ஸ்மார்ட்போனில் உங்க தகவல்களை பத்திரமா பார்த்துக்கணுமா? அப்போ இத செய்ங்க...

ஸ்மார்ட்போனில் உங்க தகவல்களை பத்திரமா பார்த்துக்கணுமா? அப்போ இத செய்ங்க...

ஸ்மார்ட்போன் தான் உலகம் என்றாகிவிட்ட அளவுக்கு நவீன வசதிகள் போனுக்குள்ளேயே வந்துவிட்டன. அதனால் கம்யூட்டரின் தேவை வெகுவாகக் குறைந்துவிட்டது.
ஆவணங்கள், கோப்புகள், படங்கள் என எல்லாவற்றையும் போனுக்குள்ளேயே சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதை எங்கு சென்றாலும் நாம் கூடவே எடுத்துச் செல்ல முடியும்.
அப்படிப்பட்ட தகவல் பெட்டகத்தில் உள்ள முக்கியத் தகவல்களை வேறு யாரேனும் பார்த்துவிட்டால்?
அப்படி எதுவும் நடக்காமல் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாக்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
பாஸ்வேர்டு
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் செய்யும் தவறு என்ன தெரியுமா? ஸ்மார்ட்போன் மூலம் இமெயில் பார்ப்பது, இன்டர்நெட் பேங்கிங் உபயோகிப்பது போன்றவற்றைச் செய்துவிட்டு, பாஸ்வேர்டை நினைவில் கொள் எனக் கொடுத்து வைத்துவிடுவது.
கூடுமானவரையிலும் பாஸ்வேர்டு, அக்கவுண்ட் நம்பர் போன்ற முக்கியமான தகவல்களை இப்படி சேமிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
அப்ளிகேஷன் லாக்
ஆண்டிராய்டு அப்ளிகேஷன்களை மட்டும்பூட்டி வைத்துக் கொள்ளும் ஆப் லாக் அப்ளிகேஷன்கள் நிறைய உள்ளன. பேங்கிங் அப்ளிகேஷன் போன்றவற்றை இதன்மூலம் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
உங்கள் ஸ்மார்ட்போன் தவறான ஆட்களிடம் சிக்கினால் கூட முக்கியமான தகவல்களைக் கசியவிடாமல் பார்த்துக் கொள்ளமுடியும்
மல்டி யூசர்
ஆண்டிராய்டு ஜெல்லிபீன் செயல்பாட்டில் இயங்குகிற உங்கள் ஸ்மார்ட்போனில் ஒன்றுக்கு மேற்பட்ட யூசர் கணக்குகளை உருவாக்கி வைத்துக் கொள்ளும் வசதி உண்டு.
அவற்றைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர் கணக்குகளை உருவாக்கி வைத்துக் கொண்டால், முக்கியத் தகவல்களைப் பயன்படுத்தும்போது மற்றொரு யூசர் அக்கவுண்டில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் உங்களுடைய தகவல்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள முடியும்.
பேக்-அப்
என்னதான் உங்கள் ஸ்மார்ட்போன் ஹை கான்பிகிரேஷனில் இருந்தாலும் ஒரே ஒருமுறை வேகமாக கீழே போட்டால் போதும், உங்கள் மொத்த தகவல்களும், போட்டோ, வீடியோ போன்ற முக்கிய ஆவணங்களும் காணாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. அதனால் அவ்வப்போது டேட்டா பேக்- அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
மெமரி கார்டு
ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்டி மெமரி கார்டு போன்ற எக்ஸ்டர்னல் நினைவகங்களில் முக்கியமான தகவல்களைச் சேமித்து வைப்பார்கள். போட்டோக்கள் , வீடியோக்கள் போன்ற தகவல்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்டர்னல் நினைவகங்களில் முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றைச் சேமித்து வைப்பது நல்லதல்ல.
பொது இடங்களில் வை-பை
இப்போது ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகள் போன்ற பொதுவிடங்களில் வை-பை வசதி வந்துவிட்டது. இந்த வை-பை வசதிகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் எனப்படும் தகவல் திருடர்கள் உலா வருகிறார்கள். நீங்கள் இணையத்தில் என்னென்ன செய்கிறீர்கள் என அத்தனை விவரங்களையும் திருடிவிட முடியும். எனவே பொதுவிடங்களில் உள்ள வை-பையைப் பயன்படுத்தும்போது, கவனமாக இருப்பது நல்லது.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் போன்ற மெசஞ்சர்களைப் பயன்படுத்தும்போது, நீங்கள் வாட்ஸ்அப்பில் வைத்திருக்கும் புரொபைல் படத்தை எல்லோரும் பார்க்கும்படி வைத்திருக்காமல் உங்கள் தொடர்புப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கும்படி வைத்திருக்கவும்.
ஒரு மாடு... ஓர் ஆண்டு... 75 ஆயிரம்..! நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்

ஒரு மாடு... ஓர் ஆண்டு... 75 ஆயிரம்..! நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்


பால்... அதிக பால்... என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்... கலப்பினப் பசுக்களையும் தேடி ஓட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். தற்போது, இயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால், பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவராக... கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்... தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடு, வடமாநில இனங்களான சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்... போன்ற பசுக்களையும், முர்ரா ரக எருமை மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
கரூர்-தாராபுரம் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறது, செல்லாண்டிப்பாளையம். பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரியும் மண்சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கணேசனின் பண்ணை. மண்சாலையில் இரண்டு பக்கமும் உயிர்வேலியாக நீண்டு கிடக்கின்றன, கிளுவைச் செடிகள். அதில், பிரண்டையும், கோவைக் கொடியும் படர்ந்து கிடக்கின்றன. பண்ணையில் இருந்த கணேசனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
''இது எங்க பூர்வீக இடம். மொத்தம் 32 ஏக்கர். இதுல 17 ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் நிலம். 10 ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் இருக்கு. 5 ஏக்கர்ல தென்னை இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனம்தான். பக்கத்துல அமராவதி ஆறு இருக்கு. அரசு அனுமதியோட ஆத்துத் தண்ணியையும் கொண்டு வந்து பாசனம் செய்றதால... தண்ணி பிரச்னை கிடையாது.
தொழிலிருந்து தோட்டத்துக்கு!
சின்ன வயசுலேயே கரூர் போயிட்டேன். இருந்தாலும், அடிக்கடி ஊருக்கு வந்து பூர்வீக மண்ணைப் பார்க்கும்போது... பாட்டன், பூட்டன் செஞ்ச விவசாயத்தை நாமளும் செய்யணும்கிற ஆசை... மனசுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கும். இன்னிக்கு பரபரப்பான தொழிலதிபரா இருந்தாலும், விவசாய ஆர்வம் என்னை விடல. ஒரு கட்டத்துல கம்பெனிய பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, முழுநேர விவசாயியா மாறிட்டேன். பரம்பரையா எங்க தோட்டத்துல காங்கேயம் மாடுகளதான் வளர்ப்போம். நான் விவசாயத்துல இறங்கினதும், வேலாயுதம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார் கூட்டத்துல எதேச்சையா கலந்துகிட்டேன்.
அந்தப் பயிற்சியில, 'இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மனுஷனுக்கும் ஏத்தது’னு தெரிஞ்சுட்டேன். பிறகு, திண்டுக்கல்ல நடந்த சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான், நாட்டுமாடுகளோட மகிமையையும், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன்.
தீவனம் இல்லாமல் மாடு வாங்கக் கூடாது!
ஆரம்பத்துல, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள் தயாரிக்கறதுக்காகத்தான் நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக, 10 ஏக்கர்ல பசுந்தீவன சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒரே ரகமா இல்லாம.... கோ-4, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29, கிளரிசீடியா, சவண்டல் (சுபாபுல்), மல்பெரி, முயல் மசால்னு பல ரகமா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான், மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன்.
'வெறுமனே இடுபொருளுக்காக மட்டும் இல்லாம, பால் விற்பனையும் செஞ்சா லாபகரமா இருக்குமே’னு தோணுச்சு. காங்கேயம் பசுக்களை மட்டும் வெச்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது. அதே நேரத்துல, கலப்பினப் பசுக்களை வாங்கி பால் வியாபாரியா மாறவும் எனக்கு மனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்பத் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலதான், 'வாழப்பாடி’ மணிசேகர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர்தான், 'கலப்பினப் பசுக்களைப் போலவே அதிகம் பால் கறக்குற நாட்டுப் பசுக்களும் இருக்கு’னு சொன்னாரு. உடனடியா அலைஞ்சு திரிஞ்சு அந்த இன மாடுகளை வாங்குனேன்'' என்ற கணேசன், மாட்டுத் தொழுவத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
எருமை எதையும் கழிக்காது!
நல்ல காற்றோட்டத்துடன் சிமெண்ட் தரைதளத்துடன் இருந்த தொழுவத்தில் ஒரு வரிசையில் பசுமாடுகளும் எதிர் வரிசையில் எருமை மாடுகளும் கட்டப்பட்டிருந்தன. தொழுவத்தில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தவர், ''தொழுவத்தை 60 அடி நீளம், 30 அடி அகலம், 20 அடி உயரத்துல அமைச்சுருக்கேன்.
ஆரம்பத்துல பசு மாடுகளை மட்டும்தான் வாங்கலாம்னு இருந்தேன். சிலர், 'எருமைப்பால்ல கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். அதனால பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னாங்க. அதனால எருமைகளையும் வாங்க ஆரம்பிச்சேன். எருமை மாடு, பசுந்தீவனம், அடர்தீவனம் எல்லாத்தையும் கழிக்காமத் திங்கும். அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதால, மருத்துவச் செலவும் குறையுது. இப்போ... என்கிட்ட 7 காங்கேயம், 6 கிர், 4 தார்பார்க்கர், 4 காங்கிரேஜ், 4 சாஹிவால், 25 முர்ரா எருமைகள்னு மொத்தம் 50 உருப்படிகள் இருக்கு'' என்றவர், வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
ஒரே ஈத்துல எடுத்துடலாம்!
''வடமாநில மாடுகளோட விலை அதிகமா இருந்தாலும், போட்ட பணத்தை ஒரே ஈத்துல எடுத்துடலாம். உதாரணமா... சாஹிவால் பசுவை 75 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். இது, வருஷத்துக்கு 305 நாள் பால் கறக்குது. சராசரியா ஒரு மாட்டுல இருந்து 4 ஆயிரம் லிட்டர் பால் ஒரு வருஷத்துல கிடைக்குது.
நேரடியா நுகர்வோருக்கு ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விக்கிறேன். 4 ஆயிரம் லிட்டர் பால் மூலமா, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவு போக, 75 ஆயிரம் ரூபாய் லாபம். ஆக, ஒரு ஈத்து முடிஞ்சதுமே... மாடும், கன்னும் லாபக் கணக்குல சேர்ந்துடுது. இதேமாதிரி அம்பது மாட்டுக்கு கணக்குப் போட்டுக்கோங்க...'' என்ற கணேசன் நிறைவாக,
''ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்கள் பயன்பாட்டுக்காக காங்கேயம் பசுக்களையும் வளக்குறேன். இதுல பால் மூலமா வருமானம் இல்லைன்னாலும், கன்று விற்பனை மூலமா வருஷத்துக்கு ஒரு தொகை கிடைச்சுடுது. ஆக மொத்தத்துல நாட்டு மாட்டு இனங்களைக் கலந்து வளத்தா... நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆரம்பத்துல எல்லா இனத்திலும் ஒவ்வொரு மாட்டை மட்டும்தான் விலை கொடுத்து வாங்கினேன். இடையில் சில கன்றுகளை வித்தது போக இப்ப, கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 50 மாடுக இருக்கு.
இப்போ, நாட்டுப் பசுக்களோட பாலுக்கு அதிக தேவை இருக்கறதால... நாட்டு மாடுகளை வளத்து பாலை நேரடி விற்பனை செஞ்சா கண்டிப்பா நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டி விடை கொடுத்தார்.
தொடர்புக்கு, சி. கணேசன், செல்போன்: 98652-09217
சிந்தனையைக் கூர்மையாக்கும் 7 உணவுகள்..!

