இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க 10 வழிகள்

இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க 10 வழிகள்


இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கம், தங்களது அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்தபடிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு, உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும், மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே ரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். இயற்கையாக ரத்த அழுத்தம் குறைக்க, நாம் கடைப்பிடிக்கவேண்டிய 10 வழிமுறைகளைப் பார்ப்போம்.

காலையில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உடல்பருமன் அதிகரிக்க அதிகரிக்க சர்க்கரையின் அளவும், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். தினசரி காலையில் குறைந்தது 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். அதுபோல இயற்கையை ரசித்தபடியே 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. இதனால் நமது உடலின் எடை எப்போதும் கட்டுக்குள் இருக்கும். ரத்த அழுத்தமும் சீராக இருக்க உதவும்.

யோகா மற்றும் பிராணாயாமம்
ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தாலே உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து, ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். தினசரி யோகா, மற்றும் மூச்சுப்பயிற்சிகளைச் செய்வதால், உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தஅழுத்தம் சீராக இருக்கும்.
நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்கவும்!
சாலையோரக் கடைகளில் விற்கப்படும் சமோசா, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த தின்பண்டங்கள் சாப்பிடுவதை, முடிந்த அளவுக்குக் குறைத்துக்கொள்வது நல்லது. இதுபோன்ற கடைகளில் எண்ணெயை ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப சூடாக்குவதால் 'ட்ரான்ஸ்ஃபேட்' என்னும் அமில மாற்றம் நடைபெறும். இந்த எண்ணெய் நிறைந்த தின்பண்டங்களைச் சாப்பிடுவதால், ரத்தக்குழாயில் 'கெட்ட கொலஸ்ட்ரால்' படியத் தொடங்கிவிடுகிறது. இதனால், இதயக்குழாயில் சீரான ரத்த ஓட்டம் செல்லாமல் பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

கஃபைன், புகை, மது தவிர்க்கவும்!
இதயக்குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டியது அவசியம். சிகரெட்டில் உள்ள நிகோட்டின், மதுவில் உள்ள ஆல்கஹால், டீ, காபி ஆகியவற்றில் உள்ள கஃபைன் ஆகியவற்றால், இதயக்குழாயில் பாய்ந்து செல்லும் ரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கும். இதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம், படபடப்பு, திடீர் தலைசுற்றல், வியர்வை வழிதல் ஆகியவை ஏற்படும்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவும்!
உணவைப் பதப்படுத்தும்போது, சோடியம் உப்பு அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட, உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கட்டாயம் தவிர்ப்பது நல்லது. குழம்பு, ரசம், காய்கறிகள் ஆகிய உணவுகளில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 1,500 மி.லி கிராம் அளவுக்கு உப்பு (ஒரு டீஸ்பூன் அளவு உப்பு) மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும்!
உடல் எடையைக் குறைக்க ஜாக்கிங், காலை நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள், யோகா, பிராணாயாமம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் ஆகியவற்றைச் செய்வதுடன் அவ்வப்போது, எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவற்றைச் சோதித்துப் பார்த்து குறைத்துக்கொள்வது நல்லது. தொப்பை போடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

சத்தான உணவுகளைச் சாப்பிடவும்!
தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் மற்றும் சிறுதானிய உணவு வகைகள் ஆகியவற்றை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக அவகேடோ, பொட்டாசியம் நிறைந்த புரோக்கோலி, வாழைப்பழங்களைச் சாப்பிடுவதால் ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்!
எண்ணெயில் பொரித்த சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். இவற்றைச் சாப்பிடுவதால், ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இது இதய ரத்தக்குழாயின் உட்பகுதியில் படிந்து, நாள்பட நாள்பட இறுக ஆரம்பித்துவிடும். இதனால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். புரதச்சத்து சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், அசைவ உணவுகளில் எண்ணெய், உப்பு, காரம் ஆகியவற்றை அளவாக சேர்த்து சாப்பிடலாம். அசைவம் சாப்பிடாதவர்கள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், பருப்பு - பயறு வகைகளைச் சாப்பிடலாம்.

மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யவும்!
ஒவ்வொருவருக்கும் ஒருவித குழந்தைத்தனம், குறும்புத்தனம் மறைந்திருக்கும். வயதாக ஆக, குடும்பப் பொறுப்புகள் மற்றும் சமூக அந்தஸ்து காரணமாக அவற்றை விட்டு நாம் விலகி வெகுதூரம் வந்திருப்போம். குழந்தைகளுடன் விளையாடுவது, நடனம் ஆடுவது, உற்சாகக் கூச்சலிடுவது, குதிப்பது போன்ற செயல்களால் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோனான செரோடொனின் அதிகம் சுரக்கும். இதனால், மனம் லேசாகி ரத்த அழுத்தம் சீராகும்.

லாஃப்டர் தெரப்பி
மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேலை நாடுகளில் 'லாஃப்டர் தெரப்பி' மூலம் சிகிச்சை அளிக்கிறார்கள். இப்போது நம் ஊர்களிலும் இது பிரபலமடையத் தொடங்கிவிட்டது. காலையில் வாக்கிங் முடித்து, பலர் ஒரே இடத்தில் கூடி, சிரித்து தங்கள் மனஅழுத்தத்தைப் போக்கிக்கொள்ளலாம். லாஃப்டர் தெரப்பியோடு, வீட்டில் பிடித்த நகைச்சுவைக் காட்சிகளை கண்டு களிப்பது, புத்தகம் படிப்பது, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பேசிப் பழகுவது எல்லாம் பலன்களைத் தரும். ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் சிரிப்பதால், மனஅழுத்தம் குறைந்து, ரத்த அழுத்தம் சீராகும். சிரிக்கும்போது நமக்குத் தெரியாமலேயே அதிகமாக சுவாசிப்பதுடன், அதிகமான ஆக்ஸிஜனையும் உள்வாங்குகிறோம். இதனால் ரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் உடனடியாகக் குறைகிறது.

