"சசிகலாவாகிய நான்..."
இங்கிலீஸ் மருந்துக்காரர் வீட்டிலிருந்து வந்து ஜெ.,வின் உற்ற தோழியானார்... விரைவில் "சசிகலாவாகிய நான்..." என்று தமிழக முதல்வராக போகிறார்..!
சென்னை: அப்போதைய தஞ்சை மாவட்டம், தற்போதைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வி.கே.சசிகலா இன்று தமிழக முதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். தென் தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்த அவர் இன்று தமிழகத்தின் முதல்வராக உள்ளார். யார் இந்த சசிகலா பார்ப்போமா!
அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் இருந்தது திருத்துறைப்பூண்டி. இந்த ஊரை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் விவேகானந்தன். இவர் ஒரு 'இங்கிலீஷ் மருந்துக் கடை' வைத்தார். அந்த காலத்தில் 'மெடிக்கல் ஷாப்' என்பது மிகவும் அரிதான ஒன்று. அதனால் அவர்கள் வீட்டிற்கே 'இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் வீடு' என்ற பெயர் வந்து சேர்ந்தது.
இந்த விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிகளுக்கு சுந்தரவதனம், வனிதாமணி, வினோதகன், ஜெயராமன், சசிகலா, திவாகரன் என 6 குழந்தைகள் பிறந்தனர். இதில் 5 வதாக பிறந்தவர்தான் சசிகலா.
திருத்துறைப்பூண்டியில் இருந்த விவேகானந்தன் குழந்தைகளின் படிப்புக்காக மன்னார்குடிக்கு மாறினார். அங்கு 'பின்லே' போர்டு ஹை ஸ்கூலில் தான் சசிகலா படித்தார். பள்ளி நாட்களில் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். சில பரிசுகளும் வாங்கி இருக்கிறார். ஆனால் 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டனர். இப்படி திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் வளர்ந்த சசிகலா தமிழக அரசியலில் எப்படி இடம் பிடித்தார். இதற்கு காரணம் அவரது கணவர் நடராஜன்.
தஞ்சையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம்தான் 'விளார்'. இந்த ஊரில் சிறு விவசாயியான மருதப்பனுக்கு பிறந்த நடராஜனுக்கும், சசிகலாவிற்கும் திருமணம் நடந்தது. தி.மு.க மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடராஜன் இந்தி ஒழிப்பு போராட்டத்தில் பங்கு கொண்டவர். மொழிப்போராட்டத்தில் நடராஜனின் சமகாலத்தை சேர்ந்தவர்கள்தான் தி.மு.க துரைமுருகன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, தி.மு.க ஆட்சியில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பதவி கொடுத்தார் கருணாநிதி. அப்படித்தான் நடராஜனுக்கும், மக்கள் தொடர்புத் துறையில் வேலை கிடைத்தது.
இதற்கு பிறகுதான் அதாவது 1970-ம் ஆண்டு நடராஜன் - சசிகலா திருமணம் நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதிதான் நடராஜன் - சசிகலா திருமணத்தை நடத்திவைத்தார். ஆனால் இன்று சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர்... இன்னும் சில நாட்களில் தமிழக முதல்வர். என்ன ஒரு வரலாற்று விநோதம் இது!
1980-ம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றிருந்த நேரம். அரசியலில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர்., ஒதுக்கி வைத்திருந்தார் காலக்கட்டம். கட்சிக்காரர்கள் யாரும் ஜெயலலிதாவுடன் எவ்வித பேச்சும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கடுமையான உத்தரவையும் பிறப்பித்து இருந்தார் எம்.ஜி.ஆர்.
அந்த உத்தரவு கட்சிக்காரர்களுக்காக இருந்தாலும் தமிழ் திரை உலகமும் அதை பின்பற்றியது. சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கின ஜெயலலிதாவுக்கு.
இருப்பினும் ஜெயலலிதா சோர்ந்து விடவில்லை. போராட்டக்குணம் நிரம்பியவர் அல்லவா. முடக்கி போட முடியுமா? நாடகங்கள் போட்டார். நடித்துக் கொண்டிருந்தார். அதை யாரும் தடுக்கவில்லை. இருப்பினும் இந்த காலக்கட்டம் ஜெயலலிதாவிற்கு மிகவும் சோதனையான நேரம்தான்.
அப்போதுதான் மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் 'காவிரி தந்த கலைச் செல்வி' என்ற நாடகத்தை நடத்தும் வாய்ப்பை ஜெயலலிதாவுக்கு கொடுக்க பலகட்ட யோசனைக்கு பின்னர் ஒத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். இதனால் உற்சாகமடைந்த ஜெயலலிதா நாடகத்தை சிறப்பாக நடத்தி காட்ட எம்.ஜி.ஆருக்கு இருந்த கோபம் தணிந்தது.
அப்போதுதான் ஜெயலலிதாவுக்கு கட்சியிலும் ஏதாவது பொறுப்பு கொடுக்கலாம். அ.தி.மு.க., வின் கூட்டங்களுக்கு ஜெயலலிதாவை அனுப்பினால் மக்கள் அதிகளவில் வருவார்கள் என்று கணித்தார் எம்.ஜி.ஆர். அவரது கணிப்பு என்று பொய்த்துள்ளது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் 1982-ம் ஆண்டு, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளர் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார்.
எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையான ஜெயலலிதா. அப்போது கடலூரில் ஜெயலலிதா நடத்திய சத்துணவுத் திட்ட நிகழ்ச்சி வெகுவாக கவனம் ஈர்த்தது. அதற்கு காரணம், கலெக்டர் சந்திரலேகாவிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன்.
முதல்வர் எம்.ஜி.ஆரின் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்ததை சிறப்பான செய்தியாக்கினார் நடராஜன். இப்படியே சென்னைக்கு தன் மனைவியுடன் வந்து சேர்ந்தார் நடராஜன். ஆழ்வார்பேட்டையில் குடியேறிய இவர் பி.ஆர்.ஓ என்பதால், புகைப்படக்காரர்கள், வீடியோ எடுப்பவர்களின் தொடர்பு அதிகளவில் கிடைத்தது.
போட்டியில்லாத தொழிலாக அந்த காலத்தில் இருந்த வீடியோ தொழில் நடராஜனுக்கு சிறப்பானதாக பட வீடியோ என்றால் என்ன, வீடியோ கேசட் என்றால் எப்படி இருக்கும்? என்று தமிழகத்துக்கே தெரியாத காலத்தில் நடராஜன், ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸில் வீடியோ கடை ஆரம்பித்தார்.
'வினோத் வீடியோ விஷன்' என்பதுதான் அந்த கடையின் பெயர். அந்தக் கடையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சசிகலாவுக்கு வந்து சேர்ந்தது. அரசு நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும் வாய்ப்புக்களை நடராஜன், தனது தொடர்புகள் மூலம் பெற்று, அவற்றை தனக்குச் சொந்தமான வீடியோ கடை மூலமே செய்து கொடுத்தார்.
ஓய்வுநேரத்தில் படங்கள் பார்க்க வீடியோ கேசட்டுகளை கேட்டுள்ளார் ஜெயலலிதா. அது நடராஜன் வாயிலாக சசிகலாவை சென்றடைந்தது. வீடியோ கேசட்களுடன் 1982-ம் ஆண்டு சசிகலா போயஸ் கார்டனுக்கு ஆரம்பித்த பயணம்தான் இப்போது அவரை முதல்வர் நாற்காலிவரை வந்து நிறுத்தி உள்ளது.
அ.தி.மு.க கொள்கைபரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் கொடுக்கும் வாய்ப்பும் சசிகலாவின் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைக்க அப்படியே ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்தார் சசிகலா.
தொடர்ந்து வந்த காலங்களில் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக வலம் வந்தார். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினரானபோது, அவரோடு டில்லிக்கு செல்லும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார் சசிகலா.
எம்.ஜி.ஆர் மறைவிக்கு பிறகு கட்சி இரண்டாக பிளவுப்பட சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவிற்குப் பின்னால் அணி திரண்டனர். இதுவே, ஜெயலலிதா வெகுவாக சசிகலாவை சார்ந்திருப்பவராக மாற்றியது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
1991-ல் ஜெயலலிதா முதல்வராகிறார். அப்போது அவருக்கு மிக நெருங்கிய தோழி, உறவு என அனைத்துமாக மாறியிருந்தார் சசிகலா. ஜெயலலிதா நிழலாகவே மாறி பின்தொடர்ந்தார் சசிகலா.
சசிகலாவின் விசுவாசத்தை ஜெயலலிதா பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருந்தார். இதுதான் ஜெயலலிதாவின் கடைசி மூச்சு அவரை விட்டு பிரியும் வரை சசிகலாவைப் அவர் பக்கத்திலேயே வைத்திருக்கக் காரணமாக மாற்றியிருந்தது. இடையில் ஏற்பட்ட சிறிதுகால பிரிவு கூட தொடர முடியாமல் போனதற்கு ஜெ., சசியின் மீது வைத்திருந்த நட்பு என்றே கூறலாம்.
'சசிகலா என் உடன்பிறவா சகோதரி' என்றே ஜெயலலிதா அறிவித்தது யாராலும் மறக்க முடியாத ஒன்று. இப்படி அரசியல் அரங்கில் தன் அதிகாரத்தை வலுவாக ஊன்ற ஆரம்பித்த சசிகலா தன் உறவுகளுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார். அந்த உறவுகளே நிழல் அமைச்சரவை போல் செயல்பட்டது என்பதும் யாராலும் மறக்க முடியாது.
ஜெயலலிதாவின் நட்பால் அதிகமாய் தலைகாட்டாத சசிகலாவுக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செய்யும் சக்தியைக் கொடுத்தது. கட்சியில் சசிகலா ஜெயலலிதாவிற்கு அடுத்த 'நிழல்' தலைவராக வலம்வந்தார்.
சசிகலாவுக்கு ஆஸ்தான ஜோதிடர், வடுகப்பட்டி தர்மராஜன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே "ஒரு காலத்தில் சசிகலா, தமிழகத்தின் முதல்வர் ஆகிவிடுவார் என்று சொல்லியிருந்தது இப்போது உண்மை ஆகும் என்றே தெரிகிறது. இப்படி எம்.ஜி.ஆர். என்று பெரும் ஆளுமை வளர்த்த அ.தி.மு.க.... ஜெயலலிதா என்ற பெண் சிங்கத்தின் கர்ஜனையில் ஆலமரமாய் அழுத்தமாய் தமிழக வரலாற்றில் இடம் பிடித்தது. இப்போது சசிகலாவின் பிடிக்கு முழுமையாக வந்து சேர்ந்துள்ளது அ.தி.மு.க.
நாளை நடப்பதை யார் அறிவார்... யார் அறிவார்...