சிந்தனையைக் கூர்மையாக்கும் 7 உணவுகள்..!

அறிவுக்கூர்மை என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட ஐ.கியூ அளவைப் பொருத்து மாறுபடுகிறது. இதை நாமாக வளர்த்துக்கொள்வது சிரமம் எனச் சிலர் எண்ணுகின்றனர். மறுபுறம், அறிவுக்கூர்மையை மேம்படுத்த, சந்தையில் கிடைக்கும் கேப்ஸியூல், சிரப், மருந்துகள், ஊட்டச்சத்துப் பானங்கள் ஆகியவற்றைத் தேடிச் சாப்பிடும் நபர்களும் உள்ளனர். இவற்றைப் சாப்பிட்டால், தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக மாறிவிடுவார்கள், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள் எனப் பல பெற்றோர் நம்புகின்றனர். யோகா, தியானம், மூச்சுப்பயிற்சிகள் ஆகியவற்றோடு, அறிவுக்கூர்மையை மேம்படுத்துவதில் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. அறிவைக்கூர்மையாக்கும் 7 உணவுகள் இங்கே...


 
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த முட்டை, மீன், நட்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் டொகோசஹெக்ஸேனாய்க் ஆசிட் (Docosahexaenoic acid) எனும் அமிலச் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த அமிலம், மூளை நரம்புகளைத் தூண்டி, மூளையின் செயல்திறன் மற்றும் அறிவுக்கூர்மையை அதிகரிக்கிறது. நம் ஊரில் கிடைக்கும் வஞ்சிரம், நெத்திலி மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை அதிக அளவு பெறமுடியும். மேலை நாடுகளில் பிரபலமான சால்மன் மீனுக்கு இணையான சத்து இவற்றில் அடங்கியுள்ளது.
முட்டையில் உள்ள கோலின் சத்து, தண்ணீரில் கரையக்கூடியது. இது, மூளை நரம்புகளைச் சுறுசுறுப்பாக்குகிறது. வாரத்துக்கு மூன்று நான்கு முட்டைகள் வரை சாப்பிடலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.
காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளையின் கொழுப்பு அமிலச் சங்கிலியை (Long chain fatty acids) உறுதியாக்குகிறது. தினமும் இரவு, ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், அறிவுக்கூர்மையை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
சாக்லெட் சாப்பிட்டால், மூளை நரம்புகளின் செயல்திறனை அதிகரிக்கும் என்டார்ஃபின் (Endorphin) சுரப்பு அதிகரிக்கிறது. வாரத்துக்கு இரண்டு முறை சாக்லேட் சாப்பிடலாம். சாக்லேட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, சர்க்கரை அளவு 10 கிராமுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாக்லெட்டைத் தவிர்க்கலாம்.
முழுதானியங்கள், இதய ரத்தநாளங்களைப் பாதுகாப்பதுடன், மூளையின் ரத்தஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதனால், அறிவுக்கூர்மை, நினைவுத்திறன் அதிகரிக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்லாமல், அனைவரும் இவற்றைத் தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சப்பாத்தி, களி, சம்பா கோதுமை உப்புமா உள்ளிட்ட உணவுகளை இரவு உணவாகச் சாப்பிடலாம்.
பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. புற்றுநோயை எதிர்க்கக்கூடியது. அசைவ ரெசிப்பிகள் தயாரிக்கும்போது, பட்டையைச் சேர்க்க வேண்டும். செரிமானத்துக்குப் பயன்படும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். அறிவுக்கூர்மையை அதிகரிக்கும்.




  


மூளை நரம்பு செல்களுக்கு இடையே தகவல் தொடர்பு ஏற்படுத்த உதவுவது, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் புரதச்சத்துக்கள். இவை இரண்டும் யோகர்ட் என்னும் கெட்டித் தயிரில் உள்ளது. இதனை மதியச் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் தேர்வுக்குப் படிக்கும் மானவர்களுக்கு அறிவுக்கூர்மை அதிகரிக்கும். யோகர்ட் செரிமானமாகத் தாமதமாவதால், இரவில் இதனை சாப்பிடக் கூடாது. லாக்டோஸ் இன்டாலரென்ஸ் எனும் பால் ஒவ்வாமை இருப்பவர்கள், இதனைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக மீன், முட்டை, காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம்.


 
’எந்நேரமும் போனும் கையுமாக இருந்த பசங்களா இவங்க!’ ...

’எந்நேரமும் போனும் கையுமாக இருந்த பசங்களா இவங்க!’ ...


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைக் கண்ட வயதான மெய் சிலிர்த்து கண்ணீர் சிந்த பேசியுள்ளார்.
கோவை வ. உ. சி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் திரண்டிருந்த கூட்டத்தின் நடுவே எழுபது வயதான பெண்மணி ஆவேசத்துடன் ஆட்சியாளர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவள். கோவைக்கு இடம்பெயர்ந்து பல ஆண்டுகளாக ஆகிவிட்டது.
தற்போது சுண்டப்பாளையத்தில் வசித்து வருகிறேன். கடந்த ஒருவார காலமாக ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை தொலைக்காட்சியில் பார்த்து மெய்சிலிர்த்து விட்டேன்.
நானும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதலில் இங்கு வந்தேன்.
எந்நேரமும் போனும் கையுமாக இருக்கிற இந்த காலத்து பசங்க ஜல்லிக்கட்டு பத்தி பேசறத கேட்கவே சந்தோசமா இருக்கு. இதுமட்டும் போதாது.
இவங்க போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தெருவில இறங்கனும்.
இங்குள்ள பிள்ளைக படிக்கறதுக்கு லஞ்சம், திங்கறதுக்கு லஞ்சம், வேலை கிடைக்கிறதுக்கு லஞ்சம்னு அல்லாடுறாங்க. இதெல்லாம் ஒழியுனும்னா இவங்க இந்த போராட்டத்தோடு நிக்காம அரசியல்ல இறங்கனும்.
அப்பத்தான் எல்லாம் சரியாகும்” என்று நம்பிக்கையோடு பேசினார்.
"தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் களம் இறங்குவோம்" - மெரீனாவை திணறவைத்த இளைஞர் படை உறுதி..!!

"தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் களம் இறங்குவோம்" - மெரீனாவை திணறவைத்த இளைஞர் படை உறுதி..!!


ஜல்லிக்கட்டு தடை முடிவுக்கு வந்தவுடன் எங்களின் போராட்டம் நின்று விடாது. தமிழகத்தில் அடுக்கடுக்காக இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இளைஞர்கள் இது போல் ஒன்று கூடி போராட்டம் நடத்துவோம் என்று மெரீனாவில் கூடிய இளைஞர்கள் தெரிவித்தனர்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தொடர்ந்து 3-வது ஆண்டாக தடை நீடிக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்தியே தீர வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன், மாநிலத்தில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் தன்னெழுச்சியுடன் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில் 16-ந்தேதியும், சென்னையில் 17-ந்தேதியும் தொடங்கிய போராட்டமும் 4 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவர்கள் என அனைவரும் மதச்சார்பின்றி அமைதியான வழியில் அறப்போராட்டத்தை மிகவும் ஒழுக்கமான முறையில் நடத்தி வருகின்றனர்.
எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்காமல், இளைஞர்கள் அனைவரும் சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் வழியாக இணைந்து போராட்டங்களை மாநிலம் முழுவதும் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
நாளுக்கு நாள் மாநிலம் முழுவதும் மாணவர்களோடு பல தன்னார்வ அமைப்புகளும் களமிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கில் இளைஞர்கள் திரண்டு போரட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுப் போட்டியோடு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஜல்லிக்கட்டோடு முடிந்துவிடாது, அனைத்து பிரச்சினைகளுக்கும் இதேபோல் இறங்கி போராடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
மெரீனாவில் இன்று காலை மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தபோது, மேடையில் ஏறிய ஒரு இளைஞர் பேசுகையில், " சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் வழியாக நாம் ஜல்லிக்கட்டுப்போட்டிக்காக ஒன்று திரண்டுள்ளோம். இந்த பிரச்சினையோடு முடிந்துவிடாமல், தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நாம்குரல் கொடுக்க வேண்டும்.
இது தொடர்பாக இணையதளம் வாயிலாக அனைவரும் கருத்துக்களையும், சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்காக டின்.ஸ்டூடன்ட்ஸ்.ஜல்லிக்கட்டு(tn.students.jallikattu.com) என்ற இணையதளத்தில் போய் தங்களின் விருப்பங்களையும், எண்ணங்களையும், கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்'' எனத் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு தடைக்கு பின் உள்ள வர்த்தகம் ஒரு இனத்தையே அழித்த சரித்திரம் தெரியுமா?

ஜல்லிக்கட்டு தடைக்கு பின் உள்ள வர்த்தகம் ஒரு இனத்தையே அழித்த சரித்திரம் தெரியுமா?


ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் சர்வதேச வியாபாரம் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டு ஏன் நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரிசாவில் நடந்த சம்பவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
1978ம் ஆண்டு ஒரிசா மாநிலம் காலாஹந்தி மாவட்டத்தில் மஃபட்லால் நிறுவனத்தின் NGO சத்குரு சேவாசங்கம், SBI மற்றும் ஒரிசா மாநில கால்நடை & வருவாய்த் துறை ஆகியவை இணைந்து ஏழை விவசாயிகளுக்கு கறவை மாடும் அதற்குத் தேவையான தீவனம் வளர்க்க நிலமும் இலவசமாக வழங்கின. இந்த இலவச நிலத்தில் மாட்டுத்தீவனம் வளர்ப்பதற்கு ஊதியமும் தரப்பட்டது....
எவ்வளவு நல்ல திட்டம்... அனைவராலும் பாராட்டப்பட்டு...உள்ளூர் மக்களிடம் சிறந்த வரவேற்பையும் பெற்றது....
இந்தத் திட்டத்தின்மே ல் ஒரு சிறிய * பொறிக்கப்பபட்டிருந்தது... சாஜ் சாத் terms & condition தான்....
கொடுக்கப்பட்ட மாடுகள் அனைத்தும் புனேயிலிருந்து கொண்டுவரப்படும் ஜெர்சி மாடுகளின் உயிரணு மூலம் ஊசிமூலமாக மட்டுமே சினை ஊட்டப்பட வேண்டும்..என்பதே அந்தக் கண்டிசன். மாடு, நிலம் இலவசம்....அந்த நிலத்தில் வேலைபார்க்க ஊதியம்...யாருக்கு கசக்கும்...
இரத்தினக்கம்பளம் விரித்து திட்டம் வரவேற்கப்பட்டது.... திட்டம் ஆரம்பிக்கப்பட்டபின் இந்த மாடுகள் இயற்கையாக உள்ளூர் காளைகளுடன் இணை சேராமலிருக்க உள்ளூரிலிருந்த காரியார் இனக்காளைகள் அனைத்தும் மலடாக்கப்பட்டன...
அதுதான் உண்மையில் திட்டம் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை... இலவச மோகம்... ஆண்டுகள் உருண்டன... செயற்கை முறையில் சினையூட்டப்பட்டுப் பிறந்த கன்றுகளெல்லாம் எல்லாம் நோஞ்சானாகப் பிறந்தன....
பத்தாண்டுகளுக்குள் பலம்வாய்ந்த, அதிகப் பால் கொடுக்கக் கூடிய நாட்டு காரியார் இனத்தின் ஒரு காளையைக் கூட ஒரிசாவின் காலஹந்தி மாவட்டத்தில் பார்க்க முடியவில்லை...ஒட்டுமொத்த இன அழிப்பு...
பாலுற்பத்தியில் தன்னிறைவடைந்திருந்த அந்த மாவட்டத்தில் இப்போது ஒவ்வொரு விவசாயியும் பாக்கெட் பால் வாங்குகிறான்!!
1977-78ல் ஒரு லிட்டர் நெய் 7ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டால்டா 9ரூபாய்க்கும் விற்கப்பட்ட இடத்தில், தற்போது டால்டா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது!!
திட்டக் காலம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டவுடன், மாட்டுத்தீவனம் வளர்க்க இலவசமாக வழங்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாயிகளிடமிருந்து பறிக்கப் பட்டுவிட்டன.....
கைகொடுத்த பால் தொழில் தொலைந்ததால் காரியார் காளைவளர்த்த இளங்காளையர்களெல்லாம் பிழைப்பிற்காக நகரத்து டின் செட்டிற்குள் அவிந்து கொண்டிருக்கிறார்கள் கட்டிடத் தொழிலாளர்களாக...
இது இலவசங்களுக்குப்பின் ஒழிந்திருக்கும் வணிக நோக்கங்களைத் தோலுரிக்கும் ஒரு சிறு சாம்பிள் மட்டுமே.....
இலவச மோகம் இன அழிப்புச் செய்யும் என்பது நிதர்சன உண்மை... இந்த மாயையிலிருந்து மக்களை வெளிக்கொணர்வது நம் ஒவ்வொருவர் மீதும் கடமை என்பதை கொண்டு செயல்படுவோம்.
ஜல்லிக்கட்டு அவசரச்சட்ட வரைவு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு தயார்

