ரூ.10 நாணயங்களை வாங்காதீங்க! : கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் தடை
ரூ.10 நாணயங்களை வாங்காதீங்க! : கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் தடை
வேலுார் : விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ்களில், 'பயணிகளிடம், 10 ரூபாய் நாணயத்தை வாங்கக் கூடாது' என, நடத்துனர்களுக்கு, போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
'உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது' என அறிவிக்கப்பட்ட பின், 10 ரூபாய் நாணயங்கள், பொதுமக்களிடம் அதிகளவில் புழக்கத்தில் வந்துள்ளன. சில வாரங்களாக, '10 ரூபாய் நாணயம் செல்லாது' என, வதந்தி பரவியது. ஆனால், 'அந்த நாணயங்கள் செல்லும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்தது. பின், 10 ரூபாய் நாணயத்தில், ஐம்பொன் கலந்திருப்பதாக வதந்தி பரவியதால், பதுக்கல்காரர்கள் அதை பதுக்கத் துவங்கினர். இந்நிலையில், விழுப்புரம் கோட்ட அரசு பஸ்களில், '10 ரூபாய் நாணயங்களை வாங்கக் கூடாது' என, நடத்துனர்களுக்கு, போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.வேலுார், கிருஷ்ணாநகர் பணிமனை கேஷியர் அறையில், இதற்கான அறிவிப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இதனால், அரசு பஸ் நடத்துனர்கள், 10 ரூபாய் நாணயங்களை, பயணிகளிடம் இருந்து வாங்க மறுக்கின்றனர். இதனால், பயணி கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு பஸ் நடத்துனர்கள் கூறியதாவது: தற்போது, 10 ரூபாய் நாணயங்கள் அதிகஅளவில் புழக்கத்திற்கு வந்துள்ளன. வசூலாகும் நாணயங்களை, பணிமனையில் உள்ள கேஷியரிடம் கொடுத்தால், எண்ண மறுக்கிறார். நாணயங்களை எண்ண ஆட்கள் இல்லாததால், இது போன்ற உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இதனால், பஸ்சில் பயணிகளிடம் சண்டை போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.