24 X 7 ராணுவப் பாதுகாப்பில் இருக்கும் வெள்ளை காண்டாமிருகம்! ஏன்?

24 X 7 ராணுவப் பாதுகாப்பில் இருக்கும் வெள்ளை காண்டாமிருகம்! ஏன்?


கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவின் ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்பகம்தான் ஆடுகளம். ஆப்பிரிக்காவின் கை தேர்ந்த வேட்டைக்காரர்களின் பார்வை எப்போதும் இந்த காப்பகம் மீதுதான். கென்ய அரசு ராணுவம், சுற்றுசூழல் போராளிகள் ஆகியோரின் ஏக்கமும் இந்த காப்பகம் மீதுதான். இவை அனைத்திற்கும் காரணம், சூடான் என்னும் வெள்ளை காண்டாமிருகம். எந்நேரமும் வேட்டையாடப்படலாம் என்ற பயத்துடனும், அதே சமயம் ராணுவ வீரர்களின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறது இந்த சூடான். இத்தனை பெரிய களேபரங்களுக்கும், சூடான் மீதான கவனத்திற்கும் காரணம் என்ன தெரியுமா? இதுதான் ஆப்பிரிக்க வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் இனத்தின் கடைசி ஆண் காண்டாமிருகம். வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையே உலகில் மொத்தம் மூன்றுதான். அதில் இரண்டு பெண்கள். ஒரு வேளை வேட்டைக்காரர்களின் துப்பாக்கி இந்த சூடானையும் சுட்டு விட்டால் இந்த பூமியில் இனி இந்த இனமே கிடையாது. இருக்கும் வரை கொன்றுவிட்டு இறுதியில் அழுவதுதானே மனித இயல்பு? அதுதான் இந்த காண்டாமிருகங்களின் கதையும்.
கொம்புகளுக்காக அழிக்கப்பட்ட இனம்:
இந்த வெள்ளை காண்டாமிருகங்களை பொறுத்தவரை இயற்கையில் எந்த விலங்காலும் வேட்டையாடப்படும் பாதிப்பு கிடையாது. ஆப்பிரிக்க யானைக்கு அடுத்து நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது இந்த வகை காண்டாமிருகங்கள். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை தேர்ந்தெடுத்து மந்தையாக வாழும் இவை தங்களுக்குள்ளேயே சண்டையிட்டோ, நோய்வாய்ப்பட்டோ, வயதாகியோ மட்டுமே இறக்கும். ஆனால் அதன் முதல் எதிரியே மனிதனாகி போனதுதான் சோகம். இதன் பலம் ,பலவீனம் இரண்டுமே இதன் கொம்புதான். தற்காப்புக்காக இயற்கையாக அமைந்த இந்த கொம்புகளே, மனிதனிடம் பலியாக காரணமாகி விட்டது. இதன் இன்னொரு பலவீனம் இது அமைதியான விலங்கு. சிறுத்தை,புலி,சிங்கம் போன்று மனிதனை பார்த்தவுடன் தாக்கும் பழக்கம் இவற்றிற்கு கிடையாது. ஆபத்து என அறிந்தால் மட்டுமே சண்டையிடும். யானை போல பெரிய விலங்கு என்றாலும் சாதுவான விலங்கு என்பதால் இதுவும் மனிதர்களுக்கு வசதியாகி போய் விட்டது.
காண்டாமிருகங்களின் கொம்புகள் சீனா மற்றும் வியட்நாம் சந்தைகளில் சக்கை போடு போடுகின்றன. இவற்றின் மருத்துவத்தில் காண்டாமிருகத்தின் கொம்புகள் கேன்சர், பக்கவாதம்,வலிப்பு நோய்கள்போன்றவற்றை குணமாக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் வியட்நாம் இவற்றின் கொம்புகளுக்கு மிகப்பெரிய சந்தைகளாக விளங்குகிறது. அதோடு இதன் கொம்புகள் ஆண்மையை பெருக்கும்,பாலுணர்வை தூண்டும் என கதை கட்டிவிட, சிட்டுக்குருவிகள் போல இதையும் விட்டுவைக்க வில்லை மனிதர்கள். அதோடு சீன பணக்காரர்கள் காண்டாமிருக கொம்புகளை கவுரவமாகவும், அதிர்ஷ்டமாகவும் நினைப்பதால் இவற்றை துரதிருஷ்டம் துரத்தியது. அதோடு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த சமயத்தில் இதன் கொம்பின் ஒரு கிலோ 30 லட்சம் வரை பேரம் பேசப்பட்டன, இப்போது ஒரு கிலோ கொம்பின் விலை ஐம்பது லட்சம். நமீபியா, காங்கோ போன்ற நாடுகளில் காண்டாமிருகத்தின் தலை வெற்றிக்கேடயம் போல வீட்டில் தொங்கும். சில வருடங்களுக்கு முன்பு இந்த வெள்ளை காண்டாமிருகங்களின் தலையை கோப்பையாக நாங்கள் கொண்டு வருவோம் என வேட்டை குழுக்கள் வெளிப்படையாகவே அறிவித்து அச்சுறுத்தியது.
வேலியே பயிரை மேய்ந்த கதை:
சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த பலம் வாய்ந்த வேட்டைக்காரர்கள் முன்பு பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகள் என்ன செய்யும்? எனவே கடந்த நூற்றாண்டுகளில் செம ஜரூராக நடந்தது வேட்டை. உலக அமைப்புகள் இவைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து எச்சரிக்க, பின்னர் பிரச்னை அறிந்து விழித்து கொண்டன ஆப்பிரிக்க நாடுகள். எனவே இனிமேல் சரணாலயங்களுக்கு பாதுகாப்பு, கடுமையான சட்டம் என சில 'சின்னப்புள்ள' தனமாக காரியங்கள் செய்தது. ஆனால் ஹெலிகாப்டர், நவீன துப்பாக்கிகள், இரவு நேர தாக்குதல் என வரும் ஹைடெக் வேட்டைக்காரர்களுக்கு எதிராக சண்டையிட முள்வேலியிட்டு, சில போலீஸ் காரர்களை மட்டும் நிறுத்தி வைத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது என்பதை விட, இந்த நாடுகளால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது. எங்களுக்கு பணம் கொடுத்து விட்டு தாராளமாக வேட்டையாடிக் கொள்ளுங்கள் என உள்ளூர் நிர்வாகங்களே அனுமதித்த கொடுமைகளும் உண்டு. உணவுக்கே வழியின்றி தவிக்கும் மக்கள் கொண்ட நாட்டில் காண்டாமிருகத்தை பற்றி பாதுகாப்பை பற்றி எப்படி யோசிக்க முடியும்? இதை முன்னரே யோசித்த கொலைகாரர்கள் வெறித்தனமாக புகுந்து இவற்றை வேட்டையாடினர்.