ஜல்லிக்கட்டு அவசரச்சட்ட வரைவு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு தயார்


தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்ட வரைவு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. நேற்று, போராட்டக்காரர்களின் கோரிக்கையின் எதிரொலியாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இச்சந்திப்பில் திருப்திகரமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இதனால், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசரச்சட்டத்தை இயற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.
தமிழக அரசு சமர்ப்பிக்கும் அவசரச்சட்ட வரைவிற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு இசைவு தெரிவித்து உள்துறை அமைச்சகம் ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ராஜ்நாத் சிங்கை சந்தித்த பின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்
இதனையடுத்து, தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்ட வரைவு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது கொல்கத்தாவில் இருக்கிறார். இன்று மாலை அவர் டெல்லி திரும்புகிறார். இன்று இரவு அல்லது நாளை காலை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவசரச்சட்டத்திற்கு ஒப்புதல் கையொப்பமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பண பயன்பாட்டை கட்டுப்படுத்த கட்டாய பான் உச்சவரம்பு 30,000 ஆக குறைக்க திட்டம்

பண பயன்பாட்டை கட்டுப்படுத்த கட்டாய பான் உச்சவரம்பு 30,000 ஆக குறைக்க திட்டம்

பண பரிவர்த்தனையை குறைக்கும் நடவடிக்கையாக, கட்டாய பான் எண் சமர்ப்பிக்கும் உச்சவரம்பை 30,000ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய 500, 1,000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு பண புழக்கம் அடியோடு ஸ்தம்பித்தது. தற்போது அடுத்த மாதத்தில் பணத்தட்டுப்பாடு சீராகும் வங்கிகள் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. இதற்கேற்ப ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நாளொன்றுக்கு 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், 24,000 என்ற வார உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. வணிகர்கள் நடப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்கும் உச்சவரம்பு 50,000ல் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் பணப்புழக்கம் விரைவில் சீராகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், இதை மத்திய அரசு ஆதரிக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பண புழக்கத்தை குறைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதான் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது. ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பிறகு அளித்த பேட்டி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அளித்த பேட்டியில், ‘‘பணத்தை செலவழிப்பதற்கான கட்டுப்பாடுகள், பான் எண்ணை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவு ஆகியவை ஊழலை ஒழிக்க வழி வகுக்கும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். செல்லாத நோட்டு மாற்றுவதிலும் பான் எண் மற்றும் ஆதார் எண் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இவற்றை கொண்டு தனிநபரின் பரிவர்த்தனையை கண்காணிப்பது எளிது என்பதால், மத்திய அரசு பரிவர்த்தனை கட்டுப்பாடு விஷயத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
பண பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கையாக, கட்டாய பான் எண் சமர்ப்பிப்பதற்கான விதிமுறைகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 50,000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயமாக உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுபோல் 2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவதற்கும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டது. அதேநேரத்தில், அசையா சொத்து வாங்க பான் எண் குறிப்பிடும் உச்சவரம்பு 5 லட்சத்துக்கு மேல் என இருந்தது 10 லட்சம் ஆக்கப்பட்டது. தற்போது, கட்டாய பான் எண் உச்சவரம்பு 50,000ல் இருந்து 30,000 ஆக குறைக்கப்படலாம் எனவும், இதுகுறித்து அடுத்த மாதம் 1ம் தேதி சமர்ப்பிக்க உள்ள மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், கடைகளில் பொருள் வாங்கும்போது மேற்கொள்ளும் கட்டாய பான் உச்சவரம்பும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, பண பரிவர்த்தனை குறிப்பிட்ட அளவுக்கு மேல் மேற்கொள்வதற்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன்படி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு இந்த வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் வரி கார்டு பரிவர்த்தனைக்கான ஸ்வைப்பிங் மிஷின்கள் வாங்க பயன்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, கருப்பு பண புழக்கம் மீண்டும் ஏற்படாமல் இருக்க பண பரிவர்த்தனையை குறைப்பதில் மத்திய அரசு வெகுவாக தீவிரம் காட்டி வருகிறது. இதன் அடிப்படையிலேயே இந்த திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நடைமுறையில் உள்ள கட்டாய பான்
* 10 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள அசையா சொத்து வாங்குதல்.
* டூவீலர் தவிர இதர வாகனங்கள் வாங்குதல்.
* வங்கி கணக்கு துவக்குதல்.
* 50,000 மேற்பட்ட ஓட்டல், ரெஸ்டாரன்ட் பில்.
* 50,000க்கு மேற்பட்ட டிடி, காசோலைகள்.
* வெளிநாடு செல்லும்போது 50,000 மதிப்புக்கு மேற்பட்ட வெளிநாட்டு கரன்சி (டிக்கெட் கட்டணம், ஏஜென்ட் கமிஷன் உட்பட)
* 50,000க்கு மேல் வாங்கும் மியூச்சவல் பண்ட்கள், கடன் பத்திரங்கள்.
* ஜூவல்லரி, பொருட்கள், வைப்பு கட்டணம் 2 லட்சத்துக்கு மேல் இருந்தால்.
* கேஷ் கார்டு, பிரீபெய்டு 50,000க்கு மேல் இருந்தால்.
மெரீனாவில் 3-வது நாளாக செல்போன் வெளிச்சத்தில் தொடரும் போராட்டம்

மெரீனாவில் 3-வது நாளாக செல்போன் வெளிச்சத்தில் தொடரும் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மூன்றாவது நாளாக இரவில் செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. தொடர்ந்து போராடுவோம் வெற்றி பெறுவோம் என முழக்கமிட்டனர்.

மாணவர்கள் போராட்டம்
இந்தாண்டு பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதுரை அலங்காநல்லூரில் மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.விடிய விடிய நடந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் கைது படலத்தை துவங்கினர். இது சமூக வலைதளங்கான வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவீட்டரில் பரவியதால் இளைஞர்கள், மாணவர்கள், பொங்கி எழுந்தனர்.
நேற்று முன்தினம் சென்னை மெரினாவில் குவிந்த மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை துவக்கினர். முதல்வர் பன்னீர் செல்வம் நேரில் வந்து பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தை கலைக்க மின் சாரம் துண்டிக்கப்பட்டது. அதனையும் மீறி போராட்டக்காரர்கள் தாங்கள் கொண்டு வந்த செல்போனில் உள்ள டார்ச்லைட் வெளிச்சத்தில் போராட்டம் நடத்தினர்.

மூன்றாவது நாளாக போராட்டம்
இந்த போராட்டம் இன்றும் சென்னை மெரிவால் மூன்றாவது நாளாக தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக நேற்று இரவு டில்லி சென்ற முதல்வர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். பேச்சுவார்த்தை எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து டில்லியில் முதல்வர் பன்னீர் செல்வம் சட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் சிலர் கூறுகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகர்களின் ஒற்றுமைக்கு வழிவகுத்த பீட்டா அமைப்புக்கு நன்றி, இருப்பினும், தொடர்ந்து போராடுவோம். வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம். எங்களின் உரிமையில் தலையிட யாருக்கும் தகுதியில்லை என்றனர்.

பல்வேறு அமைப்புகள் ஆதரவு
இந்நி்லையில் போராட்டம் மேலும் வலுவடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் பரவலாகிவருகிறது. இதன் எதிரொலியாக வணிகர்கள் அமைப்புகள், லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம் , பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளன.

நாளை விடுமுறை
போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து நாளை மதுரை, திண்டுக்கல், தேனி ,விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்தம்
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்ககு ஆதரவா மூன்றாவது நாளாக மாணவர்கள், இளைஞர்கள் இரவில் தொடர் முழக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரம் அடைந்து வருவதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடப்பதால் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்லிமிட்டட் இந்தியா... அதிரடி சீனா..! மொபைல் சந்தையில் என்ன நடக்கிறது?

அன்லிமிட்டட் இந்தியா... அதிரடி சீனா..! மொபைல் சந்தையில் என்ன நடக்கிறது?

