக்கும், தனக்கும் மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நடிகர் தனுஷ் என்னுடைய மகன் என்பதற்கு போதிய ஆதாரம் உள்ளது. அவரை 11-ஆம் வகுப்பு வரை நான் படிக்க வைத்தேன். இந்நிலையில், அவரது தற்போதைய சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, உண்மையான பெற்றோராகிய எங்களை அவரது பெற்றோர் இல்லை என்று மறுத்து வருகிறார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் தாக்கல் செய்த பிறப்புச் சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றுகள் போலியானது. இத்தகைய சூழலில் மரபணு சோதனை நடத்தினால் மட்டுமே இருவருக்கும் இடையேயான உறவை துல்லியமாக கண்டறிய முடியும். எனவே, எனக்கும், நடிகர் தனுஷுக்கும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ஜியோவின் அடுத்த அதிரடி

ஜியோவின் அடுத்த அதிரடி

புதுதில்லி: ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் வழங்கிய Happy New Year பிளான் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து கடந்த புதன்கிழமை ஜியோ ப்ரீமியம் மெம்பர்ஷிப் பிளான்களை அறிவித்துள்ளது.

ப்ரீமியம் மெம்பர்ஷிப்பிற்கு ஒருவருடத்திற்கு ரூ.99 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இத்துடன் 303 ரூபாய் செலுத்தினால் 28 நாட்கள் வேலிடிட்டியில் ஜியோ வாடிக்கையாளர்கள் தற்போது உள்ள இலவச சலுகைகளை அப்படியே பெறலாம். 303 ரூபாய் திட்டத்தின் படி ஒரு நாளை 1 ஜிபி மாதத்திற்கு 28 ஜிபி கிடைக்கும். 1 ஜிபி முடிந்துவிட்டால், 128 kps வேகம் மட்டுமே ,303 ரூபாய் பிளான் படி 1 ஜிபி ஒரு நாளைக்கு உங்களுக்கு போதவில்லையா?

தினசரி 1ஜிபி இலவச டேட்டா உங்களுக்கு போதவில்லையென்றால், நீங்கள் 499 ரூபாயில் ஜியோ ப்ரீமியம் பிளானை பயன்படுத்தலாம். இதன் படி ஒரு நாளைக்கு 2ஜிபி 4 ஜி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கும். ஃப்பரே ஆகாமல் முழு அன்லிமிடெல் இண்டர்நெட் வேண்டுமானால் ரூ.999 பிளான் உள்ளது. 60 ஜிபி 4 ஜி டேட்டா 60 நாட்கள் வேலிடிட்டி உடையது.

இது தவிர ரூ.1999, ரூ.4999, ரூ.9999 ஆகிய பிளான்கள் முறையே 90, 180, 360 நாட்கள் வேலிட்டிட்டியுடன் முறையே, 125 ஜிபி, 350 ஜிபி, 750 ஜிபி டேட்டாக்கள் எவ்வித ஃப்பரும் ஆகாமல் முழுமையாக கிடைக்கும்.

ஜியோ ப்ரீமியம் பிளான் இல்லையென்றாலோ, அல்லது இடையில் டேட்டா தீர்ந்து விட்டாலோ பூஸ்டர் பேக்கை பயன்படுத்தலாம். ரூ.11 முதல் 301 வரை பிளான்கள் உள்ளது. முறையே 0.1 ஜிபி முதல் 10 ஜிபி டேட்டா வரை கிடைக்கும்.