வேட்டை என்பது ஏதோ ஒரு மிருகத்தை மட்டும் கொன்றுவிட்டு செல்வது என்பது அல்ல. கும்பல் கும்பலாக ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு கண்ணில் படும் காண்டாமிருகங்கள் எல்லாம் துப்பாக்கி கொண்டு சரமாரியாக சுட்டு வீழ்த்துவார்கள். நூற்றுக்கணக்கில் காண்டாமிருகங்கள் கொலை செய்யப்படும். பின்னர் இவற்றின் கொம்புகளை கத்திகள் கொண்டு அறுத்துவிட்டு அப்படியே கிடத்தி விட்டு போய் விடுவார்கள். அரசாங்கம் பின்னர் வந்து பார்த்து விட்டு இந்த நாளில், இத்தனை கொலை என பதிவு செய்து விட்டு போகும். இது கடந்த சில ஆண்டுகளாக எண்ணிப்பார்க்க முடியாத அளவு நடக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் மட்டும் 2007-ல் 13 காண்டாமிருகங்கள் மட்டுமே வேட்டையாடப்பட்டது. ஆனால் 2014-ல் இறந்த காண்டாமிருகங்களில் மொத்த எண்ணிக்கை 1215. காரணம் இவற்றின் தேவை. எண்ணிக்கை குறைய குறைய அதன் தேவையும், விலையும் அதிகமாகி கொண்டே போகிறது. 2013-க்கு பிறகு இதன் விலை இருமடங்காகி விட்டது சந்தையில்!
மறையத் துவங்கிய இனம்:
விளைவு 1900-ம் ஆண்டில் 5 லட்சம் என்றிருந்த மொத்த காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 1970- களில் மட்டும் 70,000 என ஆனது. ஆப்பிரிக்க நாடுகள் முழுக்க இருந்த மொத்த காண்டாமிருக இனங்களின் எண்ணிக்கை இது. இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டது வடக்குப்பகுதி வெள்ளை காண்டாமிருகங்கள். காரணம் இவை மற்ற காண்டாமிருகங்களை விட கவுரவம் மிக்கதாக கருதப்பட்டதால் அதிகம் கொன்று குவிக்கப்பட்டது. 2011- ல் கருப்பு காண்டாமிருகங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஐந்து மில்லியன் ஆண்டுகள் தாக்குப்பிடித்த இந்த இனம் மனிதர்களின் அட்டூழியத்தால் நூறு வருடங்கள் கூட வாழ முடியவில்லை. தற்போது உலகில் 29,000 காண்டாமிருகங்கள் இருப்பதாக கடந்த வருடம் கணக்கிடப்பட்டது. அதே போல வடக்கு வெள்ளை இன காண்டாமிருகங்கள் 1960-ல் 2000 என இருந்தது. இவற்றின் எண்ணிக்கை 1984-ல் வெறும் 15 ஆக மாறியது. இப்படியே இருந்தால் ஆபத்து என அறிந்த ஆர்வலர்கள் இவற்றை பிரித்து செக் குடியரசு, அமெரிக்கா, கென்யா என பிரித்து பாதுகாக்க முடிவு செய்தனர். வெள்ளை காண்டாமிருகங்கள் இனத்தில் தெற்கு மற்றும் வடக்கு பகுதி வெள்ளை காண்டாமிருகங்கள் என இரண்டு வகைகள் உண்டு. இவற்றில் தென் பகுதி காண்டாமிருகங்கள் அழிவின் விளிம்பில் இருந்தாலும் அவை தற்போது பாதுகாக்கப்பட்டு 17,000 என்ற அளவில் இருக்கின்றன.
ஆனால் வடபகுதி வெள்ளை காண்டாமிருகங்கள் உலகில் இருந்ததே மொத்தம் மூன்றுதான். அதில் சூடான் மட்டுமே ஆண். இரண்டு பெண் காண்டாமிருகத்துடன் சேர்த்து கென்யாவின் ஒல் பெஜெட்டா காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சூடானுக்கு முன் ஆங்கலிஃபூ என்னும் ஆண் காண்டாமிருகமும் கலிபோர்னியாவின் சான் டியாகோவின் பூங்காவில் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டது. அதனை நோலா என்னும் பெண் காண்டாமிருகத்துடன் இணை சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அது இறக்கவும், வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களில் ஆண் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை இந்த உலகில் ஒன்று ஆனது.
இனி என்ன எதிர்காலம்?