உங்கள் முதல் மொபைல் என்ன பிராண்ட் என நினைவிருக்கிறதா? நோக்கியா, மோட்டோரோலா, சோனி, சீமென்ஸ் என்பதே பதிலாக இருக்கும். ஜென் இஸட் ஆட்கள் என்றால் ஆப்பிளோ, சேம்சங்கோ இருக்கலாம். இவர்கள் எல்லாம் கோலோச்சிய இந்திய மொபைல் மார்க்கெட்டில் இப்போது விவோ, ரெட்மீ, அஸுஸ், லெனோவா பெயர்களே சூப்பர்ஸ்டார்கள். இந்திய மொபைல் பிராண்ட் ஆன மைக்ரோமேக்ஸ், கார்பன் முதலியவை தங்களின் விற்பனை சரிவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. காரணம், சீன பெருந்தலைகளின் அதிரடி என்ட்ரி.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்திய பிராண்டுகள் அவ்வளவு விற்கவில்லை. திடீரென மொபைல் தேவை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க, அதைச் சரியாகப் பயன்படுத்தி சாம்சங், ஆப்பிள் போன்ற சர்வதேச பிராண்டுகளை வீழ்த்தி, இந்திய பிராண்டுகள் முதல் இடம் பிடித்தன. இன்று விலையையும் வசதிகளையும் வைத்து, சீன நிறுவனங்கள் அதே வழியில் இந்திய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளுகின்றன.
சீன நிறுவனங்கள் இந்திய சந்தையைக் குறிவைக்க பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை இவைதான்.
1. சீனா மார்க்கெட்டின் தன்னிறைவு
138 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் 2010-ம் ஆண்டில் தொடங்கியது. அதன் வேகத்தைக் கண்டு பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் கோடிகளை இறக்க, சில ஆண்டுகளிலே அங்கே மொபைல் சந்தை தன்னிறைவை அடைந்து விற்பனை சரியத் தொடங்கியது. அதனால் தயாரிக்கும் மொபைல்களை சர்வதேச மார்க்கெட்டுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டன. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து மிகப் பெரிய மொபைல் சந்தை இந்தியா. உடனே, அனைத்து சீன நிறுவனங்களும் கைகளை உயர்த்திக்கொண்டு இந்தியாவுக்குள் ஆஜர் ஆகின.
2. இந்தியாவில் மொபைல் விநியோகம் எளிது
அமெரிக்க மொபைல் மார்க்கெட் இந்தியாவைவிட பெரியதுதான். ஆனால், அதன் அதிகமான ஷேர் ஆப்பிள், சாம்சங் போன்ற ஜாம்பவான்கள் கைகளில் இருக்கிறது. மேலும், மொபைல் ஆபரேட்டர்கள் தரும் ஆண்டு ப்ளான்களில்தான் அதிக மொபைல்கள் விற்கின்றன. எனவே, சீன நிறுவனங்களால் அங்கே உள்ளே நுழைவது எளிதான காரியம் அல்ல. ஆனால், இந்தியாவில் இந்தச் சிக்கல்கள் எதுவும் இல்லை.
3. ஆன்லைன் பிரம்மாஸ்திரம்
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே மொபைல்கள் அனுப்புவதில் செலவுகள் அதிகம். டீலர் கமிஷனும் அதிகம். இதை ஒரே ஒரு முடிவில் மாற்றிக்காட்டியது மோட்டோரோலா நிறுவனம். ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல் ஃப்ளிப்கார்டுடன் கைகோத்த மோட்டோராலா, தனது மோட்டோ-ஜி மாடலை ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே வாங்க முடியும் என அறிவித்தது. அட்டகாச விளம்பரங்கள், அசத்தலான வசதிகள், அதிரடி விலை என எல்லாம் சேர்ந்து மக்களை ஃப்ளிப்கார்ட் பக்கம் திரும்பவைத்தது. இந்த முடிவால் இரண்டு நிறுவனங்களுக்குமே வின் - வின் சிச்சுவேஷன். அதன் பிறகு வந்த சீன நிறுவனங்கள் இந்த வழியைப் பின்பற்றி அமேசான், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மட்டுமே மொபைல்களை சந்தைக்குள் கொண்டுவந்தன. இதனால் இடைத்தரகர்கள் செலவு இல்லை. ஆயிரக்கணக்கான மொபைல்களை ஸ்டாக் செய்துவைக்கத் தேவை இல்லை. அதனால் இன்வென்ட்ரி செலவும் கிடையாது. ஆன்லைன் வர்த்தகத்தில் ட்ரெண்ட் எளிதில் கண்டறிய முடியும். அதனால், அடுத்த ஒரு வாரத்துக்கு எவ்வளவு மொபைல்கள் தேவைப்படும் என்பதை அறிந்து, அதை மட்டும் ஷிப்மென்ட் செய்யலாம்.
4.சர்வீஸ் சென்டர்கள்
எலெக்ட்ரானிக் பொருட்கள், அதிகம் பழுதாகும் வாய்ப்பு உடையவை. அதனால், சர்வீஸ் சென்டர்கள் சரியாக அமைவது முக்கியம். சீன மொபைல் நிறுவனங்கள் இதைச் சரியாகப் புரிந்துவைத்திருக்கின்றன. அவர்களது தயாரிப்புச் செலவு குறைவு என்பதால், சர்வீஸுக்குக் கணிசமான தொகையை ஒதுக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் சின்னச் சின்ன மொபைல் சர்வீஸ் நிறுவனங்களுடன் கைகோத்துக்கொள்கிறார்கள். ஒரே சர்வீஸ் சென்டரில் பல சீன பிராண்ட் மொபைல்களை சர்வீஸ் செய்வதை நாம் பார்க்கலாம். பிரச்னை அதிகம் என்றால், மொபைலை மாற்றிக் கொடுக்கவும் இவர்கள் தயங்குவது இல்லை. மைக்ரோமேக்ஸ், லாவா போன்ற இந்திய பிராண்டுகள் தங்களது மதிப்பை இழந்ததற்குக் காரணமே, சரியான சர்வீஸ் வசதி செய்து தராததுதான்.
5. இந்தியாவின் தேவை அதிகம்
இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை.50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களிடம் இன்னமும் ஸ்மார்ட்போன்கள் இல்லை. ஆனால், சீனாவில் இது 90 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் பயனர்கள் கூடிக்கொண்டே வருகிறார்கள். அவர்களின் தேவையை சீன நிறுவனங்கள் பூர்த்திசெய்து தங்களது வாடிக்கையாளர்களாக மாற்றிக்கொள்வது எளிதாக இருக்கிறது.
6. விளம்பரங்கள்
சீன நிறுவனங்களின் விளம்பரங்கள்தான் டாக் ஆஃப் தி டவுன். ஸ்மார்ட்போன் விளம்பரங்களுக்காக ஆண்டுதோறும் 1,200 கோடி ரூபாய் இந்தியாவில் செலவு செய்யப்படுகிறது. இதில் 55 சதவிகிதத்தை விவோ, ஓப்போ, ஜியோனி, லீ ஈகோ ஆகிய நான்கே நிறுவனங்கள் செலவுசெய்கின்றன. ஒவ்வொரு நாளும் நாளிதழ்களின் முதல் பக்கத்தை மொபைல் விளம்பரங்களே ஆக்கிரமிக்கின்றன. ஆன்லைன் மூலமே சீன மொபைல்கள் பெரும்பாலும் விற்கப்படுவதால், ஆன்லைன் விளம்பரங்களும் அசத்துகின்றன.
இந்திய நிறுவனங்களால் சீன நிறுவனங்களின் இந்த அட்டாக்கைச் சமாளிக்க முடிவது இல்லை. சில வருடங்களில் கோடிக்கணக்கான மொபைல்களை விற்றுவிட்டு, திரும்பவும் சொந்த நாட்டுக்கே சென்றாலும் அவர்களுக்கு லாபம்தான். அதனால், குறைவான நாட்களில் அதிக பொருட்களை விற்க விளம்பரங்களில் பணத்தைக் கொட்டுகிறார்கள். இந்த வியாபரத் தந்திரம் இந்திய நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஆனால், அவர்களைச் சமாளிக்க விளம்பரம் செய்தே ஆக வேண்டும்.
7. சீனா- இந்தியாவில் அலைவரிசை ஒன்றே
மொபைல் போன்களுக்கான அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்), ஒவ்வொரு நாட்டுக்கும் மாறும். ஆனால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏறத்தாழ இது ஒரே அளவில்தான் இருக்கின்றன. சீனாவில் 4ஜி நெட்வொர்க் சில ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டது. 4ஜி மொபைல்கள் தயாரிப்பதில் சீன நிறுவனங்கள் அனுபவம் மிக்கவர்கள். எனவே, 4ஜி மொபைல்களைக் குறைந்த விலையில் அவர்களால் கொடுக்க முடிகிறது. தொழில்நுட்பம் அடிப்படையில் சீனாவிலும் இந்தியாவிலும் தேவைப்படும் மொபைல்களில் பெரிய வித்தியாசம் இல்லை.
8. பேட்டன்ட் வாங்குவது இந்தியாவில் எளிது
சீன நிறுவனங்களில் ஒன்று, இரண்டைத் தவிர மற்றவை சர்வதேச சந்தைகளில் தங்களது புராடெக்ட்களுக்கு பேட்டன்ட் வாங்குவது இல்லை. அவர்களது ஆர்& டி விஷயங்களில் பல பிரச்னைகள் உண்டு. அதனால் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளுக்குச் செல்ல அவர்கள் தயங்குகிறார்கள். ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் இது எளிது. அதனால் எந்தக் கவலையும் இல்லாமல், களத்தில் இறங்கிவிட்டார்கள்.
தரம் அடிப்படையில் சீனப் பொருட்கள் மீது எப்போதும் சந்தேகம் உண்டு. போன் சூடாகும்; ஹேங் ஆகும். ஆனால், இதே பிரச்னைகள் இப்போது விலை உயர்ந்த போன்களிலும் வர ஆரம்பித்துவிட்டதால் இதை யாரும் கண்டுகொள்வது இல்லை. சீன மொபைல்கள் சர்வீஸ் ஓ.கே-தான். ஆனால், வாரன்ட்டி முடிந்த பிறகு பார்ட்ஸ் போனால் ரீப்ளேஸ் செய்வது சிரமம்.
மொபைல் என்பது, ஓர் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றவேண்டியது எனப் பரவலாக ஒரு கருத்து பதிந்திருக்கிறது. அதனால், சீன மொபைல்கள் பற்றியக் குறைபாடுகள் பெரிதாகக் கண்டுக்கொள்ளப்படுவது இல்லை.
மொபைலின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்வதால், அதன் திறனும் மேம்படுத்தப்பட வேண்டும். இப்போது 6ஜிபி ரேம் கொண்ட மொபைல்கள் தான் மோஸ்ட் வாண்ட்டட். இந்த மாதம் மட்டும் 5க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் தனது 6ஜிபி மொபைலை அறிமுகப்படுத்துகின்றன. ஒவ்வொரு மொபைலும் அதன் வேகத்தை விட வேகமாக விற்று தீர்கின்றன என்பதுதான் ஆச்சர்யம்.

நன்றி
விகடன்
அரபு வசந்தம், மல்லிகைப் புரட்சி போல இந்தியாவை அதிர வைக்கும் தமிழகத்து "கார்த்திகைப் பூ" புரட்சி!

அரபு வசந்தம், மல்லிகைப் புரட்சி போல இந்தியாவை அதிர வைக்கும் தமிழகத்து "கார்த்திகைப் பூ" புரட்சி!