உன்னால் முடியும்: வேலை வாய்ப்பு அதிகம் உள்ள தொழில்

உன்னால் முடியும்: வேலை வாய்ப்பு அதிகம் உள்ள தொழில்


சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் பிரபாகர். படித்தது பத்தாம் வகுப்பு. ஆனால் இன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப் பளிக்கும் வெற்றிகரமான தொழில்முனை வோராக உள்ளார். செல்லப்பிராணிகள், வளர்ப்பு மீன்களுக்கான உணவு தயாரிப்பு தொழிலில் உள்ள இவரது அனுபவத்தை இந்த வாரம் ‘வணிக வீதி’க்காக பகிர்ந்து கொண்டார்.
சிறு வயதிலிருந்தே பறவைகள் மீதான நாட்டத்தினால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. பத்தாம் வகுப்புக்கு பிறகு சில நாட்கள் வளர்ப்பு பறவைகள், மீன்கள் என நாட்கள் கழிந்தன. 22 வயதில் எழும்பூரில் சின்ன இடத்தில் வண்ண மீன் விற்பனையகம் ஆரம்பித்தேன். ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். தினசரி அதிகபட்சமாக ரூ. 200 -க்கு விற்பனையாவதே அதிசயம். மீன் குஞ்சுகள் மற்றும் அவற்றுக்கான உணவை வாங்க அடிக்கடி சென்னை கொளத்தூர் பகுதிக்குச் செல்வேன். அப்படி கிடைத்த தொடர்பை வைத்து, மீன் உணவை வாங்கி விற்பனை செய்ய தொடங்கினேன். சில்லறையாக விற்கத் தொடங்கி அதில் கிடைத்த லாபத்தால் ஒரு கட்டத்தில் மொத்த விற்பனையாளராக மாறினேன். எட்டு ஆண்டுகள் இந்த தொழிலில் இருந்த வகையில் இவற்றை வெளிநாடுகளிலிருந்தே நானே நேரடியாக இறக்குமதி செய்து விற்கும் அளவு வளர்ந்திருந்தேன்.
வளர்ப்பு பறவைகள், மீன், மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவு தயாரிப்பாளர்கள் இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளனர். அதுவும் தமிழ்நாட்டில் ஒருவர்கூட இல்லை. அதனால் எனக்கு இந்த தொழிலில் தயாரிப்பாளராக இறங்க தைரியம் வந்தது. ஏனென்றால் அப்போது நான் மாதத்துக்கு 3 டன் உணவுகளை விற்பனை செய்யும் அளவுக்கான மார்க்கெட்டை வைத்திருந்தேன்.
சீனா, தைவான் போன்ற நாடுகளில் எனக்கு இருந்த தொடர்புகள் மூலம் 2002ம் ஆண்டு இயந்திரங்களை வரவழைத்தேன். உணவு தயாரிப்பு தொழில்நுட்பத்துக்காக ஒரு அமெரிக்க நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டேன். அந்த நிறுவனம் உணவு கலவை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை கவனித்துக் கொள்வார்கள். வளர்ப்பு பிராணிகள் கண்காட்சிகளில் கலந்து கொண்டு காட்சிப்படுத்தி வெளிநாட்டு ஆர்டர்களைப் பிடித்தேன்.
சர்வதேச அளவில் சீனாவில் ஒரு கண்காட்சி நடக்கும். அதில் 900 கடைகள் சீனர்களுடையதாக இருக்கும். 100 பேர்தான் வெளிநாட்டவர்கள் இருப்பார்கள். அதிலும் இந்தியாவிலிருந்து ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இருப்போம். நாம் கொடுக்கும் விலை குறைவாகவும், தரமாகவும் இருக்கும் என்பதால் சர்வதேச ஆர்டர்கள் கிடைத்து விடும். இதன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாளராக உருவானேன். ஆரம்பத்தில் எனக்கு சிங்கப்பூரிலிருந்து மீன் உணவை அனுப்பி வைத்த நிறுவனத்துக்கு இப்போது நான் எனது தயாரிப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு தயாரிப்புக்கு பின்னாலும் பல மாதங்கள் உழைக்க வேண்டும். பறவைகள் உணவு என்றால் எந்த பறவை, எந்த தானியத்தை விரும்பி உண்ணும் என்கிற புரிதல் வேண்டும். இவையெல்லாம் அனுபவத்தில் கிடைக்கும் என்றாலும் வெளிநாட்டு தயாரிப்புதான் தரமான இருக்கும் என்று நினைக்கும் இங்குள்ளவர்களின் மனநிலையையும் மாற்ற வேண்டிய சவால் எனக்கு இருந்தது. ஏனென்றால் இங்கு நான் தயாரித்து பத்து ரூபாய் குறைவாக கொடுத்தாலும் வாங்க தயாராக இல்லை. இப்போதும் எனக்கான போட்டியாளர்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்பவர்கள்தான். இதனால் எனது பிராண்டு பெயர், பேக்கிங் முறை உள்பட அனைத்தும் வெளிநாட்டு தயாரிப்புகளைப் போலவே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
மாதத்துக்கு மூன்று டன் சந்தையை மட்டுமே வைத்திருந்த நான், 100 டன் உற்பத்தி திறனுக்கு தொழிலை தொடங்கினேன். ஆரம்பத்தில் மூன்று நாட்கள்தான் வேலை நடக்கும். பிறகு ஆறு நாட்கள், பத்து நாட்கள் என வேலைகள் அதிகரித்து இப்போது மாதத்துக்கு 100 டன் என்கிற இலக்கை எட்டியுள்ளேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் 100 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளேன். வங்கிகளும் கடன் தர தயாராக இருக்கின்றன. அடுத்ததாக 1000 டன் உற்பத்தி இலக்கில் தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.
உற்பத்தி துறை சார்ந்த நிறுவனமாக நான் முறைப்படுத்தப்பட்டிருந்தாலும், எனது தயாரிப்புகளை பயன்படுத்தும், வாங்கி விற்கும் கடைகள், வளர்ப்பு பறவை, மீன் விற்பனை தொழில் இன்னும் முறைப்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. இதை முறைப்படுத்தினால் பலருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது என் கருத்து. அரசு அமைப்புகள் இதை கவனிக்க வேண்டும் என்பதும் என் கோரிக்கை என்று முடித்தார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களா நீங்கள்? பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்களா நீங்கள்? பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு


வெளிநாடு வாழ் இந்தியர்களா நீங்கள் ? பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்குவதை வங்கிகள் நிறுத்திக் கொண்டன.இதனையடுத்து ரிசர்வ் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அந்த திட்டமும் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதியில் இருந்து டிசம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்த என்.ஆர்.ஐ.கள் மற்றும் அப்போது வெளிநாட்டுக்கு சென்றிருந்த இந்தியர்களுக்கு செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி வாய்ப்பளித்துள்ளது.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணிவரை செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் மார்ச் 31-ந்தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்த இந்தியர்கள், கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதிவரை வெளிநாட்டில் இருந்ததற்கான அத்தாட்சியாக பாஸ்போர்ட் நகல், இந்திய குடியுரிமை கட்டுப்பாட்டு அதிகாரி இடும் முத்திரை அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட்டின் கடைசி பக்கங்கள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியில் சம்ர்ப்பிக்க வேண்டும்.
அடையாளச் சான்று ஆவணம் அல்லது ஆதார் அட்டை,வருமான வரிக்கணக்கு எண் அட்டையின் நகல், நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரையிலான வங்கிக் கணக்குகளின் நகல்கள் ஆகியவற்றை வங்கியில் காட்ட வேண்டும்.
என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி வரை வெளிநாட்டில் இருந்ததற்கான அத்தாட்சியாக பாஸ்போர்ட் நகல், இந்திய குடியுரிமை கட்டுப்பாட்டு அதிகாரி இடும் முத்திரை அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட்டின் கடைசி பக்கங்கள் ஆகியவற்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி வாய்ப்பளித்துள்ளது.

சிறையில் சசிகலா என்ன செய்கிறார்? - ருசிகர தகவல்...

சிறையில் சசிகலா என்ன செய்கிறார்? - ருசிகர தகவல்...


