'உதய்' திட்டத்தில் இணைந்தது தமிழகம்! ரூ.11 ஆயிரம் கோடி மிச்சமாக வாய்ப்பு

'உதய்' திட்டத்தில் இணைந்தது தமிழகம்! ரூ.11 ஆயிரம் கோடி மிச்சமாக வாய்ப்பு

புதுடில்லி: 'உதய்' மின் திட்டத்தில் தமிழகம் இணைந்ததால், 11 ஆயிரம் கோடி மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநில மின் வாரியங்களின் நிதி நெருக்கடியை சரி செய்ய, உதய் மின் திட்டத்தை, 2015 நவம்பரில், மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தில் கூறப்பட்ட, மின் கட்டணம் மாற்றியமைத்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை தளர்த்தும்படி, மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்காததால், உதய் திட்டத்தில் தமிழகம் இணையாமல் இருந்தது.
தமிழக மின் வாரியம், மத்திய அரசின், 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனங்களிடம், மின் திட்டங்களுக்கு கடன் கேட்டது. உதய் திட்டத்தில் இணையாததால் நிதி உதவி கிடைக்கவில்லை.

21வது மாநிலமாக தமிழகம்
இந்நிலையில், தமிழகத்தின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு முன்வந்ததால் உதய் திட்டத்தில் இணைய, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், உதய் திட்டத்தில், 21வது மாநிலமாக தமிழகம் இணைந்தது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கையெழுத்திட்டனர். இதனால், வட்டி செலவு மற்றும் மின் இழப்பு குறைப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கை மூலம் தமிழகத்துக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
15 ஆண்டுகளாக இருக்க வேண்டும்
ஒப்பந்தம் கையெழுத்தான போது, அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
மத்திய அரசு, உதய் திட்டத்தை அறிமுகம் செய்த போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், திட்டத்தில் சில மாற்றங்களை செய்யும்படி கேட்டார்.
அதில் முக்கியமானதாக, காலாண்டுக்கு ஒருமுறை, மின் கட்டணத்தை மாற்றியமைக்கும் பிரிவை நீக்க சம்மதித்தது. அத்துடன், தமிழக அரசு வெளியிடும் நிதி பத்திரங்களின் முதிர்வு காலம், 15 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு ஏற்றது. இதனால் தமிழக அரசு, உதய் திட்டத்தில் இணைய முடிவு செய்தது.
கடந்த, 2015 செப்., நிலவரப்படி, மின் வாரிய மொத்த கடன், 81ஆயிரத்து, 312 கோடி ரூபாய்; அதில், மின் பகிர்மானம் தொடர்பான கடன், 36 ஆயிரத்து, 833 கோடி ரூபாய். உதய் திட்டத்தில் பரிசீலிக்கப்படும் கடன் தொகை, 30 ஆயிரத்து, 420 கோடி ரூபாய். இதில், 75 சதவீத கடனான, 22 ஆயிரத்து, 815 கோடி ரூபாயை, தமிழக அரசு எடுத்து கொண்டு நிதி பத்திரங்களாக வெளியிடும்.
மீதமுள்ள, 25 சதவீத கடனான, 7,605 கோடி ரூபாய்க்கு, மின் வாரியம், கடன் பத்திரங்கள் வெளியிடும். தமிழக அரசு, 75 சதவீத கடனை ஏற்பதால் மின் வாரியத்துக்கு, ஆண்டுக்கு, 2,882 கோடி ரூபாய் வட்டி சேமிப்பு ஏற்படும். மின் வாரியம் கடன் பத்திரம் வெளியிடுவதன் மூலம் ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் வட்டி சேமிப்பு கிடைக்கும்.

2,500 கோடி ரூபாய் குறையும்
கடந்த, 2014 - 15ல், மின் வாரியத்தின் நிகர இழப்பு, 12 ஆயிரத்து, 756 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2015 - 16ல் எடுக்கப்பட்ட நடவடிக்கையால், 5,786 கோடி ரூபாயாக குறைந்தது. நடப்பாண்டில், 2,500 கோடி ரூபாய் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் ஏற்படுத்தாமல் இருக்க, வழி வகை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

ஆசீர்வதிக்கும் ஜெ.,
மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவை, சிலமாதங்களுக்கு முன் விமர்சித்திருந்த, மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல், தற்போது, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல், கடந்தாண்டு மார்ச்சில், 'தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, பலமுறை முயன்றும் என்னால் முடியவில்லை.
தமிழகம், ஒரு நாட்டுக்குள், இன்னொரு நாடாக உள்ளது' என, விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
'நாடு முழுவதும், 28 மாநிலங்களின் முதல்வர்களுடனும், அவர்களின் அமைச்சர்களுடனும், என்னால் எளிதாக பேச முடிகிறது. ஆனால், தமிழகத்தில், எந்த அமைச்சர்களையும் சந்திக்க முடியவில்லை' என, பியுஷ் கோயல் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று, மத்திய அரசின், 'உதய்' மின் திட்டத்தில், தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, பியுஷ் கோயல் பேசியதாவது:தமிழகத்தின் மறைந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், உதய் திட்டம் கையெழுத்தாகி உள்ளது.ஜெ., முதல்வராக இருந்த போது, அவரது அறையில் ஒருமுறை சந்தித்தேன்; மிக பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.
எதையும், நுண்ணறிவுடன், ஜெ., புரிந்து கொண்டார். உதய் மின் திட்டம் பற்றி, உடனே புரிந்து கொள்ள, நிபுணர்கள் கூட சிரமப்படுவர்; ஆனால், ஜெ., புத்தி கூர்மையுடன், எளிதில் எல்லா விஷயங்களையும் கிரகித்துக் கொண்டார்.
உதய் திட்டத்தால், தமிழகத்திற்கு கிடைக்கும் நலன்களை ஆர்வமுடன், ஜெ., கேட்டறிந்தார். அவ்விஷயத்தில், அறிவார்ந்த வகையில், இனிய வார்த்தைகளில், அவர் கூறிய கருத்துக்களை போன்று, எங்கள் கட்சி தலைவர்கள் கூட சொன்னதில்லை. தற்போது, உதய் திட்டத்தில் தமிழகம் கையெழுத்திடுவதை, விண்ணில் இருந்து, தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தையும், பிற அமைச்சர்களையும், ஜெ., ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார்; அவரை, தமிழகம் இழந்து தவிக்கிறது. அரசு நிறுவனங்கள், அவரை இழந்து வாடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.