வேட்டவலத்தில் துணிகரம்: கோவில் சுவரில் துளை போட்டு பச்சை மரகதலிங்கம் கொள்ளை

வேட்டவலத்தில் துணிகரம்: கோவில் சுவரில் துளை போட்டு பச்சை மரகதலிங்கம் கொள்ளை

வேட்டவலத்தில் துணிகரம்

வேட்டவலம்,
கோவில் சுவரில் துளை போட்டு விலை மதிப்பற்ற பச்சை மரகதலிங்கம், தங்கத்தாலி, வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
மலை மீது அம்மன் கோவில்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் மலை மீது மனோன்மணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை வேட்டவலம் ஜமீன் குடும்பத்தினர் பராமரித்து வருகிறார்கள். தினமும் காலை 9 மணி, மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விலைமதிப்பற்ற பச்சை மரகதலிங்கம் மற்றும் மனோன்மணி அம்மன் மற்றும் பிற சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறுவது வழக்கம்.
மார்கழி மாதம் மட்டும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். கோவில் குருக்களாக கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 55) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை சண்முகம் கோவிலில் பூஜை செய்து விட்டு நடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று அதிகாலை 5 மணிக்கு பூஜை செய்ய சண்முகம் கோவிலுக்கு வந்தார். கோவிலின் நடை கதவை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது கோவிலின் பின்பக்க வாசல் திறந்து இருந்தது. மேலும் பூஜை பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் உடனடியாக மலையில் இருந்து கீழே இறங்கி ஜமீன்தார் மகேந்திர பந்தாரியாரிடம் தகவல் தெரிவித்தார்.
விலை மதிப்பற்ற மரகதலிங்கம் கொள்ளை
ஜமீன்தார் மகேந்திர பந்தாரியார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு கோவில் லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பச்சை மரகதலிங்கம், அம்மனுக்கு அணிவிக்கப்படும் வெள்ளி கிரீடம், வெள்ளி பாதம், வெள்ளி ஒட்டியாணம், மரகதலிங்கம் வைத்திருக்கும் வெள்ளி நாகபரணம், அம்மன் அணிந்திருந்த தங்கத்தாலி ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
மர்மநபர்கள் நள்ளிரவில் கோவில் பின்பக்க கதவின் அருகேயுள்ள சுவரில் துளை போட்டு உள்ளே வந்து, பின்னர் பின்பக்க கதவை திறந்து விலைமதிப் பற்ற மரகத லிங்கம், அம்மன் அணிந்திருந்த 8 கிராம் தங்கத்தாலி, 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 1987-ம் ஆண்டும் இதே போன்று கோவிலில் இருந்த மரகதலிங்கம் கொள்ளை போனதும், அதன்பின்னர் போலீசார் அதனை கண்டுபிடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.