ஜெ.,வுக்கு என்.எஸ்.ஜி., பாதுகாப்பை விலக்கியது யார்? கேள்விகளால் நிலை குலையும் மத்திய உள்துறை

ஜெ.,வுக்கு என்.எஸ்.ஜி., பாதுகாப்பை விலக்கியது யார்? கேள்விகளால் நிலை குலையும் மத்திய உள்துறை


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எண்ணற்ற மர்மங்கள் புதைந்து கிடப்பதாக, அக்கட்சியின் முன்ணணி பிரமுகர்கள் நாள்தோறும், ஊடகங்கள் வாயிலாக, தங்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்தான், முதன் முதலில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பூதம் கிளப்பினார். லேட்டஸ்ட்டாக அவர் எழுப்பி இருக்கும் சந்தேகம், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பூனைப் படை பாதுகாப்பு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, 75 நாட்களும் அந்த பக்கம் எட்டியே பார்க்காதது ஏன் என்பது குறித்துத்தான்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரையில், போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்காக பாதுகாப்பாக நின்றவர்கள், அவர் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோவுக்கு கிளபியதும், கிளம்பியவர்கள், அவர் இறந்தும் கூட எட்டிப் பார்க்கவில்லை.
இசட் பிளஸ் பிரிவு
ஜெயலலிதாவின் உயிருக்கு விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில தீவிரவாத இயக்கத்தினர் மூலமாக, எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று மத்திய உள்துறைக்கு கிடைத்த தகவல்களுக்குப் பின்தான், மத்திய அரசு அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்துதான், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் தமிழகத்துக்கு வந்து, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்கினர். அவர்கள் உடை, கருப்பாக இருப்பதால், அந்த படையினரை கருப்புப் பூனைப் படையினர் என அழைத்து வந்தனர். தமிழகத்தில், ஜெயலலிதாவைத் தவிர, இந்த பாதுகாப்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கறுப்புப் பூனை படை
இந்நிலையில் கருப்புப் பூனைப்படையின் பணிகள் என்னன்ன என்பது குறித்து, மத்திய அரசு வகுத்துக் கொடுத்திருக்கும் விதிகள் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை சட்டங்களை மேற்கோள்காட்டி, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட கறுப்புப் பூனை படை தனது பணிகளை சரிவர செய்யவில்லை என்று பி.எச்.பாண்டியன் சந்தேகம் கிளப்பிக் கூறியதாவது:
உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே, இந்த கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இப்பாதுகாப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள், 24 மணி நேரமும், குறிப்பிட்ட முக்கிய பிரமுகர் அருகில் நிழல் போல இருந்து, அவரை பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பில் உள்ள முக்கியப் பிரமுகருக்கு, அவர் வசிக்கும் இடத்திற்கு உள்ளேயும்; வெளியேயும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்பதால், வசிக்கும் இடத்துக்கு உள்ளேயும் வெளியேயும், இந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இருப்பர்.
அப்பல்லோ வந்திருக்க வேண்டும்.
அந்த வகையில் பார்க்கும்போது, ஜெயலலிதாவை அப்பல்லோவில் சேர்க்க முடிவெடுத்து, ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர். ஆனால், அந்தத் தகவல் கறுப்பு பூனைப் படையினருக்கு சொல்லப்பட்டிருந்தால், ஆம்புலன்சுடன், அவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக 75 நாட்களும், கூடவே இருந்து பாதுகாப்பளித்திருக்க வேண்டும்.
ஆனால் செப்டம்பர் 22 முதல் இப்படையினரின் நடமாட்டம் போயஸ்கார்டனிலோ அல்லது அப்பல்லோவிலோ இல்லை. கறுப்புப் பூனை படை இருக்க வேண்டிய இடத்தில், மன்னார்குடி கும்பலால் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் செக்யூரிட்டிகள், வலம் வரச் செய்யப்பட்டனர்.
அப்படியென்றால், ஜெயலலிதா அப்பல்லோவிற்கு அழைத்து வரப்பட்டதும், கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பை விலக்கி, மத்திய அரசின் உள்துறை, ஜெயலலிதாவுக்கான பாதுகாப்பை, எழுத்துப்பூர்வமாக திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
ஆக, ஜெயலலிதாவுக்கு அருகில் இருந்தவர்களின் உத்தரவுபடியே, ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக வந்த கறுப்புப் பூனைப் படையினர், தங்களை பாதுகாப்புப் பணியில் இருந்து முழுவதுமாக விலக்கிக் கொண்டு, அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள, சிந்தாதிரிப்பேட்டை முகாமில் தங்கியிருந்திருக்க வேண்டும்.சட்டப்படி இப்படி செய்ய முடியுமா என்றால், முடியாது. என்று பி.எச்.பாண்டியன் கூறினார்.
