நிலத்தில் தண்ணீர் இருக்கிறதா? எப்படி அறிவது?

நிலத்தில் தண்ணீர் இருக்கிறதா? எப்படி அறிவது?


நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். எந்த டெக்னாலஜியும் இல்லாத அந்தக் காலத்தில் எவ்வாறு கிணறு வெட்டினார்கள் என்று பார்ப்போம்.
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலரின் உழைப்பில் தோண்டிய கிணற்றில் தண்ணீர் இல்லை என்றால், அத்தனை பேரின் உழைப்பும் பாழாகி விடுகிறது. மேலும், பண விரயமும் ஏற்படுகிறது.
அப்படி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் . சரி நல்ல தண்ணீரும் கிடைத்துவிட்டது.
கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று பர்ர்க்க வேண்டாமா?
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும்பசுக்களை அந்த நிலத்திதில் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.
அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம். இனி இதுமாதிரி நீங்களும் செய்து பார்க்கலாமே.

அஞ்சலகத்திலிருந்து வங்கிக்கு சேமிப்பு கணக்கை மாற்றுவது எப்படி?

அஞ்சலகத்திலிருந்து வங்கிக்கு சேமிப்பு கணக்கை மாற்றுவது எப்படி?

பெரும்பாலும் அஞ்சலக சேமிப்பு கணக்குத் திட்டங்கள் கவரக்கூடியதாக இருந்தாலும் ஆன்லைன் மூலமாக முதலீடு மற்றும் பணப்பரிமாற்றம் செய்வதற்கு வசதிகள் இல்லாததால் சேமிப்புத் திட்டங்களை தொடங்குவது சிரமமாக இருந்து வருகிறது. ஆனால் சில திட்டங்களை அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ள முடியும். சுகன்யா சம்ருதி திட்டம் (எஸ்எஸ்ஏ) அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) திட்டம் போன்றவற்றை அஞ்சலகத்தி லிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ளமுடியும்.
ஏறக்குறைய அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட தனியார் வங்கிகள் சுகன்யா சம்ருதி சேமிப்புத் திட்டத்தை வழங்குகின்றன. அதேபோல் பெரும் பாலான பொதுத்துறை வங்கிகளும் மற்றும் தனியார் வங்கிகளும் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) திட்டத்தை வழங்குகின்றன.
மாற்றக்கூடிய வழிமுறைகள்
அஞ்சலகத்தில் நீங்கள் வைத்துள்ள அதே எஸ்எஸ்ஏ மற்றும் பிபிஎப் கணக்கை வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ள முடியும். இரண்டு திட்டங்களையும் அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ள உங்கள் கைப்பட ஒரு கடிதத்தை நீங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சலகத்தில் கொடுக்க வேண்டும். அந்தக் கடிதத்தில் எந்த வங்கிக்கு சேமிப்பு கணக்கை மாற்றப்போகிறீர்கள் என்பது பற்றியும் வங்கி கணக்கு பற்றிய விவரங்களையும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