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தினமும் காலையில் தியானம் செய்வது, துளசி மாடத்தை வழிபடுவது, அவ்வப்போது குட்டித் தூக்கம், டிவி பார்த்து பொழுதை கழித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 16 ஆம் தேதி அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாளில் சலுகைகளை வழங்க மறுத்தது. ஆனால் தற்போது சசிகலாவுக்கு சிறிது சிறிதாக ஒவ்வொரு சலுகையாக சிறை நிர்வாகம் அளித்து வருகிறது.
இதனிடையே சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஒவ்வொரு நாளையும் எப்படி கழிக்கிறார் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாள்தோறும் காலை 5 மணிக்கு சிறையில் எழுந்துகொள்ளும் சசிகலா, காலை கடன்களை முடித்து விட்டு ஒரு மணிநேரம் அறையிலேயே அமர்ந்து தியானம் செய்கிறார்.
பின்னர் 6.30 மணிக்கு வெந்நீரில் சசிகலா குளிப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிறைக்குள் இருக்கும் அம்மன் கோயிலுக்கு இளவரசியோடு சென்று சாமி தரிசனம் பெறுகிறார். அங்கு ஏற்கனவே ஜெயலலிதா வைத்த துளசி மாடத்தையும் சசிகலா சுற்றி வருகிறாராம்.
பின்னர் செய்தித்தாள்களை படிக்கும் சசிகலா காலை 8.30 மணிக்கு டிபன் சாப்பிடுகிறார். இதைத்தொடர்ந்து இளவரசியும் சசிகலாவும் டிவி பார்க்கின்றனர்.
மதியம் 2 மணிக்கு மதிய சாப்பாட்டை சாப்பிடும் சசிகலாவும் இளவரசியும் பின்னர் ஒரு குட்டித் தூக்கம் போடுகின்றனராம். இதைத்தொடர்ந்து மீண்டும் டிவி பார்க்கும் இருவரும் 5 முதல் 6 மணி வரை தங்களின் உறவினர்களோடு பேசுகின்றனராம்.
இரவு 7.30 மணிக்கு இரவு சாப்பாட்டை முடித்து விடும் அவர்கள் 11 மணி வரை பேசிக்கொண்டு இருக்கின்றனராம். 11 மணிக்கு மேல் தான் இருவரும் தூங்கச் செல்கின்றனராம்.
இது சசிகலாவுக்கு தண்டனை கொடுத்த மாதிரி தெரியவில்லை. கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் சொகுசாக தங்கி இருந்தது போல், சசிகலா பெங்களூர் சிறையில் சொகுசாக இருக்கிறார் போலும்.

மாணவர்கள் வருகை: நெடுவாசலில் தீவிரமடையும் போராட்டம்

மாணவர்கள் வருகை: நெடுவாசலில் தீவிரமடையும் போராட்டம்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நெடுவாசல் பகுதிக்கு வந்ததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்தத் திட்டத்தை எதிர்த்து, கடந்த 10 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் இப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நெடுவாசல் பகுதியில் திரண்ட சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர், இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திட்டத்தை உடனே ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதேபோல, நெடுவாசல் அருகே கோட்டைக்காடு பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கக் கோரியும், அப்பகுதியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்றும் அப்பகுதி சிறுவர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுவாசலில் நடைபெற்றுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நெடுவாசல் போராட்ட களத்துக்கு வந்தனர். இதனால், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது. இதில் பங்கேற்றுள்ள மாணவர்கள், இளைஞர்கள் நெடுவாசலை மீட்காமல் வீடுவாசல் செல்லமாட்டோம் என்ற முழக்கங்களோடு போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு வணிகர் சங்கக் கூட்டமைப்பு தலைவர் வெள்ளையன், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சியைக் கண்ட பிறகே, பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பான விற்பனையை தடை செய்யும் துணிச்சல் வணிகர் சங்கத்துக்கு வந்தது. அந்த இளைஞர் பட்டாளம் நெடுவாசலையும் மீட்பதற்காக களம் இறங்கியுள்ளனர். அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று வெற்றி காண்பார்கள். பாலைவனப் பகுதியில் மேற்கொள்ளவேண்டிய எரிவாயு சோதனைகளை சோலைவனமாக காட்சிதரும் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஏன் செய்யவேண்டும். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் பெரும் பகுதி விவசாயத்தை அழிக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்றார்.
நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலங்களைப் பார்வையிட்ட திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே பேசியது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலியில் நிலக்கரி இருப்பது கண்டறியப்பட்டு ஒரு கிராமத்தில் மட்டும் நிலக்கரி எடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பிறகு இதுவரை நான்கு சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியைச் சுற்றியுள்ள 420 கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயமும், கால்நடைகளும் அழிந்தன. அப்போது மக்கள் விழிப்புணர்வு பெறாத நிலையில், வேலைவாய்ப்பு பெருகும் என சிலர் கூறிய பொய் வாக்குறுதிகளை நம்பி திட்டத்தை அனுமதித்து தங்களது வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர்.
நெடுவாசல் பகுதியில் மட்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப் போவதாக மத்திய அறிவித்திருந்தாலும், அது நெடுவாசல் விவசாயிகளை மட்டும் பாதிக்காது. சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமத்திலும் விவசாயம் அழியும். இதனால், இத்திட்டத்தை இப்பகுதியில் அனுமதிக்கக் கூடாது என்றார்.