களமிறங்க காத்திருக்கும் காளை... வாடிவாசல் செல்ல வெள்ளியங்கிரியில் 209 காளைகள் தயார்..முதல் முறையாக கோவையில் ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்பு!
பூமியையே கிழித்துப் போடும் வெறி, அந்த காளையின் கண்களில் தெரிகிறது; கூர்மையான கொம்புகளை மண்ணிலே குத்தி, கோபத்தோடு தலை துாக்கும் வேகத்தில், எட்டுத் திசைகளிலும் துாளாய்ப் பறக்கிறது. எதிரே வரும் காளையரை எட்டடிக்கு துாக்கிப்போடும் ஆவேசத்தோடு காத்திருக்கிறது, அந்த காளை. அந்த காளை துள்ளிக் குதிப்பது, அலங்காநல்லுார் வாடிவாசலில் இல்லை; கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில். இப்படி அங்கே நிற்பது, ஒரு காளையில்லை; 209 ஜல்லிக்கட்டுக் காளைகள். இரு ஆண்டுகளுக்கு முன்பு, ஜல்லிக்கட்டு இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வந்ததும், மதுரையில் இருந்து கோவைக்கு இடம்பெயர்ந்தவை இவை.ஆசை ஆசையாய், பார்த்துப் பார்த்து வளர்த்த அந்த ஜல்லிக்கட்டுக் காளைகளை, வேறு வழியின்றி விற்பதற்கு, மதுரை மக்கள் முடிவெடுத்தது, துயரத்தின் உச்சம். பசுக்களை பாலுக்கு வாங்குவர்; ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி என எதற்குமே உதவாத காளைகளை பணம் கொடுத்து வாங்குவதற்கு யார் முன் வருவார் என்ற சோகமான சூழ்நிலை. எங்கிருந்தாலும் வாழ்க!இறைச்சிக்கு வெட்டப்படுமென்று தெரிந்து, விற்கவும் மனமின்றி, வீட்டில் வைத்திருக்கவும் வசதியின்றி, மக்கள் மனதுக்குள் குமைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான், கோவை வெள்ளியங்கிரி கோசாலை, அந்த காளைகளை வாங்கி, அவர்களின் கண்ணீரைத் துடைக்க முன் வந்தது.எந்த ஒரு பயன்பாட்டுக்குமின்றி, வைத்துப் பராமரிப்பதற்காக மட்டுமே, வாங்குவதாகக் கூறியதும், 'நம்முடைய காளை எங்கோ ஓரிடத்தில் உயிரோடு இருக்கட்டும்' என்று, இவற்றை மனமுவந்து விற்றனர் மதுரை மக்கள். அலங்காநல்லுார், வாடிப்பட்டி, பாலமேடு, அவனியாபுரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், பல்வேறு மக்களிடம் இருந்தும் வாங்கப்பட்ட 210 காளைகள், ஒரே நாளில் கோவையை நோக்கி பாதுகாப்போடு பயணித்தன.சங்கத்தமிழ் வளர்த்த மதுரையிலிருந்து கொங்கு மண்ணுக்கு குடிபெயர்ந்த அந்த காளைகளுக்கு, கோவையின் நுழைவாயிலில் ஆரத்தி எடுத்து அமர்க்களமான வரவேற்பு அளிக்கப்பட்டது. குளுகுளு வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் பச்சாவயல் என்ற பசுமையான இடத்தில், 35 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ள வெள்ளியங்கிரி கோசாலையில் அவை குடியேறின.மறுவாழ்வு மையம்!அப்போது, இங்கு பாதம் பதித்த 210 ஜல்லிக்கட்டுக் காளைகளில், வயது முதிர்வு காரணமாக, ஒரே ஒரு காளை மட்டும் உயிரிழந்து விட, இப்போது 209 காளைகள், அதே ஆவேசத்தோடும், அதே ஆரோக்கியத்தோடும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதே கோசாலையில், காளைகளுடன் சேர்த்து, 1,540 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன; இவற்றில், 460 எருமைகளும் அடக்கம்.மாநகராட்சியில் குப்பை வண்டி இழுத்தவை, இறைச்சிக்காக விதிகளை மீறி, வாகனங்களில் கொண்டுச் செல்லப்பட்டு, போலீசாலும், ஆர்வலர்களாலும் மீட்கப்பட்டவை, மக்கள் தாங்களாகவே மனமுவந்து கொடுத்த ரேக்ளா காளைகள், கன்றுக்குட்டிகள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக குடியிருப்புகள் போன்று கூடாரங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இவை குளிப்பதற்காக, குட்டியாய் ஒரு குளமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.