பொது வருங்கால வைப்பு சேமிப்பு கணக்கை மட்டும் மாற்றுவதற்கு எஸ்பி-10 (பி) என்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும் எஸ்எஸ்ஏ மற்றும் பிபிஎப் சேமிப்பு கணக்குக்குரிய சேமிப்பு புத்தகத்தை அஞ்சலகத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஒப்படைப்பதற்கு முன் உங்கள் சேமிப்பு கணக்கு புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் முடித்த பின்னர் உங்கள் கணக்கை மாற்றுவதற்குரிய வேலைகளை அஞ்சலகத்தில் தொடங்கு வார்கள். பின்பு உங்கள் சேமிப்பு கணக்குக்குரிய ஆவணங்களை வங்கிகளுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். இந்த ஆவணங்கள் வங்கிகளுக்கு சென்றதுமே வங்கியில் புதிய சேமிப்பு கணக்கை தொடங்குவதற்குரிய வழிமுறைகளை தொடங்க வேண்டும். வங்கியில் முதலில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
இந்த படிவத்துடன் முகவரி சான்றிதழ், அடையாளச் சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும். சுகன்யா சம்ருதி திட்டத்திற்கு உங்கள் குழந்தையினுடைய பிறப்பு சான்றிதழை கட்டாயமாக அளிக்க வேண்டும். இதையெல்லாம் அளித்து விட்டால் புதிய கணக்கை உடனடி யாக தொடங்கிவிட முடியும். வங்கியிட மிருந்து புதிய சேமிப்பு கணக்கு புத்த கத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
ஏன் மாற்ற வேண்டும்?
எஸ்எஸ்ஏ அல்லது பிபிஎப் சேமிப்பு கணக்குகளை அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொண்டால் எளிதாக ஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் செய்து கொள்ளமுடியும்.மேலும் அஞ்சலகத்தில் ஒவ்வொரு முறை செல்லும் போதும் உங்கள் சேமிப்பு கணக்கு புத்தகத்தை எடுத்துச் சென்று புதுப்பித்துவர வேண்டும். வங்கிகளுக்கு மாற்றிக் கொண்டால் இந்த சிரமம் ஏற்படாது.
ஆன்லைன் மூலமாக உடனடியாக செலுத்தி விட முடியும். உங்களது வரைவோலையை அஞ்சலகத்தில் அளித்தால் அது செயல்முறையாகி உங்கள் கணக்கில் பணம் சேருவதற்கு நேரம் ஆகும். வங்கிகளில் இதுபோன்ற நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்க முடியும். வங்கிகளில் ஆன்லைன் மூலமாகவே மாதாந்திர அறிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.
எஸ்எஸ்ஏ சேமிப்பு கணக்கையோ அல்லது பிபிஎப் கணக்கையோ அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்வதற்கு உங்களுக்கு ஏற்கெனவே வங்கி கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே வங்கி கிளையில் அனைத்து சேமிப்பு கணக்குகள் இருக்கும்பட்சத்தில் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்வது எளிதாக இருக்கும்.
இந்த சேமிப்பு கணக்குகளை அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது அஞ்சலகத்தில் எவ்வளவு காலத்தில் நடைமுறைகளை முடிக்கிறார்கள் என்பதை பொறுத்தது. நீங்கள் இரண்டு, மூன்று முறை அஞ்சலத்துக்கு சென்று வர வேண்டி இருக்கும். அதேபோல் வங்கிக்கும் சில முறை சென்று வர வேண்டியிருக்கும். வங்கி கணக்கு தொடங்கிய பின் நீங்கள் ஆன்லைன் மூலமாகவே அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.