அவரே மேலும் கூறியதாவது:
நேசனல் செக்யூரிட்டி கார்டு ஆக்ட் 1986ல் உள்ள பிரிவுகள் 15, 18 ,43 என்ன சொல்கிறது தெரியுமா? உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள முக்கியப் பிரமுகரின் பாதுகாப்பில் உள்ள படையின,ர் 24 மணி நேரமும் கண்ணை இமைகாப்பது போல, அவரைப் பாதுகாக்க வேண்டும். தங்கள் பாதுகாப்புப் பணியில் இருந்து தவறினாலோ, அல்லது வெளியில் உள்ள சட்ட விரோதமான கும்பலின் பேச்சைக் கேட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடாமல் விலகியிருந்தாலோ, அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டால், மரண தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது.
அப்படிப் பார்க்கும் போது எழுத்துப்பூர்வமான உத்தரவு வராமல், ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கறுப்புப் பூனைப் படை அஜாக்கிரதையாக இருந்தது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நிச்சயம் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டி வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் வழங்கப்பட்டு வரும், இசட் பிளஸ் பாதுகாப்பின் பின்னணி குறித்து மத்திய உள்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
1986ல், தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கான சட்டம் உருவாக்கப்பட்ட போதிலும், இது மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட்டது 1989ல் பிரதமராக இருந்த வி.பி.சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சையது மகளான, தற்போதைய காஷ்மீர் முதல்வர் மெகபூபாவை. தீவிரவாதிகள் பணயக் கைதியாகக் கடத்திச் சென்றனர். அதன் பின்தான் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பு கருதி, என்.எஸ்.ஜி., பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனால் பொது வாழ்க்கையில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள், அச்சுறுத்தல் ஏதும் இல்லாமல், தைரியமாக செயல்படும் வகையிலேயே, இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்படிதான், இந்த பாதுகாப்பு ஜெயலலிதாவுக்கும் வழங்கப்பட்டது.
ஜெயலலிதா உயர் பாதுகாப்பில் இருந்த போதும், அந்த பாதுகாப்பு எதுவும் இல்லாமல், ஆம்புலன்சில் அப்பல்லோவுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அந்த ஆம்புலன்ஸ் நேராக, அப்பல்லோவுக்குத்தான் சென்றது என்று யாரும் சொல்ல முடியாது. அப்படியென்றால், ஆம்புலன்ஸ் வேறு எங்கும் சென்று விட்டு, பின், அப்பல்லோவுக்கு வந்ததா? கறுப்புப் பூனைப் படையினர், ஆம்புலன்ஸ் பின்னாலேயே பாதுகாப்புக்கு வந்திருந்தால், இந்த சந்தேகமெல்லாம் எழுந்திருக்க வாய்ப்பில்லை.
அதுபோல போயஸ் தோட்டத்தின், அனைத்து சி.சி.டி.வி., கேமராக்களும் இயங்கியிருந்தால், ஜெயலலிதா எத்தனை மணிக்கு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார் என்பது தெரிய வந்திருக்கும். அப்பல்லோவில் உள்ள சி.சி.டி.வி., இயங்கி இருந்தாலும், அதை கண்டறிந்து விடலாம். ஆம்புலன்ஸ் எத்தனை மணிக்கு அப்பல்லோவுக்கு வந்தது? ஆம்புலன்சில் ஜெயலலிதா என்ன நிலையில் இருந்தார் என்பதெல்லாம் தெரிந்திருக்கும். அதெல்லாம் இல்லாததுதான், கிரிமினல்களின் மூளை, பலமாக இயங்கி இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆக, கறுப்புப் பூனைப் படையை, திட்டமிட்டே, அப்பல்லோவுக்கு வரமால் செய்திருக்கின்றனர்.
அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை, கறுப்பு பூனைப் படை பாதுகாப்பில் இல்லாததை பயன்படுத்தி. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். உருவாக்கப்பட்ட அந்த வாய்ப்பைப் பயன்படுத்திகூட, ஜெயலலிதா உயிருக்கு, செயற்கையாக ஒரு ஆபத்தை உருவாக்கியிருக்கலாம்.
இப்படியெல்லாம் பொதுமக்களிடமும் சந்தேகங்கள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம், தீர்க்க வேண்டிய கடமை, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ளது.இவ்வாறு பி.எச்.பாண்டியன் கூறினார்.
இதற்கிடையில், தேசிய பாதுகாப்புப் படையின் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை வைத்து, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.,(பன்னீர்செல்வம் அணி)பொறுப்பாளரும், சிவகாசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஜெ.பாலகங்காதரன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேள்விகளைக் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடித விவரம்:

