இந்தியாவின் 'ரொக்கமில்லா புரட்சி' பாடம் கற்க அமெரிக்காவுக்கு அழைப்பு

இந்தியாவின் 'ரொக்கமில்லா புரட்சி' பாடம் கற்க அமெரிக்காவுக்கு அழைப்பு


வாஷிங்டன்:''ரொக்கமில்லா சமூகத்துக்கு மாறுவதில், இந்தியா மேற்கொண்டு வரும் புதிய நவீன தொழில்நுட்ப முயற்சிகள் குறித்து அமெரிக்கா பாடம் கற்க வேண்டும்,'' என, அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிபுணர் விவேக் வாத்வா கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வெளியாகும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில், பிரபல தொழில்நுட்பத் துறை பேராசிரியரும், நிபுணரான, விவேக் வாத்வா, 'ரொக்கமில்லா சமூகத்தை நோக்கி முன்னேறும் இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா என்ன கற்றுக் கொள்ள வேண்டும்' என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ரொக்கமில்லா சமூகத்தை நோக்கி, இந்தியா முன்னேறி வருகிறது. இதற்காக பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், மிகவும் சுலபமான, தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளன. குறிப்பாக, யு.பி.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த கட்டண முறை, மற்ற எந்த தொழில்நுட்பத்தையும் விட மிகவும் வேகமானதாக உள்ளது. இந்த முறையில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு, சில வினாடிகளே போதுமானது.
இந்த மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியின் மூலம், மற்ற நாடுகளை விட, இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது அங்கு, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், ஒரே நேரத்தில் பல கோடி பரிவர்த்தனைகள் நடந்தாலும், அதை சமாளிக்கக் கூடியதாக அதன் தொழில்நுட்பம் உள்ளது.
நிதி தொடர்பான தொழில்நுட்ப முன்னேற்றத்தில், இரண்டு தலைமுறைகளைத் தாண்டி, இந்தியா இன்னும் வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில், ரொக்கமில்லா சமூகத்தை உருவாக்க முடியாவிட்டாலும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு, நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும், இந்த தொழில்நுட்ப முயற்சிகள் குறித்து, அமெரிக்காவும், சிலிக்கான்வேலியில் உள்ள நிறுவனங்களும் பல பாடங்களை கற்க வேண்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் உடனடி பலனாக, டிஜிட்டல் பரிவர்த்தனை புரட்சி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொழில்நுட்ப ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், நீண்டகாலப் பலன்களை அதிகளவில் காண முடியும். பொருளாதாரத்தில் சீர்திருத்தம் செய்வதுடன், அதை நவீனபடுத்தும் முயற்சியில் மோடி ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.