மெரினாவில் சமூக விரோதிகள் ஊடுருவல்: சென்னை கமிஷனர் பேட்டி

மெரினாவில் சமூக விரோதிகள் ஊடுருவல்: சென்னை கமிஷனர் பேட்டி

சென்னை: மெரினா போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி கலவரத்தை உண்டாக்கியதாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறினார்.
இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி:
மெரினாவில் போராட்டக்காரர்களிடம் அரசு எடுத்த நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு சட்டம் குறித்தும் காவல் துறை சார்பில் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மிகவும் பொறுமையாக பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டம் துவக்கத்தில் அமைதியாக அறவழியில் சென்றது. அதை காவல் துறை தரப்பிலும் பாராட்டினோம். போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியது உளவுத் துறை மூலம் தெரியவந்தது. அந்த நபர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் தவறான வழியில் கொண்டு சென்றார்கள்.
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேறிய பிறகு கலைந்து செல்ல அறிவுறுத்தினோம். அறவழியில் போராடிய பெரும்பாலான மாணவர்கள் கலைந்து சென்றனர். சில பிரிவினர் மட்டுமே தொடர்ந்து போராடினர்.
வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல. சமூக விரோதிகள் காவல் துறையினர் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில் 94 காவலர்கள் காயம் அடைந்தனர். 51 காவல் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. சமூக விரோத சம்பவத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.