உலக நாடுகளை உலுக்கிய மல்லிகை புரட்சி, அரபு வசந்தம் போல இந்திய துணைக் கண்டத்தில் ஒரு தேசிய இனத்தின் பண்பாட்டு உரிமையை பாதுகாக்கும் அறவழிப் போராக தமிழகம் தொடங்கி வைத்திருக்கிறது 'கார்த்திகை பூ' புரட்சியை!
துனிசியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் வெடித்தது.. அந்த நாட்டின் தேசிய மலரான மல்லிகைப் பூவின் பெயரால் மல்லிகை புரட்சி என சரித்திரம் எழுதியது. இப்போது இந்திய துணைக் கண்டத்தில் தமிழ்த் தேசிய இனம் தன்னுடைய பண்பாட்டு உரிமையை மீட்பதற்காக பெரும் புரட்சியை தொடங்கி வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டின் தேசிய மலர் செங்காந்தள் மலர் எனப்படும் கார்த்திகை பூ (கண்வலி கிழங்கு செடி பூ). தமிழீழத்தின் தேசிய மலரும் இந்த கார்த்திகை பூதான்.
துனீசியாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அரசியல் உரிமை கோரி போராடி மல்லிகைப் புரட்சி கண்டனர்.. இதோ தமிழகத்துக்கு மாணவர்கள் பல லட்சம் பேர் வீதிக்கு வந்து போராடுவதை ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என சுருக்கிவிடாமல் "கார்த்திகை பூ" புரட்சியாக அழைப்போம்.
துனீசியா மற்றும் அரபுநாடுகளைப் போலவே சமூக வலைதளங்களையே பிரசார ஆயுதமாக்கி வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றனர் தமிழகத்தின் இளைய சமூகம். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னரே இந்தி திணிப்பை எதிர்த்து தாளமுத்து, நடராசன் தொடங்கி ஆயிரமாயிரம் பேர் அறவழிப் போரில் மாண்டு போன மண் தமிழகத்துக்கு மண்.
நாடு விடுதலை அடைவதற்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரில் திருச்சியில் இருந்து கால்நடையாக பெரும் இளைஞர்கள், பெண்கள் படையை சென்னை நோக்கி திரட்டி வந்தார் நகரதூதன் ஏட்டின் ஆசிரியராக இருந்த மணவை ரெ. திருமலைசாமி. இந்த பெரும்படை சென்னை நோக்கி வந்த போது அதன் தளகர்த்தர்கள் பலரும் நடுவழியிலேயே நோய் தாக்கி, இயற்கை தாக்க்கி, ஆற்றை கடந்து வருகையில் என மாண்டுபோயினர்.
ஆனால் சென்னை மெரினாவில் கூடிய பெரும்படையின் மாநாட்டில் தான் நாடு விடுதலை அடைவதற்கு முன்னரே 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை தந்தை பெரியார் பிரகடனம் செய்தார்.
நாடு விடுதலை அடைந்த பின்னர் இந்தியாவின் அரசியல் சாசனத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வர பெரும் போராட்டங்களை நடத்திய மண் தமிழகத்து மண்தான். மீண்டும் இந்தி திணிப்பு வந்தபோது அதை எதிர்த்து தேக்குமர தேகங்களை தீக்கிரையாக்கிய விருகம்பாக்கம் அரங்கநாதன் முதலானோரை படைத்ததும் தமிழகத்து மண்தான்.
தமிழீழ விடுதலைக்காக முதன் முதலாக தமிழகத்து மண்ணில் தீக்குளித்தது அப்துல் ரவூப் எனும் இளைஞர்தான். 7 தமிழர் விடுதலைக்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் தீக்குளித்தது செங்கொடி. இப்படி இந்திய துணைக் கண்டத்தில் தங்களது இன உரிமைகளுக்காக தம்மை வற்புறுத்தி தங்களையே தீக்கிரையாக்கி தங்களையே ஆயுதமாக்கி போராடிய ஒரே இனம் தமிழ் இனம் மட்டுமே.
இப்போது ஏறுதழுவுதல் எங்கள் பண்பாட்டு உரிமை; அதை தடுக்க எவருக்கும் இல்லை உரிமை எனும் முழக்கத்துடன் சமூக வலைதளங்களையே பிரசார களமாக்கி தங்களையே ஆயுதமாக்கி அமைதிஅறவழி புரட்சியில் ஈடுபட்டுள்ளது தமிழகத்து இளைஞர் சமூகம். 21-ம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட முதல் புரட்சி இது.
சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள் வங்கக் கடலை விழுங்கிய ஆழிப்பேரலையாக திரண்டுள்ளனர். தமிழகத்துக்கு நகரத்து மைதானங்கள் எல்லாம் போர்க்கள மையங்களாகிவிட்டன. வீதிகள் தோறும் போர்க்கோலங்கள்.. முழக்கங்கள்..
ஆம்
இந்தியாவின் பிற தேசிய இன மக்கள் அமைதிவழியில் தங்களது பண்பாட்டு உரிமை மீட்பு போராட்டத்துக்கு எப்படி ஆர்த்தெழ வேண்டும் என வழிகாட்டியிருக்கிறது தமிழகத்து 'கார்த்திகை பூ' புரட்சி என்பது நிதர்சனம்!
எம்.ஜி.ஆர் 100 சுவாரஸ்ய தகவல்கள்!

எம்.ஜி.ஆர் 100 சுவாரஸ்ய தகவல்கள்!


1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார். பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர். பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.

2. எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் 'சின்னவர்' என்ற பெயர். அதென்ன சின்னவர்? எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, நாடக உலகில் பெரியவர் என அழைக்கப்பட்டதால்... எம்.ஜி.ஆரை, 'சின்னவர்' என்பார்கள்.
3. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள தாய்வீட்டில் தம் அண்ணனுடன் கூட்டுக்குடித்தனமாக இருந்த எம்.ஜி.ஆர்., தன் முதல் மனைவி சதானந்தவதி இறந்த துக்கத்தால் பின் சில மாதங்களில் ராமாவரம் தோட்டத்துக்கு வரநேர்ந்தது. அங்கும் மினி தியேட்டர், பெரிய நீச்சல்குளம் எனப் பல வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.
4. எம்.ஜி.ஆரை யாரும் கணிக்கமுடியாது. அப்படி இருப்பதையே அவர் விரும்பினார். முதல்வராக இருந்தபோது ஒருமுறை அப்போதைய கவர்னர் தடுக்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவரைப் பார்க்க கிளம்பியவர் என்ன நினைத்தாரோ அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
5. எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.
6. எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.
7. தனக்கு யாரும் மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கும்போது ஜாக்கிரதையாக தன் முகம் வரும்படியும், அதேசமயம் மாலை போடுபவர் பரபரப்பில் தன் தொப்பியை கழற்றிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடனும் மாலை போடுபவரின் கையை அழுந்த பிடித்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்தபின்புதான் அவருடைய கையை விடுவிப்பார். இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை முத்தண்ணா அவர்.
8. பொதுவாக பத்திரிகைகளுக்கு பிரத்யேக பேட்டிக்கு ஒப்புக்கொள்ளும்போது அவர்களிடம் ஒரு நிபந்தனை விதிப்பார். பிரசுரமாவதற்கு முன் எழுதப்பட்ட பேட்டியை தனக்கு ஒருமுறை காட்டியாகவேண்டும் என்று. அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேட்டி. பிரசுரமானபின் கட்டுரையாளர் கருத்தால் தேவையற்ற சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அது. ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தன் இமேஜை அந்தளவுக்கு ஜாக்கிரதையாகக் கையாண்டார் எம்.ஜி.ஆர்.
9. சுமார் அரைநூற்றாண்டு காலம் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த எம்.ஜி.ஆர் வார்த்தையின் முழுவிவரம்... மருதுார் கோபாலமேனன் ராமசந்திரன்.
10. திரையுலகில் தான் பங்கேற்ற அத்தனை துறைகளிலும் சாதனை புரிந்த எம்.ஜி.ஆருக்கு தம் இறுதிக்காலம் வரை ஒரு குறை இருந்தது. அது, கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது. கிட்டத்தட்ட 3 முறை அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடக்கி அது ஆரம்பநிலையிலேயே நின்றுபோனது. படம் எடுத்தால், அதில் தான் வல்லத்தரசனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும் நாட்டியக்கலைஞருமான பத்மா சுப்ரமணியத்தை நடிக்கவைக்கவும் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். இறுதிவரை அது நிறைவேறவில்லை.
11. முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.
12. எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் ஜெயலலிதா, சரோஜாதேவி.
13. எம்.ஜி.ஆர்., காபி, டீ அருந்துவதில்லை. மீன் வகையான உணவுகளுக்கு அவர் தீவிர ரசிகர். படப்பிடிப்பின் இடைவேளையில் ஜீரக தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.
14. எம்.ஜி.ஆருக்கு தன் தாய் மீது அளவற்ற அன்பு உண்டு என்பது உ லகறிந்த விஷயம். தான் சார்ந்த தொடர்பான முக்கிய முடிவுகளை தன் தாயின் படத்துக்கு முன் நின்று சொல்லியே முடிவெடுப்பார். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏதேனும் அசம்பாவிதமாக நடந்தால் மட்டுமே எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவார்.
15. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கடும்மோதலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இந்த இருகட்சிகளும் இணைய முயற்சி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் அப்போது முதல்வர் என்பது கூடுதல் செய்தி. ஒடிசா முதல்வர் பிஜீ பட்நாயக் இந்த இணைப்பு முயற்சியை மேற்கொண்டார். முயற்சி வெற்றிபெற்றால் கட்சியின் தலைவராக கருணாநிதியும் முதல்வராக எம்.ஜி.ஆரும் தொடர்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டது. காலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்து வீட்டுக்குச் சென்ற எம்.ஜி.ஆர் மாலையில் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டார். யாராலும் கணிக்க முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்.
16. எம்.ஜி.ஆரின் அரிய வெள்ளை நிறத்துக்குக் காரணம் அவர் தங்கபஷ்பம் சாப்பிடுவதே என்ற வதந்தி உலவி வந்தது. சென்னையில் நடந்த ஆணழகன் போட்டி ஒன்றில் இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர், “தங்க பஷ்பத்தை குண்டுமுனையில் தொட்டு அதை பாலிலோ, நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படி குண்டூசி முனையைவிடக் கூடுதலாகச் சாப்பிட்டுவிட்டால் மரணம் நேர்ந்துவிடும். இந்த விஷப் பரீட்சையில் யாராவது இறங்குவார்களா'' என்றார்.
17. எம்.ஜி.ஆர் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிநேரத்துக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். தொடர்ந்து ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தபின்னரே அடுத்த வேலையைத் தொடங்குவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் போதிய உடற்பயிற்சிக் கருவிகளை தன்னுடன் எடுத்துச்செல்வார். உடற்பயிற்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்தவர் அவர்.
18. தமிழின் முதல் ஈஸ்ட்மென் கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'
19. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்... காங்கிரஸ் அரசு, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தனக்களித்த பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார் எம்.ஜி.ஆர்.
20. எம்.ஜி.ஆருக்கு பிடித்த தேசியத்தலைவர் சுபாஷ் சந்திரபோஸ். தான் அரசியலுக்கு வரக்காரணமான தலைவர் சுபாஷ் என்று குறிப்பிட்டிருந்தார் ஒருபேட்டியில்.
21. எம்.ஜி.ஆருக்கு நினைவுத்திறன் அதிகம். ஒரே ஒருமுறை அறிமுகமானாலும் அவரைப்பற்றி பல ஆண்டுகள் ஆனப்பின்னரும் சரியாக நினைவில் வைத்திருப்பார்.
22. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க மனம்ஒப்பாத எம்.ஜி.ஆர்., கணேசன் என்ற நாடக நடிகரை அதில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார். நாடகம் வெற்றிபெற்றது. கணேசன் என்ற அந்த நாடக நடிகர் சிவாஜி கணேசன் என்ற பெரும் நடிகரானார்.
23. சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தபோதும் தொடர்ந்து தனது எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மூலம் நாடகங்களை நடத்திவந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய 'இடிந்தகோயில்', 'இன்பக்கனவு' நாடகங்கள் தமிழகத்தில் நடக்காத ஊர்கள் இல்லை.
24. தொலைக்காட்சி தமிழகத்தில் வராத காலகட்டத்திலேயே ''தொலைக்காட்சி என்ற ஒன்று விரைவில் வரும். இது சினிமாவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று 1972-லிலேயே பேசிய தீர்க்கதரசி எம்.ஜி.ஆர்.
25. எம்.ஜி.ஆரை, பலருக்கும் வெறும் சினிமா நடிகர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களையும் கரைத்துக் குடித்தவர் அவர். எத்தனை குழப்பமான காட்சிகளையும் சில நிமிடங்களில் கோர்வையாக எடிட் செய்துவிடுவதில் சாமர்த்தியக்காரர்.
26. எம்.ஜி.ஆருக்கு பிடித்த இயக்குநர் ராஜா சாண்டோ.
27. 1960-களில் எம்.ஜி.ஆர் மக்களுக்காக தன் சொந்த செலவில் இலவச மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். ஆனால் நடைமுறை சிக்கல்களால் அதை தொடரமுடியாமல் போனது.
28. எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர் என்பது பலரும் அறியாத தகவல். 'சமநீதி' என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பல ஆண்டுகள் அதை நடத்தினார்.
29. மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்னாலும் இன்னும் தொடர்ந்து பத்திரிகைகள் வருவது எம்.ஜி.ஆர் ஒருவருக்கே.
30. ''வயதானபின்னும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே'' என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுந்தபோது, ''20 வயதுள்ள ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா...அதேபோல் 50-ஐக் கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்கக்கூடாது. அதுதானே நடிப்பு..நீங்கள் திரையில் பார்க்கும்போது இளைஞனா தோன்றுகிறேனா... இல்லையா என்பதுதான் என் கேள்வி“ என்றார் பொட்டிலடித்தாற்போல்.
31. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி தொடங்கியபின் 1972 அக்டோபர் 29-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர்'' என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.
32. கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தபின் எத்தனை மாச்சர்யங்களுக்கிடையிலும் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எம்.ஜி.ஆர்.
33. பெரும்பாலும் தன் எதிரில் சீனியர்களைத் தவிர மற்றவர்களை கருணாநிதி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர்.
34. எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காத ஒரு விஷயம் குதிரையேற்றமும் விமானப்பயணமும். தவிர்க்கமுடியாமல்தான் சில படங்களில் அவ்வாறு நடித்திருப்பார். விமானப்பயணமும் அப்படியே.
35. தம் இறுதிக்காலத்தில் தம் பால்ய கால சினிமா நண்பர்களை வரவழைத்துச் சந்தித்துப்பேசினார் எம்.ஜி.ஆர்.
36. எம்.ஜி.ஆருக்கு உடலுறுதியைப்போலவே மனஉறுதி அதிகம். அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கானுக்கு பாராட்டுவிழா நடந்தது. அதில் பேசிய கானு, “எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராவது இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் மீண்டிருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை மன உறுதியுடன் அவர் போராடி மீண்டார்” என்றார்.
37. 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே' என தனது படங்களின் தலைப்புகள்கூட பாசிட்டிவ் ஆக மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதுபோல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் எம்.ஜி.ஆர்.
38. எம்.ஜி.ஆருக்கு ராசி எண் 7. பிறந்தது 1917. கதாநாயகனாக நடித்த முதல் படம் வெளியான ஆண்டு 1947. முதல்முறை எம்.எல்.ஏ-வானது 1967. ஆட்சியைப் பிடித்தது 1977. மரணமடைந்தது 1987. அவருடைய காரின் எண் 4777.
39. பொதுவாக தன் உடல்நிலை குறித்த தகவல்களை ரசகியமாக வைத்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். தேவைப்பட்டாலொழிய மருத்துவமனைக்குச் செல்லமாட்டார் அவர். பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களை வீட்டுக்கே வரவழைத்து சிகிச்சை பெற்றுக்கொள்வார்.
40. 'அடிமைப்பெண்' படத்துக்காக ஜெய்ப்பூர் சென்றபோது விளையாட்டாக வித்தியாசமான தொப்பி ஒன்றை அணிந்து நண்பர்களிடம் காட்டினார். தொப்பியில் அவரது தோற்றம் இளமையாக தெரிவதாக நெருக்கமான சிலர் கூறவே அதை வழக்கமாக்கிக்கொண்டார்.
41. எம்.ஜி.ஆரின் புரட் சி அரசியல் பயணம் தொடங்கிய இடம் திருக்கழுக்குன்றம். அங்குதான் முதன்முதலாக கட்சியின் தலைவர்களிடம் கணக்குக்கேட்டு வெளிப்படையாகப் பேசினார். இந்த விவகாரம்தான் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே முரண் பெரிதாகி... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் அளவுக்குக் காரணமானது.
42. ஒருமுறை சிவகாசிக்குச் சென்று சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரது காரை அடையாளங்கண்டுகொண்டு பெண்கள் சூழந்தனர். அவர்களுடைய பலரது கைகளில் கைக்குழந்தைகள். ''காலையில் சாப்பிட்டீர்களா'' என்றார். “இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. அதுதான் மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம்” என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது.
43. எம்.ஜி.ஆர் முப்பிறவி கண்டார் என்பார்கள். சீர்காழியில் நாடகம் ஒன்று நடந்தபோது 150 பவுண்டுக்கும் அதிகமான எடைகொண்ட குண்டுமணி தவறுதலாக அவர் மீது விழுந்து கால் உடைந்தது முதற்பிறவி. 1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டது இரண்டாவது பிறவி. 1984-ல் மூளையில் கட்டி ஏற்பட்டு பக்கவாதம் வரை சென்று உயிர் மீண்டது மூன்றாவது பிறவி.
44. எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் இருந்துபோது வெளியான, 'பாசம்' படத்தில் இறந்துவிடுவதுபோல் காட்சி வந்தது. அதைக் காண முடியாமல் பலர் அந்தப் படத்தைப் பார்க்கவி்ல்லை. படம் தோல்வியைத் தழுவியது.
45. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் 'வாத்தியார்.'
46. நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. சங்கம் தொடங்கியபோது அதன் துணைத்தலைவராக இருந்த அவர், 3 முறை அதன் செயலாளராகவும், ஒருமுறை பொதுச்செயலாளராகவும், இருமுறை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
47. 'நாடோடி மன்னன்' பட வெற்றிக்குப்பின், அதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்ற பெயரில் படம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் ஏனோ அது நின்றுவிட்டது.
48. 'சதி லீலாவதி' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. இதுதவிர சில படங்கள் நிறைவுபெறாமல் கைவிடப்பட்டன. இவற்றில் 'அவசர போலீஸ் 100', 'நல்லதை நாடு கேட்கும்' போன்ற படங்கள் பின்னாளில் வெளியாகின.
49. எம்.ஜி.ஆரின் படங்களில் பெண்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒரே படம் 'இதயக்கனி'.
50. ஜனாதிபதி விருது பெற்ற தமிழின் முதல்படம் எம்.ஜி.ஆர் நடித்த 'மலைக்கள்ளன்'.
51. எம்.ஜி.ஆர் படங்களில் மிகக் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 'தேர்த்திருவிழா'. 16 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது.
52. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சாண்டோ சின்னப்பா. எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்திட்டது இவர்தான்.
53. எம்.ஜி.ஆர் தனக்கு நெருக்கமானவர்களை 'முதலாளி' என்றுதான் அழைப்பார்.
54. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த விளையாட்டு சீட்டு. நெருக்கமானவர்களுடன் விளையாடும்போது தோற்பவர்கள் தங்கள் முகத்தை தலையணையால் கொஞ்ச நேரம் பொத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அவரது பந்தயம்.
55. பொங்கல் மற்றும் நல்ல நாட்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள், நண்பர்களை வரவழைத்துத் தன் கையில் இருப்பதை வாரி வழங்குவார் எம்.ஜி.ஆர்.
56. தமிழின் வெளிநாட்டு தொழில்நுட்பமான ஸ்டிக்கர் போஸ்டரை அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்தான். 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேறியிருந்தார். இதனால் உசுவா பட போஸ்டர்கள் எங்கு ஒட்டினாலும் கிழிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆளும் கட்சியினரின் இந்தச் சதியை முறியடிக்க நடிகர் பாண்டுவை வெளிநாட்டுக்கு அனுப்பி சாதாரணமாகக் கிழித்துவிட முடியாத வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் தொழில்நுட்பத்தைப் பயிலச்செய்து அந்த இயந்திரத்தையும் தருவித்தார். ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழிக்கமுடியாமல் ஆளும் கட்சியினர் திணறினர். 'உலகம் சுற்றும் வாலிபன்' சக்கை போடு போட்டது.
57. தொப்பி, கண்ணாடி, முழங்கை அளவு சட்டை என்று வெளியில் தோன்றினாலும் தன்னை வீட்டில் சந்திப்பவர்கள் முன் கைலி, முண்டா பனியனுடன்தான் காட்சியளிப்பார் எம்.ஜி.ஆர்.
58. தன்னிடம் வேலை செய்பவர்கள் தவறு செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார். அவர்களுக்கு உடனடியாக சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். ஆனால் சம்பளம் தவறாமல் அவர்களுக்குச் சென்றுவிடும். இது தவறு செய்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி அடுத்தமுறை தவறு நேராமல் பார்த்துக்கொள்வர்.
59. எம்.ஜி.ஆர் தன் வாழ்க்கை வரலாற்றை வெவ்வெறு காலகட்டங்களில் இரண்டு பத்திரிகைகளில் எழுதினார். ('ஆனந்த விகடன்', 'சமநீதி') தவிர்க்கவியாத காரணங்களால் எதுவும் முற்றுப்பெறவில்லை.
60. தனது இரண்டாவது மனைவி சதானந்தவதியின் நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் விரதம் மேற்கொள்வார்.
எம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...
61. எம்.ஜி.ஆர் ஒரு தீவிர படிப்பாளி என்பது பலருக்கும் தெரியாத தகவல். தன் வீட்டின் கீழறையில் எம்.ஜி.ஆர் பெரிய நுாலகத்தை நிறுவியிருந்தார். அதில் உலகத்தலைவர்கள் மற்றும் அனைத்து அரியவகை புத்தகங்களையும் சேமித்துவைத்திருந்தார்.
62. எம்.ஜி.ஆரின் முதல் நாடக குரு காளி என்.ரத்தினம். பின்னர் நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி.
63. எம்.ஜி.ஆர் நாடகத்தில் போட்ட முதல்வேஷம், 'லவகுசா' என்னும் நாடகத்தில் போட்ட குஷன் வேஷம். அப்போது அவருக்கு வயது 6.
64. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதற்நாடகம் 'மனோகரா'... மனோகரன் வேடம்.
65. அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் சேர்ந்த ஆண்டு 1952 . அவரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி.
66. வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டால் எம்.ஜி.ஆர் தன் தாயாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அவர் மறைவுக்குப்பின், அவருக்கு தன் வீட்டிலேயே கோயில் ஒன்றை எழுப்பினார்.
67. நடிகர் சங்கம் மூலம் ஒரு நடிப்புப் பயிற்சிக் கல்லுாரியைத் தொடங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆருக்கு இறுதிக்காலம் வரை மனிதில் இருந்த ஓர் ஆசை... அது இறுதிவரை நிறைவேறாதது துரதிர்ஷ்டம்.
68. தான் நடித்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த படம், 'பெற்றால்தான் பிள்ளையா'.. வழக்கமான பாணியிலிருந்து விலகி தான் நடித்த இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தபடம் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
69. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தன் வழக்கமான அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி தன் பிளைமவுத் காரை தானே ஓட்டியபடி கடற்கரைச் சாலையில் பயணிப்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
69. நடிகராக இருந்தபோது தான் வசித்த ராமாவரம் வீட்டிலேயே முதல்வரானபின்னும் தொடர்ந்து வசித்தார் எம்.ஜி.ஆர். சம்பிரதாயத்துக்குக்கூட அந்த வீட்டை மெருகேற்றாமல் எளிமையாக அப்படியே வைத்துக்கொண்டார்.
70. முதல்வரானபின் ஒருசமயம் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது எம்.ஜி.ஆருக்கு. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களாலும், மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்கடியினாலும் அந்த ஆர்வத்தைக் கைவிட்டார். அவர் கைவிட்ட அந்தப் படம், 'உன்னைவிடமாட்டேன்'. அதன் இசையமைப்பாளர் இளையராஜா.
71. தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கபட்ட நடிகர் பாக்யராஜ்.
72. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை 'அம்மு' என்றே அழைப்பார்.
73. எம்.ஜி.ஆர் அறிமுகமான, 'சதிலீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன்.
74. தனது திருமண நாளில் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார். அன்றைய தினம் மனைவி ஜானகி மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே சந்திப்பார். அன்று ஒருநாள் மட்டுமே கைகள் மற்றும் கழுத்தில் நகை அணிந்து காணப்படுவார்.
75. எம்.ஜி.ஆர் வரலாற்று அறிவு நிரம்பியவர். முதல்வராக இருந்த ஒருசமயம், தஞ்சை அரண்மனையைப் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் ''இங்கு சுரங்கப்பாதை ஏதேனும் இருக்கிறதா'' என விசாரித்தார். அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் விடாப்பியடியாக தர்பார் ஹால் அருகே ஓர் இடத்தைக் காட்டித் தோண்டச்செய்தார். ஆச்சர்யம் அங்கு சுரங்கப்பாதை இருந்தது. எம்.ஜி.ஆரின் ஞானத்தை அறிந்து விக்கித்தனர் அதிகாரிகள்.
76. எம்.ஜி.ஆர் தீவிரமான ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பது பலரும் அறியாத தகவல். முக்கியப் போட்டிகள் நடக்கும் சமயம் படப்பிடிப்புக்கு மறக்காமல் டிரான்சிஸ்டர் ஒன்றை எடுத்துச்செல்வார். ஓய்வின்போது அதை காதில் வைத்து ரன்னிங் கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்.
77. படப்பிடிப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது கடைசி நாளன்று அனைவருக்கும் அங்கு பர்சேஸ் செய்ய தன்சொந்த பணத்தைத் தருவார்.
78. படப்பிடிப்பின்போது உணவுவகைகள் தனக்குக் கொடுக்கப்பட்டதுபோலவே யூனிட்டின் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துவார்.
79. சட்டமன்றத்தில் ஒருமுறை துரைமுருகன் எம்.ஜி.ஆரை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டேபோக ஒரு கட்டத்தில், மயக்கமாகி விழப்போனார். எம்.ஜி.ஆர் ஓடோடிச்சென்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சங்கடப்பட்டுப்போனார் துரைமுருகன்.
80. படிக்கும் காலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்ப்பு மகன்போல உடனிருந்தார் துரைமுருகன். அவருடைய படிப்புச்செலவு உள்ளிட்ட செலவுகளை அப்போது கவனித்தவர் எம்.ஜி.ஆர். கல்லூரியின் பாதுகாவலர் என்ற முறையில் எம்.ஜி.ஆரே பலமுறை துரைமுருகனுக்கு கையெழுத்திட்டுள்ளார்.
81. கோவை மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கச்சென்றபோதுதான் கருணாநிதியுடன் அறிமுகம் ஏற்பட்டது எம்.ஜி.ஆருக்கு.
82. 'எங்கள் தங்கம்' படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞருக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில், “ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது“ என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.
83. எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததை சட்டமன்றத்தில் விவாதப்பொருளாக்கிக் கடுமையாக எதிர்த்துப்பேசினார் தி.மு.க உறுப்பினர் துரைமுருகன். தேநீர் இடைவேளையில் அவரை அழைத்த கருணாநிதி, “எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிரக்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே“ என கடிந்துகொண்டார். கூடவே “எம்.ஜி.ஆர் மீது நமக்கு ஆயிரம் மாச்சர்யங்கள் இருந்தாலும் அவரது வள்ளல் குணத்தினை நாம் குறைசொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்” என்று அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
85. நாத்திக கட்சியான தி.மு.க-வில், அண்ணாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொண்டதில்லை. அதற்காக தீவிர ஆத்திகர் என்று சொல்லிவிட முடியாது. தனக்கு மேலே ஒரு சக்தி ஒன்று உண்டு என்பதில் அவர் திடமாக இருந்தார்.
86. திருப்பதிக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கும் 2 முறை சென்றிருக்கிறார். மதுரையில், 'நாடோடி மன்னன்' படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை பின்னாளில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். எம்.ஜி.ஆரின் படுக்கை அறையில் எப்போதும் ஒரு இயேசு சிலை இருந்தது.
87. மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில், ''எதிர்க்கட்சிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அ.தி.மு.க-வினர் எல்லோரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும்'' என்று அவர் பேசிய பேச்சு அரசியலை பரபரப்பாக்கியது அப்போது.
88. தமிழ்ப்பட உலகின் சாதனை என்னவென்று ஒருமுறை கேள்வி எழுப்பபட்டபோது, “தமிழ் நடிகர்களைக் கொண்டு இந்தியில் 'சந்திரலேகா' என்ற படத்தை எடுத்து உலக மக்கள் அனைவரின் உதடுகளிலும் உள்ளங்களிலும் இடம்பெறச்செய்த எஸ்.எஸ்.வாசனின் செயல்'' என்று குறிப்பிட்டார்.
89. அரசியலில் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர். ''எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்பார்.
90. சினிமாவின் ஆரம்பகாலங்கில் எம்.ஜி.ஆர் இயற்கையாகவே அழுது நடித்தார். ஆனால், பிற்காலத்தில் லைட்டிங் அதிகம் பயன்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் கண்ணீர் காய்ந்துவிடுவதால் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தார்.
91. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நடிகர் என்.டி.ராமாராவ், 'தன் குரு... வழிகாட்டி' என்று எம்.ஜி.ஆரைத்தான் குறிப்பிட்டார்.
92. கட்சியைவிட்டு சிலர் வெளியேறிய சமயம், ''கட்சியினர் அனைவரும் அ.தி.மு.க கொடியை பச்சைக்குத்திக்கொள்ள வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். முதல் ஆளாக தானும் குத்திக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்த அதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.
93. எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'கூண்டுக்கிளி'. படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களிடையே எழுந்த எதிர்ப்பால் அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை இருவருமே தவிர்த்தனர்.
94. எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.
95. தன் இறப்புக்குப் பின் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தை காதுகேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதிவைத்தார் எம்.ஜி.ஆர்.
96. அண்ணாவின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி', 'நல்லவன் வாழ்வான்' ஆகியவை.
97. எம்.ஜி.ஆர் தன் வீட்டில் கரடிக்குட்டி ஒன்றையும் பெரிய சிங்கம் ஒன்றையும் வளர்த்தார். வீட்டில் சிகிச்சையின்போது கரடி எதிர்பாராதவிதமாக இறந்தது. பின்னாளில் வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்னை எழுப்பியதால் சிங்கத்தையும் வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அங்கு இறந்தபின் அதைத் திரும்பப்பெற்று தன் வீட்டில் அறிவியல்முறையில் பாதுகாத்துவைத்திருந்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் பாடம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
98. எம்.ஜி.ஆரின் 100-வது படம் 'ஒளிவிளக்கு'. அதை தயாரித்தது ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.
99. படப்பிடிப்புத் தளங்களில் அந்நாளில் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்கள் யாரையாவது கண்டால் ஓடிப்போய் நலம் விசாரிப்பார். மேலும் அவருடைய குறைகளைக் கேட்டறிவார்.
100. படப்பிடிப்பின்போது தனக்கு நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பினால் தனியே சாப்பிட விரும்பமாட்டார். தளத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து தருவார்.
நன்றி
விகடன்
ஜெயலலிதா பிறந்த நாளில் அடுத்த கட்ட அறிவிப்பு: ஜெ.தீபா பேட்டி