திராவிடத்தை எதுவும் செய்ய முடியாது: கமல்ஹாசன் பேட்டி

திராவிடத்தை எதுவும் செய்ய முடியாது: கமல்ஹாசன் பேட்டி


திராவிடத்தை எதுவும் செய்ய முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிட சித்தாந்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். உணர்வும் இருக்கும். அதை கெட்டிக்காரத்தனமாக, நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளும் கட்சிகள் வென்றே தீரும். என நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரசியல் பேச தகுதி என்ன?
நான் அரசியல் பேச, குடிமகன் என்பதுதான் முதல் தகுதியாக நினைக்கிறேன். அரசியல்வாதிகளை திட்டுவது, அவர்களை ஊருக்குள் வரவிடாமல் தடுப்பதெல்லாம் ஒருவிதமான கும்பல் மனப்பான்மையாகவே எனக்குத் தெரிகிறது. இது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகத்தில் நாம் செய்ய வேண்டியது, நமது கையில் கொடுக்கப்பட்டிருக்கும் கூரான ஆயுதமான வாக்கை, ஊழலில் மழுங்க விடாமல் இருப்பது. இதை செய்யும் முதல் ஆள் ஓட்டுப் போடுபவர்தானே தவிர ஓட்டுக் கேட்பவர் இல்லை.
இலவசங்கள் வேண்டாம்..
முதல் தவறு வாக்காளரிடத்தில் இருக்கிறது. இலவசப் பொருட்களை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும்போது உன் தலைவன் திருடனாகத்தான் இருப்பான். இதைத்தான் நான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன். அரசியல் ஒரு தொழிலாக மாறியதால் வந்த பிரச்சினை இது.
அரசியல்வாதிகளுக்கு எளிமை முக்கியம்
கக்கன் பதவியில் இல்லாதபோது எளிமையாக ரிக்‌ஷாவில் வந்திறங்குவதை நான் பார்த்திருக்கிறேன். அதைப் போல முன்னாள் அமைச்சர்கள் ஏன் இருக்கக்கூடாது என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. பக்கத்து மாநிலங்களில் கூட எளிமையான அமைச்சர்களை பார்க்க முடிகிறதே.
என்னுடைய கொள்கை சாதிகள் ஒழிய வேண்டும் என்பதே. ஏழை பணக்காரன் என்கிற பேதத்தில் நடக்கும் அநியாயங்களே அதிகமாக இருக்கிறது. அந்த பேதம் இப்போதைக்கு போதும். அதை இன்னும் நாலாக, ஐந்தாக சாதிகள் என பிரித்து வைக்கும் அசிங்கம் வேண்டாம். இன்று சாதிகள் இல்லாதது போல நாம் நடித்துகொண்டிருக்கிறோமே தவிர அதை எதுவும் செய்ய முடியவில்லை.
வாக்குகளை விற்காதீர்கள்..
தேர்தலில் அதிக செலவு தமிழ்நாட்டில் தான் என தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. எது செலவு? கொடி நடவும், பந்தல் போடவும் அதிக செலவு ஆகாது. பணப்பட்டுவாடாவில் தான் அதிக செலவு. அந்த பட்டுவாடா எங்கே நடக்கிறது? எல்லாம் எம்.எல்.ஏக்களுக்கும், எம்.பிக்களுக்கும் போவதில்லை. வாக்காளர்களுக்கு தானே செல்கிறது. விலை பேசிவிட்டார்கள். எனவே அமைதியாகத்தான் இருக்க வேண்டும். வாக்குகளை விற்றுவிட்டால் அமைதியாகவேண்டியதுதான்.
சாமானியர்கள் பணம் வாங்குகிறார்கள் என்றால் அவர்கள் எங்கோ மூலையில் குடிசையில் இருப்பவர்கள் அல்ல. டிடிஆர் கையில் பத்து ரூபாய் தந்தால் டிக்கெட் கிடைத்துவிடும் என்று நினைப்பவரும் ஊழல்வாதியே. பிளாக் டிக்கெட் வாங்குபவரும் ஊழல்வாதியே.
உடனே எல்லோரும் சந்நியாசியாகிவிட முடியுமா என்பார்கள். யதார்த்தத்தில் நான் நேர்மையாக இருக்கிறேன். நடைமுறையில், முயன்றால் நேர்மையாக இருப்பது சாத்தியமே. கூட்டமாக சென்று கேள்வி கேட்பது இருக்கட்டும், முதலில் மாற்றம் தனிநபரிலிருந்து தொடங்க வேண்டும்.என்னால் முடியாததை நான் கேட்கவில்லை. நான் ஒழுங்காக வரி கட்டிவிட்டுத்தான் மற்றவர்களை கட்டச் சொல்லி கேட்கிறேன். எனவே இது சாத்தியம் தான்.
'எனது குரல் சர்வாதிகாரத்துக்கு எதிரானது'
அரசியலில் ஏற்படும் அநியாயம், சர்வாதிகாரத்துக்கு எதிராக நான் குரல் கொடுக்கிறேன். ஆராய்ச்சி மணி அடிக்க பசுமாடு இல்லையென்றால் நான் அடிக்கிறேன். அந்த மணி அடிக்கும்போது அதற்கான ஆதரவு இப்போதைக்குப் போதுமானது. ஒரு அடியெடுத்து வைக்க அது போதும். ஆனால் அதுவே பிரச்சினைகளை தீர்த்துவிடாது.