1)தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, என்.எஸ்.ஜி., பாதுகாப்பு, அவர் இறந்து போகும் நிலை வரை இருந்தததா?
அல்லது செப்டம்பர் 22 அன்று, இரவுடன் விலக்கிக் கொள்ளப்பட்டதா? 2)பாதுகாப்பு, அவரது மறைவு வரை தொடர்ந்தது என்றால், என்ன காரணத்தால், செப்டம்பர் 22 முதல் அவர் மறைந்த டிசம்பர் 5 வரை பாதுகாப்பு பணியில் கறுப்புப் பூனைப் படையினர் ஈடுபடவில்லை?
3) செப்டம்பர் 22 முதல் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது என்றால், அதற்கு உத்தரவிட்ட அலுவலரின் பெயரும், அவரது பதவியின் பெயரும், அந்த உத்தரவின் நகலும் தேவை.
4) ஜெயலிதாவின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது உண்மையானால், அதற்கான காரணம் என்ன?
இவ்வாறு அந்தக் கடிதம் மூலம் கேட்கப்பட்டுள்ளது.
இந்தக் கேள்விகளுக்கு தகுந்த பதில் கிடைத்தவுடன் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட, ஓ.பி.எஸ்., அணி முடிவு செய்துள்ளது. கறுப்புப் பூனை படை வாபஸ் ஆனது குறித்த உண்மைத் தகவல்கள் வெளியாகும் பட்சத்தில், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும் என, பன்னீர்செல்வம் தரப்பினர் உற்சாகமாக கூறி வருகின்றனர்.

ரயில் கட்டணத்தை உயர்த்த சி.ஏ.ஜி., பரிந்துரை

ரயில் கட்டணத்தை உயர்த்த சி.ஏ.ஜி., பரிந்துரை


புதுடில்லி:செயல்பாட்டு செலவினங்களை ஈடு செய்யும் வகையில், ரயில் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தலாம் என, ரயில்வே அமைச்சகத்துக்கு, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, சி.ஏ.ஜி.,யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ரயில்வேயின் செயல்பாட்டு செலவை ஈடுகட்டும் வகையில்,
பயணிகள் ரயில் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை படிப்படியாக உயர்த்த லாம். அதுபோலவே, புறநகர் ரயில் சேவைக்கான கட்டணங்களிலும் மாற்றம் செய்யவேண்டும்.
மேலும், கட்டண சலுகை அளிக்கும் வகையில் கொடுக்கப்படும் ரயில்வே பாஸ்களுக்கான கட்டணத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். ரயிலில் பல்வேறு பிரிவினருக்கு அளிக்கப்படும் கட்டண சலுகைகளையும் குறைக்க வேண்டும். ரயில்வேயின் வருவாயை உயர்த்தும் வகையிலும், செயல்பாட்டு செலவுகளை ஈடு செய்யும் வகையிலும், இந்த கட்டணங்களை படிப்படியாக உயர்த்தவேண்டும்.
இத்துடன், ரயில்வேயின் பணித் திறனை மேம்படுத் தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கணக்குகளில் செய்யப்படும் மோசடிகளையும் தடுக்க வேண்டும். கடந்த, 2010 - 11 மற்றும், 2014 - 15ம்நிதியாண்டு களில், 3,548 கோடி ரூபாய் மதிப்புள்ள, 560 கணக்கு
தவறுகள், தவறான பிரிவுகளின் கீழ் கணக்கு காட்டியது போன்ற தவறுகள் நடந்துள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும்.
சரக்கு மற்றும் பயணிகள் ரயில் கட்டண வளர்ச்சியும் குறைவாக உள்ளது. இதை உயர்த் திடதேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உ.பி. முன்னிலை நிலவரம்: மலர்ந்தது தாமரை; சரிந்தது சைக்கிள்

உ.பி. முன்னிலை நிலவரம்: மலர்ந்தது தாமரை; சரிந்தது சைக்கிள்


லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேசத்தில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
ஆளும் சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் 20 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

