'உறவுகளைப் பிரிக்கும் சுவர்!
சட்டவிரோதமாக மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அந்நியர்கள் ஊடுருவல் நிகழ்வுகள் நடப்பதாக, அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது.இதைத்தடுக்கும் வகையில் மெக்ஸிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான செலவை, மெக்ஸிகோ தரவேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்டு டிரம்ப் பேசி இருந்தார். இவரின் பேச்சு பிரசாரத்தின்போது, அமெரிக்கர்களிடையே பயங்கரமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் பதவி ஏற்ற டிரம்ப், தேர்தல் பிரசாரத்தில் சொன்னபடியே அமெரிக்கா, மெக்ஸிகோ எல்லையில் 3,200 கிலோ மீட்டர் (2000 மைல்) தூரத்துக்கு தடுப்புச் சுவர் கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்துவிட்டார். இத்தகவல் அறிந்த மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ, ‘இருநாடுகளுக்கு இடையில் தடுப்புச் சுவர்கள் கட்டுவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது. இது உறவுகளைதான் பிரிக்கும்.’ என்று தனது வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தார்.
இதற்கு பதில்அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'தடுப்புச் சுவர் கட்டுவதற்கு பணம் தராவிட்டால், மெக்ஸிகோ அதிபர் தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்வதே சிறப்பாக இருக்கும். அவரின் வருகை எங்களுக்கு அவசியம் இல்லை' என்று காரசாரமான கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இதை அறிந்த மெக்ஸிகோ அதிபர், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜனவரி 31-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அறிவித்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இதனால், இருநாடுகளுக்கு இடையே நிலவி வந்த மோதல் வெளிப்படையாக வெடித்துவிட்டது. இதற்கிடையில், மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்து, அதிலிருந்து கிடைக்கின்ற வருவாயை அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவிகித வரி விதித்திருப்பது மெக்ஸிகோ பொருட்களின் விலை, அமெரிக்காவின் வாடிக்கையாளர்களுக்கு அதிகமாகி, அமெரிக்கர்களே இந்த சுவருக்கான நிதியை செலுத்துவதாக அமைந்து விடும் என்று மெக்ஸிகோ வெளியுறவு அமைச்சர் லூயிஸ் அறிக்கை ஒன்றில் ட்ரம்புடனான, தன் எதிர்ப்பை மறைமுகமாக இவ்வாறு கூறியுள்ளார்.
மெக்ஸிகோ பாதிரியார்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இவ்விரு நாடுகளுக்கும் இடையே சுவர் எழுப்புவதால், ஏராளமான மக்கள், தங்கள் குடும்பங்கள், வேலைகள், மற்றும் நட்புகளை இழக்க வேண்டியிருக்கும். எல்லைச் சுவரைக் கட்டுவதற்குப் பதிலாக, பாதுகாப்பையும், வேலைவாய்ப்பையும் உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும். மெக்ஸிகோ வழியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்லக்கூடிய, மத்திய மற்றும் தென் அமெரிக்க மக்களுக்கு,தங்களின் ஆதரவைத் தொடர்ந்து வழங்குவோம்’’ என்று கூறியுள்ளனர்.
இது குறித்து இறுதியாக மெக்ஸிகோ அதிபர் நீட்டோ, ‘மெக்சிகோ மக்களின் நலனில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். இரு நாடுகளுக்கு இடையே நட்பையே விரும்புகிறோம். இருநாடுகளும் இணைந்து தீவிரவாதம், போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு, சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க முயற்சி எடுப்போம். இதற்கு மெக்ஸிகோ முழு ஒத்துழைப்பை கொடுக்கத் தயாராகவே இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
நன்றி
விகடன்.