பீட்டாவுக்கு துணை போனதா தமிழகக் காவல்துறை? வெளிநாட்டவரின் கேள்வி!
ஜல்லிக்கட்டு தடை விவகாரம் தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, சட்டப்பேரவையில் திங்கட்கிழமை அன்று தீர்மானம் இயற்றப்படவிருந்த நிலையில் 23ந் தேதி அன்று விடியற்காலையில் போலீசார் தமிழ் மக்களின் அறவழிப் போராட்டக்களமான மெரீனாவில் குவிக்கப்பட்டனர். மக்கள் அங்கிருந்து களைந்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அன்றே அவசர சட்ட நிறைவேற்றம் தொடர்பான தெளிவான அறிக்கை வந்துவுடன் மாணவர்களே களைந்து செல்வதாகத்தான் முடிவு எட்டப்பட்டிருந்தது. இருப்பினும் காவலர்கள், மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். பெண்களை வலுக்கட்டாயமாக தூக்கி எறிந்தும் இழிசொற்களால் பேசியும், காலால் மிதுத்தும் என வன்முறையின் அனைத்து பக்கங்களையும் அங்கே காட்டியது மக்களைக் காக்கவேண்டிய காவல். ஆண்களில் பலர் கடலோரம் துரத்தப்பட்டனர், இருந்தும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் நடத்தி வந்தனர். அதற்குள் கடற்கரையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மெரீனாவுக்கு செல்லும் சாலைகளைச் சுற்றி நின்று ஆர்பாட்டம் நடத்தினார்கள். கடற்கரையில் மட்டுமே நிகழ்ந்துவந்த அறப்போராட்டம் காவலர்களில் திடீர் தாக்குதலால் சென்னை முழுவதும் நடந்தேறியது. அதே சமயம் தமிழகத்தின் மற்ற பகுதிகளான கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் திங்கள் முழுவதும் சென்னையில் தொடர்ந்த போராட்டத்தால் தொடர்ந்து பதட்டம் நிலவியது. போலீஸ் மெரீனா போகும் சாலைகளில் சுற்றி நின்ற போராட்டக்காரர்களை தாக்கத் தொடங்கினார்கள். அதற்கடுத்து போராட்டத்தில் கலந்துகொள்ளாத பொதுமக்களின் வீடு புகுந்தும் அவர்கள் மீது கல்வீசியும் தாக்குதல் தொடர்ந்தது. போலீசாரே வாகனங்களுக்குத் தீவைத்த காட்சிகளும், ரயில்வே பாலங்களின் மீது ஏறி நின்று மக்கள் மீது கல்வீசிய காட்சிகளும் மனதைப் பதறச் செய்தன. இந்த நிலையில் தமிழகமே ஒன்றாகத் திரண்டு நின்று போலீஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. மனித உரிமை ஆணையமும் தமிழக அரசிடம் போலீஸின் இந்த நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள நிலையில் ஜல்லிக்கட்டு ஆர்வலரும், மதுரையை மட்டுமே மையமாகக் கொண்டு புகைப்படங்களை எடுப்பவருமான பிரபல புகைப்படக்காரர் ஹென்க் ஒச்சப்பன், ஜல்லிக்கட்டின் சிறப்பு தொடர்பான கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். தற்போது போராட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து “தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த இழப்புக்கு பீட்டாவும், இந்திய விலங்குகள் நலவாரியமும் பொறுப்பேற்குமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் கூறுகையில்,”போராட்டம் வென்றாலும் ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டதே தவிர பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து விடுத்த கோரிக்கைக்கு அரசு செவிமடுக்கவில்லை. மக்களும் ஜல்லிக்கட்டு தடை விலக்கு கிடைத்த மகிழ்ச்சியில் பீட்டா தடைக்கான கோரிக்கையை மறந்துவிட்டிருக்கிறார்கள். போராட்டத்தில் நடத்தப்பட்ட காவல்துறையின் தாக்குதல் பின்னனியில் பீட்டா என்னும் சர்வதேச அமைப்பின் தொடர்பு நிச்சயம் இருக்கிறது. விலங்குகள் நலவாரியத்துக்கு எதிராகவும் பீட்டா சர்வதேச அமைப்புக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு அரசு வலுவானது இல்லை. மேலும் இதுநாள்வரை பீட்டாவும் அரசும் பல இடங்களில் இணைந்தே செயல்பட்டதும் கவனிக்கப்படவேண்டியது. தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் உலகெங்கிலும் பரவச் செய்யவேண்டிய ஒன்று, ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் அதிகாரத்துக்கு உதவியாக பீட்டா இருந்திருக்கும் என்கிற நிலையில் அதனை தமிழகத்தில் தவிர்க்கவேண்டும்” என்று கூறினார்.