கடனை ஒரே தவணையில் அடைக்க தயார்: லண்டனில் உள்ள மல்லையா ட்விட்டரில் தகவல்

கடனை ஒரே தவணையில் அடைக்க தயார்: லண்டனில் உள்ள மல்லையா ட்விட்டரில் தகவல்

லண்டன்: வங்கிகளில் வாங்கிய கடனை ஒரே தவணையில் அடைக்க தான் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார். வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையா, ட்விட்டரில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார். நூற்றுக்கணக்கான கடனாளிகள் ஒரே தவணையில் கடனை திருப்பி செலுத்தியுள்ளபோது தனக்கு மட்டும் அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்று அவர் வினவியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் தான் இதனை தெரிவித்தபோது வங்கிகள் அதை பரிசீலிக்க மறுத்துவிட்டதாக மல்லையா கூறியுள்ளார்.
நியாயமான அடிப்படையில் கடனை திருப்பி செலுத்த பேச்சுவார்த்தைக்கு தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் தலையிட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பது தனது விருப்பம் என மல்லையா கூறியுள்ளார். எல்லா நீதிமன்றங்களையும் தான் மதிப்பதாக கூறியுள்ள அவர், நியாயமான விசாரணையின்றி மத்திய அரசு தன்னை குற்றவாளியாக கருதுகிறது என குறிப்பிட்டுள்ளார். தனக்கு எதிராக அரசு கொண்டிருக்கும் நிலைப்பாட்டையே உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கூறியுள்ள அனைத்து கருத்துகளும் எடுத்துக்காட்டுவதாகவும் மல்லையா கூறியுள்ளார்.

காணாமல் போன சந்திராயன்-1 விண்கலம்.. கண்டுபிடித்துக் கொடுத்தது நாசா!

காணாமல் போன சந்திராயன்-1 விண்கலம்.. கண்டுபிடித்துக் கொடுத்தது நாசா!


நியூயார்க்: காணாமல் போனதாக கருதப்பட்ட இந்தியாவின் சந்திராயன் 1 செயற்கைக்கோள் நிலவை சுற்றி வருவதை நாச கண்டறிந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திராயன் - 1 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவியது.
79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவை அடைந்தது. நிலவைப் பற்றிய பல புதிய தகவல்களையும் கண்டறிந்து, இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. 2 ஆண்டுகள் வரை இதன் இயங்குதிறன் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியுடன் சந்திராயன் 1 செயற்கைக்கோளுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
இதுபற்றி பல முயற்சிகளை மேற்கொண்ட இஸ்ரோ, இறுதியாக காணாமல் போனதாக அறிவித்தது. தொடர்ந்து தேடும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டிருந்த போதிலும் இதுபற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சந்திரயான்-1 தொலைந்து போகவில்லை என்றும் அது சந்திரனின் மேற்பரப்புக்கு 200 கி.மீ. தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது.
அதன் வாழ்நாள் முடிந்துவிட்ட நிலையில், சந்திராயன்1 ஒரு விண்வெளி குப்பையை போல நிலவைச் சுற்றிவந்து கொண்டுள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது. 2018ம் ஆண்டில் சந்திராயன் 2 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெ. தலையணையால் அமுக்கி கொல்லப்பட்டாரா? உளறிய நடராஜன்! போட்டு உடைத்த சேதுராமன்!

ஜெ. தலையணையால் அமுக்கி கொல்லப்பட்டாரா? உளறிய நடராஜன்! போட்டு உடைத்த சேதுராமன்!


தமிழகம் முழுவதும் 36 இடங்களில் ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டங்களில் அதிமுகவின் பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். இது சசிகலா அணியினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர்.சேதுராமன் பங்கேற்று பேசினார். அப்போது, முதல்வர் நாற்காலியில் உட்கார எங்களுக்கு ஒரே ஒரு தலையணை போதும் என சசிகலா கணவர் நடராஜன் கூறியதாக சேதுராமன் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது சசிகலா கணவர் நடராஜன் பிரஸ்மீட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த பிரஸ்மீட் முடிவில் ஆப் த ரெக்கார்டாக சில பத்திரிகையாளர்களிடம் நடராஜன் பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.
அப்போது இன்னும் 2 மாதத்தில் முதல்வர் பதவியை நாங்கள் கைபற்றுவோம் என்று கூறியுள்ளார். தற்போது தானே தேர்தல் முடிந்துள்ளது, அதற்குள் எப்படி முடியும்? மீண்டும் தேர்தல் என்றால் பல ஆயிரம் கோடி செலவாகுமே என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த நடராஜனோ, நாங்க முதல்வர் ஆவதற்கு எதுக்கு அத்தனை ஆயிரம் கோடி செலவு செய்யனும்? ஒரே ஒரு தலையணை போதுமே… முதல்வர் ஆகிவிடுவோமே என நடராஜன் கூறியிருந்தார்.
இந்த தகவலை என்னிடம் பத்திரிகையாளர்கள் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தேன் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட சேதுராமன் கூறியுள்ளார்.

”விண்டோஸ்” கதவுகளை அடைக்க வருகிறது ஆண்ட்ராய்டு..!