'வாய்ச்சொல் வீரர்கள் வேண்டாம்'
ஏழ்மையை போக்க முடியும் என உலக பொருளாதார வல்லுநர்கள் பலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் யாரும் இன்னும் செய்யவில்லை. மீண்டும் மீண்டும் டிரம்ப் போல, வாய் சவடால் விடும் ஒருவரை போற்றிக்கொண்டிருக்கிறோம். சவடால் பேச்சு ரவுடிகள் செய்யக்கூடிய விஷயம். அமைதியாகப் பேசி, விமர்சனங்களை எதிர்கொண்டு, என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவர்கள் தான் பொறுப்புள்ளவர்கள்.
ஜெ. புகைப்படம் எதற்கு?
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு என்பது ஒரு தனிநபரைப் பற்றியது அல்ல. ஒட்டுமொத்த கூட்டத்தின் உதவியின்றி அந்த ஊழல் நடந்திருக்காது. ஒருத்தர் தான் தவறு செய்தார் என்றால் ஏன் இன்னும் அவரதை புகைப்படத்தை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்? இதுதானே எதிர்கட்சிகள் கேட்பதும்? இது எல்லாரும் சேர்ந்து செய்த தவறு. வாக்காளர்கள் உட்பட. யாராவது திருந்த வேண்டாமா. முதலில் வாக்காளர்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.
நான் சொல்வது நிபுணர்களின் கருத்து அல்ல. சாமானியனாக்த்தான் கருத்து சொல்கிறேன். ஜனநாயகத்தின் அழகைப் பற்றி அதன் நிபுணர்கள் பேசும்போது, ஊழல் அப்படித்தான் நடக்கும். அதுதான் ஜனநாயக்த்தின் அழகே என்கிறார்கள். இதை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்கிறார்கள். நான் சொல்ற கருத்து தவறு என்றால் அதைத் திருத்திக்கொள்ள நான் தயார். யாராவது என்னை சமாதானப்படுத்தட்டும். மக்களை நான் சமாதானப்படுத்துகிறேன். ஆனால் அப்படி யாரும் செய்யவில்லை.
அரசியல் வெறுமை இல்லை:
தமிழகத்தில் அரசியல் வெறுமை இல்லையென்றே நினைக்கிறேன். மக்கள் என்ன செம்மறி ஆடா? ஏன் மேய்ப்பனை தேடிக்கொண்டிருக்கிறீர்கள்? தலைமை பொறுப்புக்கான தகுதியான ஆளை நீங்கள் நியமனம் செய்யுங்கள். அதற்கான தகுதி கொண்ட ஆள் தான் தேவை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த நபரை தலைவா என போற்றி, கூச்சலிட்டு மீண்டும் ஏகாதிபத்தியத்தை எடுத்து வராதீர்கள்.
என் கருத்தை வெளியில் சொல்வதால் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை. நான் அரசியலில் இல்லை. அதற்காக அதுபற்றி கருத்தே இருக்கக் கூடாது என சொல்வது தவறு. அப்படிப்பார்த்தால் சினிமா விமர்சனமே இருக்கக்கூடாது. கருத்தை சொல்பவர்கள் களத்தில் வரவேண்டும் என என்ன அவசியம் இருக்கிறது? விமர்சகர்களோ, விமர்சனக்குழுவோ திரைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் விமர்சனம் என்பது அவசியம் தானே. அது போல கருத்தியல் ரீதியாக இயங்குவது அவசியம். களத்துக்கு வர வேண்டியதில்லை.
திராவிடம் என்ற சொல் பிரபந்த காலத்திலிருந்தே இருக்கிறது. அதை ஒன்றுமே செய்ய முடியாது. அதற்கான தலைமையை மக்கள் ஏற்கிறார்களா, மனிதர் ஏற்கிறாரா என்பதைப் பொருத்தே அமையும்.
'திராவிடம் நிலைத்திருக்கும்'
திராவிடத்தை எதுவும் செய்ய முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிட சித்தாந்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். உணர்வும் இருக்கும். அதை கெட்டிக்காரத்தனமாக, நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளும் கட்சிகள் வென்றே தீரும். தேசியக் கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்தால் திராவிடத்தை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அது ஒரு மொழியைப் போல. நம் இன மானம் அது. குஜராத்தி என்பதில் மோடிக்கு இருக்கும் பெருமை, திராவிடன் என்பதில் எனக்கும் இருக்கிறது.
என் கருத்துக்களை நான் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்பேன். அதை தொந்தரவாக எடுத்துக் கொள்பவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