நமக்கு தெரியாமலே பல இனங்கள் பூமியில் அழிந்து போனாலும் கூட ,கண் முன்னரே அழிவை தடுக்க முடியாமல் போவது என்பது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. எனவேதான் சூடானுக்கு கைகொடுக்க நிறைய பேர் முன்வந்தனர். எனவே தற்போது இதற்கு 38 துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களுடன் முழு நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மொத்த நிலப்பரப்பையும் கண்காணிக்க கேமராக்கள் சகிதம் வேட்டைக்காரர்களிடம் இருந்து காத்துக்கொண்டிருக்கின்றனர் வீரர்கள். ”எங்கள் மீது மிக அதிகமான பொறுப்பு சுமத்தப்பட்டிருந்தாலும், இதை நாங்கள் மிகவும் நேசித்து செய்கிறோம். எங்கள் குழந்தை ஒன்றை கவனிப்பதை போன்று நாங்கள் சூடானை பார்க்கிறோம். அவனும் அப்படியே பழகுகிறான்“ என்கிறார் காவலாளி டோயோ.
இதெல்லாம் எதற்கு? இனம் அழியாமல் இருப்பதற்குத்தானே? வெள்ளை காண்டாமிருகங்கள் அதிக பட்சம் 50 வருடங்கள் வரை வாழும். சூடானுக்கு 43 வயதாகி விட்டது. பெண் காண்டாமிருகமான நஜின் மற்றும் ஃபட்டு ஆகிய இருவர் மூலம் இயற்கையான முறையில் நடந்த இனவிருத்தி முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே செயற்கை கருத்தரிக்கும் முறையில் மட்டுமே சாத்தியம் என தினமும் முயற்சிகள் செய்து வருகின்றனர் மருத்துவர்கள். அதுவரை இதனை விட்டு வைக்க வேண்டுமே? எனவே கென்யா அரசு உலக மக்களிடம் நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கும், வீரர்களின் உணவு, போன்ற செலவுகளுக்காக உலகத்திடம் பணம் கேட்கிறது பூங்கா நிர்வாகம்.
இந்த பிரச்னை, வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களுக்கு மட்டுமல்ல. மொத்த ஆப்பிரிக்க காண்டாமிருகங்களுக்கும் பொருந்தும். இதே வெள்ளை காண்டாமிருகங்களுக்கு ஒரு பக்கம் பாதுகாப்பளிக்க இன்னொரு புறம் தான்சானியா போன்ற பகுதிகளில் சுதந்திரமாக மற்ற மிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன. எனவே காண்டாமிருகத்தின் பாகத்தால் செய்யப்பட்ட பொருட்களை வாங்காமல் இருக்க உலக விலங்குகள் அமைப்பு அறிவுறுத்துவதோடு, விற்கும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தும் வருகிறது.
யார் மிருகமெனத் தெரிகிறதா?

நன்றி
விகடன்.

யுரேகா... கிடைத்தது 80 ஆண்டுகால கேள்விக்கான விடை!

யுரேகா... கிடைத்தது 80 ஆண்டுகால கேள்விக்கான விடை!


ஹைட்ரஜன், மிக லேசான தனிமம் என்று 1935ம் ஆண்டு வேதியியல் அறிஞர்கள் கண்டறிந்து தனிமவரிசை அட்டவணையில் வகைப்படுத்தினர்.

இந்த ஹைட்ரஜனை. உலோகமாக மாற்ற முடியுமா என்பதே வேதியியல் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் விடையறியா கேள்வியாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு பிறகு, அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.

