1970 களின் வெண்மைப் புரட்சிக்குப் பிறகு தான் இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகரித்ததா?
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வாயிலாக மக்கள் மத்தியில் நாட்டு மாடுகள் மற்றும் ஜெர்ஸி மாடுகள் குறித்து ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்திருந்தாலும், இந்த விழிப்புணர்வை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்ற குழப்பமும் வந்திருப்பதை மறுக்க முடியாது. இப்போதைய இந்திய மக்களின் பால் மற்றும் பால் பொருட்கள் தேவையை மிகுதியாக நிவர்த்தி செய்து கொண்டிருப்பது ஜெர்ஸி பசுக்களின் மூலமாகக் கிடைக்கும் பால் தான். இவற்றை இனிமேல் அருந்துவதற்கு இல்லையென்றோ, அல்லது இவற்றின் மூலமாகத் தயாரிக்கப்ப்படும் பனீர், பாலாடைக் கட்டிகள், நெய், வெண்ணெய், உள்ளிட்ட பால் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்றோ நம்மால் உடனடியாகப் புறக்கணித்து விட முடியுமா என்பதும் யோசிக்கப்பட வேண்டிய விசயமே! ஏனெனில் கோக், பெப்ஸிக்கு ஈடாக இன்று தமிழ்நாட்டில் மில்க்ஷேக் என்ற பெயரில் எல்லாக் கடைகளிலும் டெட்ரா பேக்குகளில் கிடைக்கக் கூடிய திரவ வஸ்துக்களில் இருப்பது எந்த மாட்டின் பால் என்பதும் கேள்விக்குரிய விசயம். அவற்றை என்ன செய்வதாக இருக்கிறோம்? நாட்டு பசுக்கள் மற்றும் காளைகளின் மீதான விழிப்புணர்வு மகிழ்ச்சியைத் தரும் அதே நேரத்தில் ஜெர்ஸி பசுக்களின் மீதான புறக்கணிப்பு உணர்வையும் நாம் சரியான விதத்தில் கையாள வேண்டும்.
ஏனெனில் 1970 களின் இந்திய வெண்மைப் புரட்சிக்குப் பிறகு தான் இந்தியாவில் சர்க்கரை நோய் விகிதம் உச்சத்திற்குச் சென்றதாக ஒரு விசயம் இன்று இணையம் மற்றும் அச்சு ஊடகங்களில் பரவலாகப் பேசு பொருளாகியிருக்கிறது. இதைப் பற்றிய தெளிவான ஆதாரங்களை முன்வைத்து, இந்தக் கூற்று நிஜம் அல்லது தவறு என்று மறுக்கக் கூடிய விசய ஞானம் உள்ளவர்கள் இதைப் பற்றி தெளிவாக தமிழ் ஊடகங்களில் எழுத முயற்சிக்கலாம். A1, A2 ரகப் பால் குறித்தும் தேவையற்ற வதந்திகள் பரவிக் கொண்டிருப்பதாக சில இணையப் பக்கங்களில் வாசிக்க நேர்ந்தது. இரண்டு வகைப் பால்களிலும் மனிதனின் உடல்னலனுக்கு கேடு விளைவிக்கும் மோசமான தன்மைகள் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர். இன்றைய சூழலில் அப்படி வாதிடுபவர்கள் அனைவரும் பீட்டா அமைப்பினர் என்று நாம் பொதுவாக நினைத்து விடக் கூடாது. இந்த வாதத்தின் முக்கியத்துவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். நமக்கு ஒட்டுமொத்தமாக அந்நியத் தயாரிப்புகளே வேண்டாம் என்பதல்ல இந்தப் போராட்டத்தின் நோக்கம். நாம் நமது பரம்பரை நாட்டு இனக் காளைகளையும், பசுக்களையும் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும், என்பது தான் பிரதான நோக்கம். அதிலிருந்து விலகி, ஜெர்ஸி பசுக்களின் பாலில் நிஜமாகவே சர்க்கரை நோயை உண்டாக்கக் கூடிய மூலக்கூறுகள் உள்ளனவா ? இல்லையா? என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இன்றி வெண்மைப் புரட்சிக்குப் பிறகு தான் சர்க்கரை நோய் இந்தியாவில் அதிகமானது எனும்படியான வாதங்களைப் பரப்புவது உண்மையில் மக்களைக் குழப்பும் முயற்சியாகத் தான் தோன்றுகிறது.
நன்றி
தினமலர்