பழைய டூத் பிரஷை இப்படியும் பயன்படுத்தலாமே
டூத் பிரஷ் தேய்ந்து போனதும் அவற்றை தூக்கி எறிந்து விடாமல் பயனுள்ள வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்படி என்று பார்க்கலாம்.
1. சுவர்களில் கிறுக்கலா?
குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கிரேயான்ஸ், சாக்குக் கட்டிகள் மூலமாக குழந்தைகள் கிறுக்கி வைத்திருந்தால் அதை வெறும் துணியால் துடைத்தால் சுத்தமாக போகாது. அந்த சமயத்தில் பழைய டூத் பிரஷால் அதை தேய்த்து துடைத்தால் சட்டென போய்விடும்.
2. நகைகளை பளிச்சென ஆக்கலாம்!
தங்கமோ,வெள்ளியோ, கவரிங் நகைகளோ அவற்றை சுத்தம் செய்யாமல் அணிவதால் தோல் வியாதிகள் ஏற்படுவதுடன் நகைகளும் மங்கலாக இருக்கும். சிறிதளவு தண்ணீரில் சோப்பு பவுடரைப் போட்டு அதில் நகைகளை மூழ்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து நகைகளில் இடுக்குகளை மென்மையாக டூத் பிரஷால் தேய்க்கும் போது நகைகள் சுத்தமாகிப் பளிச்சிடும்
3. கதவு,ஜன்னல் இடுக்குகளில் அழுக்கா?
கதவு மற்றும் ஜன்னல் இடுக்குகளில் ஒட்டடை, அழுக்கு சேர்ந்திருக்கும். பூ வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளின் ஓரங்களில் இருக்கும் அழுக்கை சாதாரணமாக துடைப்பது கஷ்டம். இடுக்கான இடங்களில் பிரஷ் மூலம் தேய்க்க அழுக்கு போய்விடும்.
4. பளபளக்கும் காலணிகள்!
ஷூ, செருப்பு முதலான காலணிகளை சோப்பு நீரால் தொட்டு பிரஷால் தேய்த்து துடைத்தால் அழுக்குகள் நீங்கி பளிச்சென ஆகிவிடும். நன்கு சுத்தம் செய்த பின் ஷூ பாலிஷ் போடும் போது ஷூக்கள் பளபளக்கும்.
5. புருவம், மீசை அழகாக!
என்னதான் புருவம், மீசை இவற்றை நேர்த்தியாக வைத்திருந்தாலும் அவற்றை பிரஷ் செய்ய தவறிவிடுகிறோம். தவறாமல் சுத்தமான பிரஷால் அவற்றை சரி செய்யும் போது புருவம், மீசை அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.
6. நகங்களை சுத்தமாக்க!
நக இடுக்குகளில் இருக்கும் அழுக்கின் மூலமாக நோய்த் தொற்று ஏற்படலாம். அதனால் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். வெதுவெதுப்பான நீரில் நகங்களை சிறிது நேரம் வைத்து பின்னர் பிரஷால் மெதுவாக நக இடுக்குகளில் சுத்தம் செய்ய நகங்கள் பளிச்சென அழகாகும்.
7. ஹேர் டை அப்ளை செய்ய!
தலைமுடிக்கு ஹேர் டை அப்ளை செய்ய பிரஷை பயன்படுத்தும்போது சீராக தலைமுடியில் பரவுவதுடன் கைகளில் கறை ஏற்படாமல் தடுக்கும். ஆதலால், ஹேர் டைக்கு இதுவே பெஸ்ட் சாய்ஸ்.
8. வாகன இடுக்குகள் சுத்தமாக்க!
டூவீலர் மற்றும் கார்களில் கைகள் நுழையாத பகுதிகளில் பிரஷை விட்டு சுத்தம் செய்யலாம். செயினுக்கு எண்ணெய் போடுவதென்றால் பிரஷ் சீராக தடவ உதவும். கார் டேஷ் போர்டுகளில் உள்ள குறுகலான பகுதிகளியும் சுத்தம் செய்யலாம்.
9. கேஸ் அடுப்பு, சிம்னி, மைக்ரோவேவ் சுத்தம் செய்ய!
எண்ணெய் பசை படித்த கேஸ் ஸ்டவ் பர்னர்கள், சிம்னி இவற்றை சுத்தம் செய்ய பிரஷை பயன்படுத்தலாம். சமையல் சோடா, சோப்பு பவுடர் இரண்டையும் கலந்து வெந்நீரில் நனைத்த பிரஷால் தொட்டு தேய்க்க, எண்ணெய் பசை கொண்ட பகுதிகள் பளிச்சென காணாமல் போய்விடும்.
10. பெயிண்டிங் பண்ணலாம்!
சில இடங்களில் திக்கான டீட்டெயிலிங் தேவைப்படும் இடங்களில் பிரஷில் தொட்டு பெயிண்ட் செய்யும் போது ஓவியம் வித்தியாசமாகவும், விரைவாகவும் முடிந்துவிடும். பேஸ்ட் பயன்படுத்தி வரையும் போது மீண்டும் பிரஷை பயன்படுத்த வேண்டாம் என்று நினைக்கும் போது பழைய பிரஷ்கள் கைகொடுக்கும்
11.சீப்பை சுத்தமாக்க!
அடிக்கடி அழுக்காகும் ஒரு பொருள் சீப்பு. அதை சுத்தம் செய்வதற்குள் படாத பாடுபடுவோம். சூடான நீரில் சோப்பு பவுடரை கலந்து அதில் சீப்பை மூழ்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து பிரஷால் சீப்புகளின் இடுக்கில் வைத்து தேய்க்க சீப்பு புதிது போலாகிவிடும்.
12. டைல்ஸ் இடுக்குகளில் அழுக்கு போக!
இரண்டு டைல்ஸ்கள் ஒன்று சேரும் இடத்தில் அழுக்குகள் கோடு போல காட்சித் தரும். என்ன தான் மாப் போட்டுத் துடைத்தாலும் அழுக்குகள் போகாது. அதனால் டைல்ஸ் சுத்தம் செய்யும் ஆசிட்டை பிரஷால் தொட்டு இடுக்கில் தேய்த்து துடைத்தால் தரை புத்தம் புதிதாய் ஜொலிக்கும்.