ஹைட்ரஜனை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்துவதன் மூலம், அதை உலோகமாக மாற்றலாம் என்று அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைகழக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

ஹைட்ரஜன் தனிமத்தில், 25 ஜிகா பாஸ்கல் அழுத்தத்தை செலுத்தும்போது அது உலோக ஹைட்ரஜனாக மாற்றமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

380 ஜிகாபாஸ்கல் அளவிற்கு அழுத்தம், ஹைட்ரஜனில் செலுத்தப்படும்போது ஹைட்ரஜன் அணுக்கள் பிளவுபடுவதாக முந்தைய ஆய்வில் தெரியவந்துள்ளநிலையில், தற்போதைய முடிவு, ஒருபெரும் முன்னேற்றமாகவே கருதப்படுகிறது.

ஹைட்ரஜனை உலோகமாக்க மேற்கொண்ட சோதனையில் வைரம் குறித்த அடிப்படை சோதனை நடைமுறைப்படுத்தப்பட்டபோது அது தோல்வியிலேயே முடிந்ததால், விஞ்ஞானிகள் அதுதொடர்பான அதேசமயத்தில் சில மாற்று வழிகளை மேற்கொண்டனர்.

ஹைட்ரஜனை ஒரு குறிப்பிட்ட அழுத்தத்திற்கு உட்படுத்தும்போது, திட உலோக ஹைட்ரஜன் கிடைத்தபடியால், விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு சரியான பாதையில் செல்வதை அறிந்தனர். பின் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் பயனாக, மிக லேசான தனிமமான ஹைட்ரஜனை, உலோகமாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தனர்.

ஆய்வின் முடிவில் கிடைத்த உலோகம் கறுப்பு நிறத்தில் இருந்தது. பின் விஞ்ஞானிகள், 465 முதல் 495 ஜிகாபாஸ்கல் அளவிலான அழுத்தத்தை செலுத்தும்போது ஓளிபிரதிபலிக்கத்தக்க உலோகத்தை அவர்கள் கண்டறிந்து உருவாக்கினர்.

இதன்மூலம், மிகலேசான தனிமமான ஹைட்ரஜனை உலோகமாக மாற்ற முடியுமா என்ற 80 ஆண்டுகள் முந்தைய கேள்விக்கு தற்போது விஞ்ஞானிகள் விடை கண்டறிந்து அதை கொண்டாட்டமாகவே கொண்டாடி வருகின்றன

மொபைலில் பேட்டர்ன்லாக் பயன்படுத்துறீங்களா? 1 நிமிஷம் இதைப் படிச்சுடுங்க!

மொபைலில் பேட்டர்ன்லாக் பயன்படுத்துறீங்களா? 1 நிமிஷம் இதைப் படிச்சுடுங்க!


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரது மொபைலிலின் பாஸ்வேர்டு, எண்களாக இருக்காது. பேட்டர்ன் லாக்-ஆகத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் எண்களை டைப் செய்வது, அவசரத்தில் தப்பாக டைப் செய்து முழிப்பது போன்ற சிக்கல்கள் எல்லாம் வராமல் தடுப்பது இந்த பேட்டர்ன்லாக்தான். சின்னதொரு ஸ்வைப்பில் லாக்கை எடுத்து விடலாம். போனும் பாதுகாப்பாக இருக்கும். இந்த முறை மிக எளிதானதும், பாதுகாப்பானதும் கூட என்றுதான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களில் இந்த பேட்டர்ன் லாக் முறை நாம் நினைக்கும் அளவுக்கு எல்லாம் பாதுகாப்பானது இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உங்கள் மொபைலில் பேட்டர்னை கொஞ்சம் கூட யோசிக்காமல், அசால்ட்டாக போட்டு அன்லாக் செய்துவிடும், புத்திசாலி நண்பர்களை கொண்டவர்களுக்கு இந்த விஷயம் ஏற்கெனவே தெரிந்திருக்கும்.
ஆண்ட்ராய்டு போன்களில் பெரும்பாலான பாஸ்வேர்டு பேட்டர்ன்களை வெறும் 5 தடவைகளுக்குள் கண்டுபிடித்துவிட முடியுமாம். இதுகுறித்து ஆய்வு செய்த சீனா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். நீங்கள் அன்லாக் செய்யும் போது, அதனை தூரத்தில் இருந்து வீடியோ எடுப்பதன் மூலமாகவோ, அல்லது கம்ப்யூட்டர் விஷன் அல்காரிதம் மென்பொருட்களைக் கொண்டோ உங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸ்களின் பேட்டர்ன் லாக்கை கண்டுபிடித்துவிட முடியும் என்கின்றனர் இவர்கள்.
அதுவும் நீங்கள் கடினமான பேட்டர்ன்கள் என நினைக்கும் பேட்டர்ன்களை இந்த முறையின் மூலமாக இன்னும் விரைவில் கண்டுபிடித்துவிட முடியும். அதுவும் நிதி சேவைகள் தொடர்பான வங்கி சேவைகள், தனிப்பட்ட தகவல்களை கொண்ட ஆப்ஸ்களை பயன்படுத்துபவர்கள் தங்களது டிவைஸ்களை பாதுகாக்க இந்த பேட்டர்ன் லாக் முறையினையே பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, இது நீங்கள் நினைக்கும் அளவிற்கு பாதுகாப்பானது இல்லை என்பது தெரிகின்றது.
இந்த ஆய்வு முடிவுகளை கூட விட்டுவிடலாம். காரணம், இதில் கணினி உதவியுடன் கூடிய அல்காரிதம்கள், கேமராக்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை எதுவும் இல்லாமலே, நிஜ வாழ்க்கையில் சிலர் உங்கள் போன் பேட்டர்ன்களை, உங்கள் கண் முன்னரே அன்லாக் செய்திருப்பார்கள்.