ஜெயலலிதா பிறந்த நாளில் அடுத்த கட்ட அறிவிப்பு: ஜெ.தீபா பேட்டி

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
முதலில், சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தீபா. அதன் பின்னர், ஆதரவாளர்கள் பலர் சூழ்ந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடுவேன் என தீபா தெரிவித்தார். மக்கள் கருத்தை அறிந்த பின் அரசியலுக்கு வருவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற ஐஐஎஸ்சி-யில் நீங்கள் சேரணுமா...?

உலகப் புகழ்பெற்ற ஐஐஎஸ்சி-யில் நீங்கள் சேரணுமா...?

உலகப் புகழ்வாய்ந்த உயர்கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் (ஐஐஎஸ்சி) சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனம், எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் படிப்புக்கு ஏற்ற துறையில் நான்கு ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 6 ஆகும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்க www.iisc.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
5 ஆண்டு எம்எஸ்சி ஒருங்கிணைந்த படிப்பில் சேர வழிவகை செய்யும் ‘நெஸ்ட்’

5 ஆண்டு எம்எஸ்சி ஒருங்கிணைந்த படிப்பில் சேர வழிவகை செய்யும் ‘நெஸ்ட்’

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. படிப்பில் சேர வகை செய்கிறது ‘நெஸ்ட்’ நுழைவுத் தேர்வு (National Entrance Screening Test-NEST).
‘நெஸ்ட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அடிப்படை அறிவியல் சீர்மிகு மையத்தில் (Centre for Excellence in Basic Science) ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. படிப்புகளில் (உயிரியல், வேதியியல், கணிதம்) சேர்ந்து பயில முடியும்.
இந்த ஒருங்கிணைந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் புராஜெக்ட் பணிகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். மத்திய அரசின் ‘இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நெஸ்ட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களை எடுத்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் என்றால் 55 சதவீத மதிப்பெண் போதும்.
கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்களும், 2017-ல் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 1.8.1997 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.
புவனேஸ்வரம் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 170 இடங்களும், மும்பை பல்கலைக்கழகத்தில் செயல்படும் அடிப்படை அறிவியல் சீர்மிகு மையத்தில் 45 இடங்களும் உள்ளன.
நெஸ்ட் நுழைவுத் தேர்வுக்கு www.nestexam.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மார்ச் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வு மே மாதம் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்படும்.
இளமையாக காட்டும் மாதுளை பச்சைபயிறு சாலட்

இளமையாக காட்டும் மாதுளை பச்சைபயிறு சாலட்


மாதுளம், பச்சைபயிரில் அனைத்து வகையான ஊட்டசத்துகள் அடங்கியுள்ளன. மாதுளம் பழம் சாப்பிடுவதால் சுருக்கத்தைப் போக்கி இளமையாக காட்டும். உடல் எடையை குறைப்பதற்கு பச்சை பயிறு மிகவும் உதவுகிறது. இதனால், மாதுளம், பச்சைபயிறு சாலட் மிகவும் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. இதை தினமும் காலையில் உணவாக இதை சாப்பிடலாம். உடலில் சர்க்கரையின் அளவையும் சீராக்கும்.
தேவையான பொருட்கள்
கடுகு -டீஸ்பூன்
உப்பு -போதுமான அளவு
சீரகம் -1 டீஸ்பூன்
பச்சைபயிறு - 1 கப்
மாதுளை விதைகள் - 1 கப்
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு
எண்ணெய் - போதுமான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முளைகட்டிய பச்சை பயிறு, மாதுளை விதைகள், வேர்க்கடலை பொடி, கரம் மசாலா, கொத்தமல்லி இலை, தேவையான அளவிற்கு உப்பைச் சேர்த்து சாலட்டை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு, எலுமிச்சை சாற்றை பிழிந்து விட வேண்டும்.
பின்னர், அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம், கடுகு போட்டு பொரிந்ததும் சாலட்டில் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
ஆரோக்கியம் மற்றும் சுவையான மாதுளை பச்சைபயிறு சாலட் ரெடி!!!
ஜெ. தீபா புதிய கட்சி குறித்து இன்னும் சிறிது ...