சுற்றிலும் பச்சைப் பசேலென்ற மலைகள், துாரத்தில் வெள்ளிக்கோடுகளாகத்தெரியும் நீர் வீழ்ச்சிகள், காய்ந்து போனாலும் தடத்தை இழக்காத காட்டாறுகள், தென்னை, மஞ்சள், வாழை, நெல் என சுற்றிலும் வயல் வெளிகள் என வெள்ளியங்கிரி கோசாலையின் சூழலே, அத்தனை அற்புதமாய் இருக்கிறது. அங்கே, இந்த ஜல்லிக்கட்டுக் காளைகள், நல்ல உணவு, கனிவான பராமரிப்புடன் கம்பீரமாக வலம் வருகின்றன.கோசாலை மாடுகளைப் பராமரிப்பதற்காக, அங்கேயே 40 பேர் தங்கி, பணியாற்றி வருகின்றனர். அவர்களில், ஜல்லிக்கட்டுக் காளைகளைக் கையாள்வதற்காக மட்டுமே, மாடு பிடி வீரர் ஜெயமணி என்பவர் தலைமையில், மதுரையைச் சேர்ந்த ஏழு பேர், அங்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
வைக்கோல், மக்காச்சோளத்தட்டை, உளுந்து தவுடு, கோதுமை துாசி என இந்த காளைகளுக்கான கவனிப்பு, மிகச்சிறப்பாக உள்ளது.உமா மகேஸ்வரி என்ற கால்நடை மருத்துவர், வாரமிரு முறை இங்கு வந்து, இங்குள்ள காளைகள் உட்பட அனைத்து மாடுகளையும் கவனித்துக் கொள்கிறார். இறைச்சிக்காக வாகனங்களில் கொண்டு சென்றபோது, கொடுமைப் படுத்தப்பட்டு, காயங்களுடன் வந்த மாடுகள், இப்போது ஆரோக்கியமாக இருக்கின்றன.தினமும் பயிற்சி!உணவு, பராமரிப்பு என்பதைத் தாண்டி, இந்த ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு, வழக்கமாகத் தரப்படும் பயிற்சிகளும் இன்றளவும் மாறாமல் தரப்படுகின்றன. தினமும் 50 காளைகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவிழ்த்து விட்டாலே மண்ணையும், மரங்களையும் குத்திக் கிளறும் அவற்றின் ஆவேசத்துக்கு, இதுவரை 20 தென்னை மரங்கள் பலியாகியுள்ளன; ஆங்காங்கே பல பள்ளங்கள், ஆதாரங்களாய் இருக்கின்றன.தமிழகம் உட்பட உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்களை ஓரணியில் இணைத்தது, இந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் தான் என்ற நினைவோடு இவற்றைப் பார்க்கும்போது, நெஞ்சம் நிமிர்கிறது; உள்ளுக்குள்ளே ஓர் உற்சாகம் ஊற்றெடுக்கிறது.
அவசரச்சட்டம் மூலமாக மதுரையில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடக்கவுள்ள சூழலில், வாடிவாசலில் இந்த காளைகளும் துள்ளிக் குதிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.மதுரைக்கு பயணம்!வெள்ளியங்கிரி கோசாலை உரிமையாளர் சிவகணேஷிடம் கேட்டதற்கு, ''அலங்காநல்லுாரில் இன்று ஜல்லிக்கட்டு நடப்பதாக நேற்று தான் தெரியவந்தது. அதனால், குறுகிய காலத்தில் இவற்றைக் கொண்டு செல்ல முடியவில்லை. நாளையிலிருந்து வேறு எங்காவது நடந்தால், அதில் இந்த காளைகள் நிச்சயம் பங்கேற்கும்; ஜல்லிக்கட்டை எங்கும் நடத்தலாம் என்ற நிலை ஏற்பட்டால், முதல் முறையாக கோவையிலும் இந்த காளைகளை வைத்து, மிகச்சிறப்பாக ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து ஆலோசிப்போம்,'' என்றார்.சேவல் கட்டுக்கும், ஆட்டுச்சண்டைக்கும், ரேக்ளா பந்தயத்துக்கும் பெயர் பெற்ற கொங்கு மண்டலத்திலும் இந்த வீர விளையாட்டு நடத்தப்படும்பட்சத்தில், எதிர்காலத்தில் தமிழகத்தின் ஒருமித்த அடையாளமாக இந்த ஜல்லிக்கட்டு மாறும்; வீர வரலாற்றில் கோவையும் இடம் பெறும்.ஜல்லிக்கட்டை எங்கும் நடத்தலாம் என்ற நிலை ஏற்பட்டால், முதல் முறையாக கோவையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இது குறித்து ஆலோசிப்போம்.1,540 வெள்ளியங்கிரி கோசாலையில்பராமரிக்கப்பட்டு வரும்மாடுகள்.
