கேரளாவின் "இடுக்கி " : பணிகள் தீவிரம்; தமிழக விவசாயிகள் அச்சம்
அமராவதி அணைக்கு முக்கிய நீர்வரத்து அளிக்கும், 'இடுக்கி பேக்கேஜ்' திட்ட பணிகளை, கேரள அரசு மீண்டும் செயல்படுத்தத் துவங்கியுள்ளது. இது, தமிழக ஆயக்கட்டு விவசாயிகளிடையே, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையின் மூலம், திருப்பூர், கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட, 55 ஆயிரம் ஏக்கர் நிலம், பாசன வசதி பெறுகிறது. அணையிலிருந்து, துவங்கும் அமராவதியாறு, 120 கி.மீ., துாரம் பயணித்து, காவேரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றை ஆதாரமாகக் கொண்டு, இரு மாவட்டங்களில், 75க்கும் அதிகமான கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், கேரள மாநிலம் மறையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், 838 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில், பருவ மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீர், பாம்பாறு, தேனாறு, சின்னாறு வழியாக அணைக்கு வருகிறது. பாம்பாற்றின் மூலமே, அமராவதிக்கு அதிக தண்ணீர் கிடைக்கிறது.மழை இல்லாததால் அணை நிரம்பவில்லை. நெல் சாகுபடி கேள்விக்குறியாகி, விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பாம்பாற்றின் துணை ஆறான செங்கல்லாற்றில் தடுப்பணை கட்டும், 'இடுக்கி பேக்கேஜ்' எனும் பழைய திட்டத்தை செயல்படுத்துவதில், கேரள அரசு, மீண்டும் தீவிரம் காட்டி வருகிறது.அதென்ன இடுக்கி பேக்கேஜ்பாம்பாற்றின் துணை ஆறான செங்கலாற்றில், பட்டிச்சேரி எனும் இடத்தில், புதிய தடுப்பணை கட்ட, 2014ல், கேரள அரசு, 24 கோடி ரூபாய் ஒதுக்கியது. 'இடுக்கி பேக்கேஜ்' எனும் இத்திட்டத்துக்கு, அதே ஆண்டு நவம்பரில், பூமி பூஜையும் நடந்தது.ஏற்கனவே, அணைக்கு நீர் வரத்து குறைந்து, சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்த, தமிழக விவசாயிகள், தடுப்பணை கட்டும் திட்டத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியதையடுத்து, தடுப்பணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கிடப்பில் போட்டது.பொருட்கள் குவிப்புஇரண்டு ஆண்டுகளுக்கு பின், இப்போது மீண்டும் அதே இடத்தில் தடுப்பணை கட்டுமான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது, கேரள அரசு. அப்பகுதியில் உள்ள சிறிய தடுப்பணையின், தடுப்புச்சுவர் உட்பட கட்டுமானங்களை அப்புறப்படுத்தி விட்டு, அருகிலுள்ள மலைத் தொடரை இணைத்து, பெரிய தடுப்பணை கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது.இதற்காக, அங்குள்ள நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. கனரக வாகனங்களால், மலைத்தொடரில், பெரிய பாதையும் உருவாக்கப்பட்டுள்ளது. தடுப்பணை வந்தால் பாம்பாற்றுக்கும், அமராவதி அணைக்கும் நீர் வரத்து முற்றிலும் குறையும். வரும் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில், அணைக்கு கிடைக்கும் நீர்வரத்து, பாதியாக சரியும்.பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:செங்கல்லாற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை, கேரள அரசு துவக்கியுள்ளது உண்மை தான். இதற்கான, விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு, மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காவிரியின் துணை ஆறான அமராவதியில், 3 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என, கோர்ட் உத்தரவு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் செயல்பாட்டுக்கு வரும் முன், எவ்வித அறிவிப்பும் இல்லாமல், தடுப்பணை கட்டுவது தவறானது. இது குறித்து, மாநில அரசின் வழிகாட்டுதலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
'உடனே தடுக்க வேண்டும்'
ராமகுளம் பாசன சபை தலைவர் மாரியப்பன் கூறுகையில், ''அமராவதி பாசன திட்டத்தை முடக்கும் வகையில், கேரள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, இரு மாவட்ட விளை நிலமும் வறண்டு விட்டதால், தடுப்பணை கட்டும் முயற்சியை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக, மத்திய அரசை அணுக, பொதுப்பணித் துறை அமைச்சர் தலைமையில் குழு அமைத்து, நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்,'' என்றார்.
நன்றி
தினமலர்.