சசிகலாவுடன் நடராஜனுக்கு தொடர்பே இல்லை! அவர் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள்!" : டி.டி.வி. தினகரன்

சசிகலாவுடன் நடராஜனுக்கு தொடர்பே இல்லை! அவர் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள்!" : டி.டி.வி. தினகரன்


"அ.தி.மு.க. பொதுச்செயலாளர் "சசிகலாவுடன் அவரது கணவர் நடராஜனுக்கு கடந்த 26 ஆண்டு களாக தொடர்பே இல்லை. அவர் சொல்வதை அ.தி.மு.க.வில் யாரும் கேட்க மாட்டார்கள்!" என்று அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தினகரன் தெரிவித்ததாவது:
"எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா அதிமுக தலைமை பொறுப்பை ஏற்ற நாள் முதல் நாங்கள் அவருக்கு பக்கபலமாக பாதுகாப்பாக இருந்து வந்தோம். நாங்கள் இல்லையென்றால் ஜெயலலிதாவை பெங்களூருவுக்கோ வேறு மாநிலத்துக்கோ விரட்டியிருப்பார்கள். நானும், ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்தேன்.
இது தி.மு.க.வின் கண்ணை உறுத்தியிருக்கிறது. ஆகவே ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு எதிரான கருத்துக்களை தி.மு.கவினர் தெரிவித்து வருகிறார்கள்.
1991ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எங்களுடைய குடும்ப உறுப்பி னர்கள் பல்வேறு சூழ்நிலையில் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகள் செய்திருக்கக்கூடும். அதற்காக ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
நான் 1986 முதல் 2010ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுடன்தான் இருந்தேன். எம்பியாக ஜெயலலிதா பேரவைச் செயலாளராக அமைப்புச் செயலாளராக கட்சியின் பொருளாளராக நான் பொறுப்பு வகித்திருக்கிறேன். 2011ம் ஆண்டுதான் என்னை ஜெயலலிதா சில காலம் ஒதுக்கி வைத்திருந்தார். அதற்குப் பிறகும் இரண்டு மூன்று முறை ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறேன். தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பேசியிருக்கிறோம். அவர் உடல் நலக்குறைவாக மருத்துவமனையில் இருந்த போது என்னிடம் பேசிய சசிகலா, அக்கா உடல் நிலை தேறி வந்ததும் மீண்டும் உன்னை அரசியலுக்கு கொண்டு வந்து பொறுப்புக்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறினார்.
துரதிருஷ்டவசமாக ஜெயலலிதா மறைந்து விட்டதால் கட்சியின் தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என்று நிர்வாகிகள் பலரும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பொதுச்செய லாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் கட்சி நிர்வாகத்தை கவனிக்க வேண்டும் என்பதற்காக என்னை துணைப் பொதுச் செயலாளராக நியமித்து இருக்கிறார். அவருடைய பணிகளை நான் செய்து வருகிறேன்.
ஜெயலலிதா மறைந்த போது அவர் அருகில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சூழ்ந்து நின்றது குறித்து நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்ப வில்லை. எல்லோரும் அப்போது துக்கத்தில் இருந்தோம்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகே கட்சியும் ஆட்சியும் சசிகலா தலைமையில் செயல்படவேண்டும் என்று ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கூறினர்.
ஆனால் பதவி ஆசை காரணமாக திமுகவுடன் சேர்ந்து ஓபிஎஸ், கட்சிக்கு எதிரான நிலையை எடுத்து சில பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார். கடைசியாக அவர் முதல்வர் பொறுப்பு வகித்த இரண்டு மாதங்களில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அமைச்சர்கள், எம்எல்ஏக் களை மதிக்காமலும் செயல்பட்டு வந்ததார். ஆகவே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓபிஎஸ்சை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இது குறித்து முடிவெடுத்த போது ஓபிஎஸ்சே சசிகலாவை முன் மொழிந்து எழுதிக் கொடுத்தார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து திடீரென தியான நாடகத்தை நடத்தினார்.
அவரை யாரும் மிரட்டி கையெழுத்து வாங்க வில்லை. சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை.
ஓபிஎஸ் அணியினர், அ.தி.மு.க. எம்எல்ஏக்களுக்கு ஆசை வார்த்தை கூறி இழுக்க முயற்சித்தனர். அதனால்தான் எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூரில் தங்கினார்கள். அதில் எந்த தவறும் கிடையாது.
எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நடராஜன், திவாகரன், மகாதேவன் உள்ளிட்ட வேறு எவரையும் கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. குடும்ப ஆட்சி நடத்துவோம் என்ற நடராஜன் கூறியது வரது சொந்த கருத்து. அதை யாரும் ஏற்க மாட்டார்கள். 1990ம் ஆண்டுக்குப்பிறகு நடராஜன் போயஸ் கார்டனுக்கு வருவதே இல்லை. சசிகலாவுக்கும் அவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. ஆகவே அவருடைய கருத்தை சசிகலாவோ கட்சியினரோ ஏற்க மாட்டார்கள்.
அதே போல திவாகரன் கருத்தையும் யாரும் ஏற்க மாட்டார்கள்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித மர்மமும் கிடையாது. சிறந்த மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு உயரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
எங்களிடம் இருந்து. சென்றவர்களே இப்போது குற்றச்சாட்டுகளை வீசுவதால்தான் மருத்துவ அறிக்கை விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் நீதி விசாரணை கேட்கிறார்கள். நாங்கள் நீதி விசாரணை நடத்தினால், ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு தவறாக சொல்வதாக கூறுவார்கள்.
ஆகவே மத்திய அரசு நீதி விசாரணை நடத்தட்டும். எந்த விசாரணையையும் நாங்கள் சந்திக்க தயார். இந்த விசாரணையில் ஏ 1 குற்றவாளியாக ஓபிஎஸ் தரப்பினர்தான் இருக்கப் போகிறார்கள்.
நாங்கள் எம்எல்ஏக்களுக்கு தங்கம், பணம் கொடுத்ததாக சொல்வதெல்லாம் பொய். அவர்கள் தரப்பில் இருந்துதான் பண ஆசை பதவி ஆசை காட்டி இழுக்க முயற்சித்தார்கள்.
ஆர்கே நகர் தேர்தலில் எங்கள் அணி வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார். எதிர் வரும் உள்ளாட்சி தேர்தல் அதற்கு அடுத்து வரும் லோக்சபா. சட்டசபை தேர்தல் அனைத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று தினகரன் தெரிவித்தார்.