1. நீங்கள் நீண்ட நாட்கள் ஒரே பேட்டர்னையே பயன்படுத்துபவர் என்றால், பாதுகாப்பு குறித்தெல்லாம் ஆசையே இருக்கக் கூடாது. காரணம், உங்கள் வீடு, அலுவலகம், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் உங்களை சுற்றியிருக்கும் நபர்களுக்கு உங்கள் பேட்டர்ன் நன்றாகவே தெரிந்திருக்கும். இவர்களால் எளிதில் உங்கள் போன் பேட்டர்னை அன்லாக் செய்ய முடியும். எனவே அடிக்கடி பேட்டர்ன்களை மாற்றுவது நலம். இது ரொம்ப கஷ்டமான வேலை எல்லாம் இல்லையே பாஸ்?
2. நீங்கள் அடிக்கடி போனை எடுத்து, பேட்டர்ன் போட்டு அன்லாக் செய்துவிட்டு, எதற்கு போனை எடுத்தோம் என்பதையே மறந்துவிட்டு வெறுமனே டைம் மட்டும் பார்த்துவிட்டு, மீண்டும் லாக் செய்யும் நபர் என்றால், உங்கள் பேட்டர்னை இன்னும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.
நீங்கள் போனை அன்லாக் செய்த விரல் தடம், உங்கள் போன் டிஸ்ப்ளேயில் அழகாக பதிந்திருக்கும். அதன் பின்பு லாக் செய்யும் போது, பவர் பட்டனைத் தான் பயன்படுத்தியிருப்பீர்கள். எனவே அதைவைத்தும் கூட எளிதாக பேட்டர்னை யூகித்துவிடலாம். அட இப்படி சி.ஐ.டி வேலை எல்லாம் செஞ்சு அன்லாக் செய்யும் அளவுக்கு...நம்ம போன் அவ்ளோ வொர்த்தா பாஸ்?...என நீங்கள் யோசித்தால், அப்புறம் எதுக்கு ப்ரோ அந்த லாக்கு?
3. வேற என்ன பண்ணலாம்?
நிச்சயமாக உங்கள் போனில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் முக்கியமானதுதான். எனவே அதற்கு பாதுகாப்பும் நிச்சயம் தேவை. எனவே உங்கள் போனில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் போல, பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சங்கள் இருந்தால் அதைப் பயன்படுத்துவதே சிறப்பு. அல்லது பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர் ஆப்ஷனை பயன்படுத்துவதும், பாதுகாப்புக்கு ஏற்றது. பாஸ்வேர்டு வைக்கும்போது, எப்படி சில தவறுகளை எல்லாம் செய்யவே கூடாதோ, அதுபோலவே பேட்டர்ன்லாக் விஷயத்திலும் கவனம் தேவை ட்யூட்ஸ்!

நன்றி
விகடன்.