ஜெ. தீபா புதிய கட்சி குறித்து இன்னும் சிறிது ...

Political

தமிழக முதல்வராகவும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து அவரது அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் புகழை பரப்பவும், தனது அத்தையின் மக்கள் பணியை தொடர அரசியலுக்கு வர இருப்பதாக கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதிமுகவினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தினமும் பலர் தீபாவை சந்தித்து அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தி. நகரில் உள்ள தனது வீட்டின் முன்னர் குவியும் ஆதரவாளர்களிடம் பேசிய தீபா தான் நிச்சயம் விரைவில் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறினார்.
அதிமுக நிறுவனரான எம். ஜி. ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக தீபா கூறினார். இன்று முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆரின் 100-வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருப்பதால்  இன்னும் சிறிது நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதிய கட்சி குறித்து அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனையடுத்து தீபா வீட்டு முன் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் தீபா ஆதரவாளர்கள் மத்தியில் பேசுவார் என தகவல்கள் வருகின்றன.
இதனையடுத்து தீபா வீடு உள்ள சாலையில் போக்குவரத்து நிறும்தம் செய்யப்பட்டுள்ளது

Political. 
எலுமிச்சை பழத்தை ஏன் வீட்டின் மூலையில் வைக்கிறோம் என்னும் ரகசியம் தெரியுமா?

எலுமிச்சை பழத்தை ஏன் வீட்டின் மூலையில் வைக்கிறோம் என்னும் ரகசியம் தெரியுமா?

எலுமிச்சை பழமானது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவதற்குப் பயன்படுகிறது.
எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, வீட்டில் வைப்பதால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், உடல்நலக் குறைபாடுகள் வராமலும் காத்துக் கொள்ள முடிகிறது.
அப்படி வீட்டின் மூலையில், எலுமிச்சை பழத்தினை நறுக்கி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் தூங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அந்த குறிப்பிட்ட நோய் தொற்றுகள் மேலும் அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.
எலுமிச்சை பழத்தை நாம் உறங்கும் அறையில் அறுத்து வைப்பதால், அதன் நறுமணம் அரை முழுவதும் பரவுகிறது.
இந்த நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்குவதால் நுரையீரலின் செயல்திறன் மற்றும் மூச்சு தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளை குறைக்கிறது.
எலுமிச்சை பழத்தின் நீரை பருகுகினால், நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உடல் நலனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
நம் உடம்பில் உள்ள வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது.
எலுமிச்சை தோலை வைத்து முழங்கை, முழங்கால் பகுதிகளில் தேய்த்துக் குளிப்பதால், முழுமையாக சுத்தத்தை தருகிறது. மேலும், கருவளையம், பருக்கள் போன்ற பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
எம்ஜிஆர்.,100 : முதல்வர் துவக்கி வைக்கிறார்

எம்ஜிஆர்.,100 : முதல்வர் துவக்கி வைக்கிறார்


மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், இதயக்கனி, புரட்சித் தலைவர், கொடைவள்ளல் என்றெல்லாம் அவரது ரசிகர்களால் வாயார புகழப்பட்டவர் மறைந்த முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆர். எம்ஜிஆர்-ன் 100வது பிறந்தநாள் நாளை(ஜன., 17-ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதிமுக., கட்சியிலும் சரி, திரையுலகத்திலும் சரி எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட உள்ளனர். குறிப்பாக தமிழ் சினிமா சார்பில் எம்ஜிஆரின் பிறந்தநாளை ஆண்டு முழுக்க கொண்டாட உள்ளனர். அதன் ஒருபகுதியாக நாளை சென்னை அபிராமி தியேட்டரில் எம்ஜிஆர்., நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், நடிகர் சங்கம், கில்டு, பெப்சி உள்ளிட்ட அனைத்தும் சங்கங்களும் இணைந்து இந்த விழாவை நடத்துகிறார்கள். இந்த விழாவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். எம்ஜிஆர்., திறந்து வைத்த தியேட்டர் அபிராமி என்பதால் இங்கு விழாவை நடத்துகிறார்கள். தொடர்ந்து எம்ஜிஆர்., நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து திரையுலகினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சில சுவாரசிய தகவல். "சக நடிகர்கள் மீது அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆ"  வீரப்பன் தயாரித்து சத்யா மூவிஸ் பேனரில் வெளிவந்த திரைப்படம் கண்ணன் என் காதலன்". படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப்போல் நடிப்பார். ஒருநாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர் புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும் போது இயக்குநரிடம் மதியம் என்ன காட்சி எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டார். சக்கர நாற்காலியில் இருந்து மாடிப்படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி என்ற இயக்குநரிடம் இருந்து பதில் வந்ததும் காரில் ஏறப்போன எம் ஜி ஆர் இறங்கிவிட்டார்.
அது ரிஸ்க்கான காட்சி நானும் உடன் இருக்கிறேன் அந்தப்பெண் (ஜெயலலிதா) விழுந்துவிட்டால் என்ன ஆவது? என்று கூறி அவரும் அங்கேயே இருந்துவிட்டார். படியில் உருள்வது டூப் தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும் சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார். எனவே முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்திற்கு மேல் நகர முடியாதபடி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர். ஒத்திகையின் போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர்., தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து அதற்கு மேல் நாற்காலி உருண்டு விடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒருமுறைக்கு பல முறை உறுதி செய்த பின்னர் தான் ஜெயலலிதா நடித்த அந்த காட்சி படமாக்கப்பட்டது. அந்த அளவு உடன் நடிப்பவர்கள் மற்றும் ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
கட்சி கொடியை படத்தில் தைரியமாக காண்பித்தவர் எம்ஜிஆர்.,
தி.மு.க.வில் இருந்த போது அக்கட்சியின் கொடியை திரையில் காண்பிக்க செய்து பெருமை சேர்த்தவர். அவரே தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்து வெளியான "நாடோடி மன்னன்" திரைப்படத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அக்கட்சியின் கொடியை ஏந்தியபடி திரும்புவது போல அமைத்து அதை தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் லோகோ வாக அமைத்திருந்தார். அவரது படங்களில் அறிஞர் அண்ணாதுரையை பற்றியும் கட்சியின் கொள்கைகள் பற்றிய வசனங்களும் பாடல்களும் இடம் பிடித்தன.
30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு

30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு



சென்னை : இனி சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு ரயிலில் வெறும் 30 நிமிடங்களில் சென்று விடலாம். நம்புங்கள்...இது உண்மை தான்.

ைஹப்பர் லுாப்:

அமெரிக்காவைச் சேர்ந்த ஹைப்பர்லூப் என்ற நிறுவனம் அதிவிரைவு ரயில் திட்டத்தை இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இரு நகரங்களுக்கும் இடையே மேம்பாலம் அமைத்து, அதில் பெரிய குழாய் போன்ற அமைப்பிற்குள் தண்டவாளம் அமையும்.

இதில் மணிக்கு 1200 கி.மீ., தூரம் பயணிக்கும் அதிவிரைவு ரயில் இயக்கப்படும். முதல் கட்டமாக இந்த திட்டத்தை சென்னை - பெங்களூரு இடையே நிறைவேற்ற இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் வெறும் 30 நிமிடங்களில் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு செல்லலாம்.

ஜப்பான் மற்றும் சீன வல்லுநர் குழுக்களைக் கொண்டு இத்திட்டத்திற்கான பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஹைப்பர்லூப் நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டில், சென்னை - பெங்களூரு, சென்னை - மும்பை, புனே - மும்பை, பெங்களூரு - திருவனந்தபுரம், மும்பை - டில்லி ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ரயில் தட குழாயின் மேற்பகுதியில் சோலார் தகடுகளும், மேம்பால தூண்களில் காற்றாலைகளும் பொறுத்தப்பட உள்ளன. காந்தப்புல ஆற்றலின் மூலம் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஜனவரி 20 க்கு மேல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

தமிழகத்தில் ஜனவரி 20 க்கு மேல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

ஜனவரி 20 க்கு மேல் தமிழகத்தில் 100 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘தமிழக விவசாயிகளின் வேதனை கலந்த மழை இரைஞ்சுதல் கடவுளின் காதுகளில் விழுந்திருக்கலாம். ஏனெனில் ஜனவரி மாதத்தின் கடைசி 10 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு உண்டு. தமிழக விவசாயிகளுக்கு விரும்பத் தகுந்த மழைப்பொழிவைத் தரும் ஆற்றல் மிக்க வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வானிலை நிலைய அறிவிப்புகளின் படி பொய்த்துப் போன பின்னும். சைபீரியன் ஹை இப்போதும் வலிமையுடன் இருப்பதால் மேற்கு பசிபிக் பருவக் காற்று தற்போது மேலும் வலுப்பெற்று வங்கக் கடலில் ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஜனவரி 20 க்கு மேல் முந்தைய மழை வறட்சி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 100 மிமீ அளவில் நீடித்த மழை நிச்சயம்’ என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன். தமிழக மழைப் பதிவு வரலாற்றில் இதற்கு முந்தைய வறட்சி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிக மழைப்பொழிவு என்பது தமிழ்நாடு வெதர்மேனின் கணிப்பு.

ஏடிஎம்களில் இனி தினசரி ரூ.10,000 வரை எடுக்கலாம்

ஏடிஎம்களில் இனி தினசரி ரூ.10,000 வரை எடுக்கலாம்

டெல்லி: இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10000 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
திவாகரன் பேச்சால் வெடித்தது கலகக் குரல்! மூத்த தலைவர்கள் போர்க்கொடியால் உடைகிறது அதிமுக?

திவாகரன் பேச்சால் வெடித்தது கலகக் குரல்! மூத்த தலைவர்கள் போர்க்கொடியால் உடைகிறது அதிமுக?

அதிமுகவுக்கு உரிமை கோரும் வகையில் சசிகலாவின் தம்பி திவாகரன் பேசிய பேச்சு அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, திவாகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதிமுக உடைவது தவிர்க்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றால் அக்கட்சி உடைவது உறுதி என கூறப்பட்டு வந்தது. தற்போது சசிகலா அதிமுக பொதுச்செயலராக பதவியேற்று 15 நாட்களான நிலையில் கலகக் குரல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது இருந்தே தாங்கள்தான் பாதுகாத்து வருகிறோம் என சசிகலாவின் தம்பி திவாகரன் பேசிய பேச்சால்தான் இந்த போர்க்கொடி எழுந்துள்ளது. திவாகரன் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத திவாகரனின் பேச்சு கொந்தளிக்க செய்கிறது எனவும் கேபிமுனுசாமி கூறியுள்ளார். ஏற்கனவே அதிமுகவின் மூத்த தலைவர்கள் கேபிமுனுசாமி, பிஹெச் பாண்டியன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் சசிகலாவின் ஆதிக்கம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று புதிய அரசியல் கட்சியை தொடங்கும் முடிவை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவிக்க உள்ளார். இந்த சூழலில் கேபி முனுசாமி பகிரங்கமாக சசிகலா குடும்பத்துக்கு எதிராக கலககக் குரல் எழுப்பியிருக்கிறார்.
கேபி முனுசாமியின் கலகக் குரல் அதிமுக உடையக் கூடும் என்பதற்காக பிள்ளையார் சுழி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மன்னார்குடி கோஷ்டியின் ஆதிக்கம் தலைதூக்கும்; அதிமுக உடைவது தவிர்க்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.