கணக்குகளை க்ளோஸ் பண்ணும் வாடிக்கையாளர்கள்." அதிர்ச்சியில் வங்கிகள்

கணக்குகளை க்ளோஸ் பண்ணும் வாடிக்கையாளர்கள்." அதிர்ச்சியில் வங்கிகள்


வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை 5000 ரூபாய் என பாரத ஸ்டேட் வங்கி நிர்ணயித்துள்ளதால் ஏராளமானோர் தங்களது வங்கிக் கணக்கை குளோஸ் பண்ணி வருகின்றனர்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி, தங்கள் வங்கியில், 5,000 ரூபாய்க்கு குறைவாக இருப்பு தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த அவ்வங்கியின் , கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் பலர், தங்களது வங்கி கணக்கை குளோஸ் பண்ண முடிவெடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் வங்கிகளில் குறைந்த அளவு இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம், கட்டணம் வசூலிக்க முடிவெடுத்திருக்கும், பாரத ஸ்டேட் வங்கியை விமர்சித்து, சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் படுபயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்,
சில வாடிக்கையாளர்கள் தங்களது பேஸ்புக்.
மற்றும் டுவிட்டர் பக்கங்களில் , 'நான், எஸ்.பி.ஐ., வங்கி கணக்கை மூட முடிவெடுத்துள்ளேன். அப்போ நீங்க...' என, எழுதிய பதாகைகளை ஏந்தி நிற்பது போன்று பதிவிட்டுள்ளனர்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒருவர் , 'நான் வங்கி கணக்கை மூடிவிட்டேன்' என்ற பதாகையை, எஸ்.பி.ஐ., வாசலில் ஏந்தியபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இது போன்ற கடும் எதிர்ப்பால் தாங்கள் வெளியிட்ட அறிவிப்புகளை திரும்பப் பெறுவது குறித்து பாரத ஸ்டேட் வங்கிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.