”விண்டோஸ்” கதவுகளை அடைக்க வருகிறது ஆண்ட்ராய்டு..!


ஆபரேட்டிங் சிஸ்டம் என்றாலே விண்டோஸ்தான் அதில் சூப்பர்ஸ்டார்; அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் அடுத்த சூப்பர்ஸ்டாராக மாறியிருக்கிறது ஆண்ட்ராய்டு. உலக அளவில் விண்டோஸ் மூலம் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை விடவும், ஆண்ட்ராய்டு மூலம் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது தற்போது தெரியவந்துள்ளது.

ஸ்டேட்கவுன்ட்டர் என்னும் வெப் அனலிடிக்ஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் இணையம் பயன்படுத்தியவர்களில் 38.6 % பேர் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இணையம் பயன்படுத்தியுள்ளனர். 37.4 % பேர் ஆண்ட்ராய்டு ஓ.எஸ் மூலம் இணையம் பயன்படுத்தியுள்ளனர். இணையப் பயன்பாட்டைப் பொறுத்தவரை இன்னும் விண்டோஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் ஆண்ட்ராய்டு முதலிடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது என்பதுதான் அடிக்கோடிட்டுக் காட்டவேண்டிய விஷயம்.
Source: StatCounter Global Stats - OS Market Share
2012-ம் ஆண்டு இணையப் பயன்பாட்டில் விண்டோஸின் பங்கு 82% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆண்ட்ராய்டின் வளர்ச்சி நமக்கு புரியும். இதற்கு காரணம் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுதான் . கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல்முறையாக உலகம் முழுவதும் கணினி மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களை விடவும் மொபைல் மற்றும் டேப்லட் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உலக அளவில் டெஸ்க்டாப் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களின் சதவீதம் 48.7% ஆகவும், மொபைல் மற்றும் டேப்லட் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 51.3 % ஆகவும் இருந்தது. இந்த விஷயத்தில் இந்திய அளவில் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் இன்னொரு ஆச்சர்யமும் காத்திருக்கிறது. அதாவது இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 61.9 % பேர் ஆண்ட்ராய்டுதான் உபயோகிக்கின்றனர். விண்டோஸ் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 19.4 சதவீதம்தான். இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் அதிகமாகிவிட்டனர் என்பதையே இது காட்டுகின்றது.
Source: StatCounter Global Stats - OS Market Share
மொபைல்தான் முக்கிய டார்கெட்:
சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டுமென்றால் பிரவுசிங் சென்டர்கள்தான் பலருக்கும் இருந்த ஒரே ஆப்ஷன். ஆனால் இன்று உங்கள் மொபைலில் டேட்டா பேக் போட்டாலே நம் தேவை முடிந்துவிடும். அந்த அளவிற்கு இன்டர்நெட் பயன்பாடு என்பது மொபைலில் எளிமையாகவும், வேகமானதாகவும் மாறிவிட்டது. எனவே இன்று வணிக ரீதியாக இணையதளங்களை துவங்கும் பலரும், தங்கள் இணையதளங்கள் மொபைல் ஃப்ரெண்ட்லியாக இருக்கும்படியே வடிவமைக்கின்றனர். இதன் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் ஆப்ஸ்களின் பயன்பாடு. கணினியில் இணையதளங்கள் என்றால், மொபைலில் ஆப்தான் கில்லி. இன்று பெரும்பாலான சேவை நிறுவனங்கள் தங்கள் மொபைல் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கின்றன. அத்துடன் இன்று 10,000 ரூபாய்க்குள் உங்களால் 3 GB ரேம் உள்ள போன்களைக் கூட வாங்கமுடியும். எனவே அதிகமான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து வைத்திருப்பதோ, அவற்றைப் பயன்படுத்துவதோ சிரமமான காரியம் கிடையாது. இந்த விஷயங்கள்தான் மொபைல் இன்டர்நெட்டின் வெற்றி.
அதேபோல இலவச வைஃபை வசதிகள், டெலிகாம் நிறுவனங்களின் 4G சேவைகள் ஆகியவை நிறைய பேரை சென்றடைகிறது. இதனாலும் புதிதாக இணையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொபைல் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருவதால், நிறைய நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மொபைலில் வெளியிடவே விரும்புகின்றன. காலம் ஒவ்வொரு முறையும் தன்னைப் புதுப்புது தொழில்நுட்பங்கள் கொண்டு அப்டேட் செய்துகொண்டேதான் இருக்கின்றது. நேற்று கணினி; இன்று மொபைல்; நாளை இதை விடவும் அசத்தலான தொழில்நுட்பங்கள் நம் கைகளில் தவழலாம்!