இவற்றில், 460 எருமைகளும் அடக்கம்.209கோவையில்பராமரிக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுக் காளைகளின் எண்ணிக்கை.35 ஏக்கர்கோவை வெள்ளியங்கிரி கோசாலையின் பரப்பளவு.40வெள்ளியங்கிரி கோசாலையில் மாடுகளைப் பராமரிக்க அங்கேயே தங்கி பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை.அது இதுவல்ல; அவன் இவன்!வெள்ளியங்கிரி கோசாலையில், ஜல்லிக்கட்டு காளைகள் பராமரிக்கப்படும் கூடாரம், மிகமிக சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. அங்கே பெயரளவுக்கு ஒரு கொசுவைக் கூட பார்க்க முடியாத அளவிற்கு, துாய்மையாய் இருக்கிறது. அதற்குள் காலணி அணிந்த யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை; காளைகளை 'அது இது' என்றும் யாரும் விளிப்பது இல்லை; அவன், இவன் என்றே அழைக்கின்றனர்.கோசாலை உரிமையாளர் சிவகணேஷ் கூறுகையில், ''இந்த காளைகளை நாங்கள் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே கருதுகிறோம். அதனால் தான், அது இது என்று அழைக்காமல், ஒவ்வொன்றுக்கும் ரத்னம், மணி, குப்பன், சுப்பன் என்று ஏதாவது ஒரு தமிழ்ப்பெயரை வைத்து அழைக்கிறோம்.
ஆவேசம் மிக்க இந்த காளைகள், மனிதர்களின் அன்புக்கு அடிமையானவை,'' என்றார்.விசிலு பறக்குது; வீரம் தெறிக்குது!வெள்ளியங்கிரி கோசாலையில், ஜல்லிக்கட்டுக் காளைகளைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள ஜெயமணி, மதுரை அழகர்கோவில் அருகேயுள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்தவர்; மாடுபிடி வீரர். ஒவ்வொரு காளைக்கும், இவரும், இவரது உதவியாளர்களும் தரும் பயிற்சி, மெய் சிலிர்க்க வைக்கிறது.அவர் அடிக்கும் விசிலுக்கேற்ப, உற்சாகத்தோடு வித்தியாசமாக உருமும் காளைகள், கொம்புக ளால் மரத்தையும், மண்ணையும் குத்திக் கிழித்து, வீரியத்தைக் காட்டுகின்றன; அதைப் பார்க்கும்போது, நரம்புகள் முறுக்கேற, ரத்தம் சூடேறுகிறது; அச்ச உணர்வே அற்றுப்போய் உள்ளத்தில் வீரம் குடிகொள்கிறது. ஜெயமணி கூறுகையில், ''ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, உலகம் முழுவதும் தமிழர்கள் நடத்தும் போராட்டம், எங்களை நெகிழ வைத்துள்ளது. இந்த காளைகளை, எங்கள் தெய்வங்களாக நாங்கள் மதிக்கிறோம்; அதை உணராமல், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது, எங்களின் உயிர் மூச்சைப் பறித்தது போன்றது.
தமிழர்களின் ஒற்றுமைக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. கோவையில் ஜல்லிக்கட்டை நடத்தினாலும், மதுரை வீரர்கள் இங்கே வருவார்கள்,'' என்றார்.