பத்து ரூபாய் தருவாரா கருணாநிதி? - உடன்பிறப்புகளுக்கு இனிக்காத பொங்கல்
பொங்கல் தினத்தில் கருணாநிதியிடம் பரிசு பெறும் நிர்வாகிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். "தலைவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, 'அவரைப் பார்ப்பதற்கு யாரும் வர வேண்டாம்' என அறிவுறுத்தியுள்ளது தலைமைக் கழகம். அவர் இல்லாத பொங்கலை நினைத்துப் பார்க்க முடியவில்லை" என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.
தி.மு.க தலைவர் கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம். அந்தநாளில் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து பெறுவதற்காக அவரை சந்திப்பது வழக்கம். கோபாலபுரம் வீட்டில் குவியும் நிர்வாகிகளுக்கு தன் கையால் புத்தம் புது பத்து ரூபாய் நோட்டை கொடுப்பார். இதைப் பெறுவதற்காகவே நிர்வாகிகள் மத்தியில் போட்டி நிலவும். "அரசியல் களத்தில் ஒருநாள்கூட ஓய்வில்லாமல் உழைத்து வந்த கலைஞரின் உடல்நிலை, இன்று சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. மூன்று மாதங்களாக உடல் நலிவுற்று இருக்கிறார். அவருக்கு உதவியாக நித்யா இருக்கிறார். குடும்ப உறுப்பினர்களுக்கே அவரைப் பார்க்க அனுமதியில்லை. சிகிச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதிகபட்சமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் இல்லாத முதல் பொதுக்குழுவைப் பார்த்தோம். இப்போது அவர் பங்கெடுக்காத பொங்கலையும் பார்க்கிறோம்" என வேதனையோடு பேசத் தொடங்கினார் தி.மு.க நிர்வாகி ஒருவர். தொடர்ந்து நம்மிடம்,
"உடல்நிலை நன்றாக இருந்த காலகட்டத்தில், அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து செய்தித்தாள்களை படித்து முடித்துவிடுவார். அதன்பிறகு, மக்கள் பிரச்னைகள் மற்றும் அரசியல்ரீதியான அதிரடிகளுக்கு அறிக்கை தயாரிக்கும், தயாரிக்கும் பணிகளில் இறங்குவார். ஒருநாளும் அவர் சோர்வுடன் இருந்ததில்லை. அறிவாலயத்திற்கு அவர் வராத நாட்களே இல்லை. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்; தொண்டர்களை சந்திப்பது என பரபரப்பாக இயங்கி வந்தார். கடந்த மூன்று மாதங்களாக மீசெல்ஸ் எனப்படும் கொப்புளங்களால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர் இயேசுதாசன் தலைமையிலான குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதன்பிறகு, கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையின் மூலம் அவரது உடல்நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தனர். வீட்டிற்கு வந்த பிறகும் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, யாரையும் சந்திக்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். படுத்த படுக்கையாக இருக்கிறார்.
அவரது அதிகபட்ச பொழுதுபோக்கு என்பது தொலைக்காட்சி பார்ப்பதுதான். நுரையீரல் தொற்றின் பாதிப்பில் இருந்து முழுமையாக அவர் குணமடையவில்லை. நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவருக்கு வேண்டிய உதவிகளை நித்யா செய்து வருகிறார். எளிதில் செரிக்கக் கூடிய உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. அடிக்கடி ஞாபக மறதியால் அவதிப்படுகிறார். அவர் பெரிதும் கொண்டாடுவது தமிழ்ப் புத்தாண்டும் பொங்கல் பண்டிகையும்தான். வேறு எந்த பண்டிகைக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். அந்தநாளில் முக மலர்ச்சியோடு தன்னை சந்திக்க வருகின்றவர்களுக்கு பத்து ரூபாய் நோட்டைக் கொடுப்பார். அதை செலவு செய்யாமல் பாதுகாத்து வைக்கும் நிர்வாகிகள் பலர் இருக்கின்றனர். இந்த பொங்கலை அவருடன் இணைந்து கொண்டாட வாய்ப்பில்லை. அறிவாலயத்தைத் தொடர்பு கொண்டு கேட்பவர்களுக்கும், இந்தப் பதிலைத்தான் சொல்லி வருகிறோம்" என்றார் குமுறலோடு.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டக் களத்தில் தி.மு.க செயல் தலைவர் பேசிக் கொண்டிருக்கிறார். 'ஜல்லிக்கட்டுக்கு துரோகம் செய்தது தி.மு.க' என விவாதங்களில் அ.தி.மு.க பேச்சாளர்கள் கலங்கடிக்கின்றனர். அதற்கு தி.மு.க முன்னணியினர் பதிலடி கொடுத்து வந்தாலும், கருணாநிதியின் அறிக்கை இந்தப் பிரச்னையை எப்படிக் கையாண்டிருக்கும் என்ற விவாதங்களும் உடன்பிறப்புகள் மத்தியில் வலம் வருகிறது.