விசுவாத்திற்கு பேர் போன பன்னீரு

விசுவாத்திற்கு பேர் போன பன்னீரு

சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அ.தி.மு.க.,வில் அதிரடியாக சில காட்சிகள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சமீபத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டு மொத்தமாக ஒன்று கூடி, சசிகலாவை, அ.தி.மு.க.,வின் சட்டசபை தலைவராக தேர்வு செய்தனர்.
சசிகலா முதல்வராவதை அ.தி.மு.க.,வினர் பலர், குறிப்பாக அடிமட்டத் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், கட்சி நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் பல்வேறு காரணங்களுக்காக, கட்சி தொண்டர்களின், பொதுமக்களின் எண்ண ஓட்டத்தை, விருப்பத்தை, சசிகலாவிற்கான எதிர்ப்பை கட்சி மேலிடத்திடம் தெரியப்படுத்தவில்லை. இதனால், எவ்வித தங்கு, தடையின்றி சசிகலா முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். சசிகலாவிற்கு எதிராக யாரும் பேசாத நிலையில், பன்னீர்செல்வம் அவருக்கு எதிராக வாய்ஸ் கொடுத்திருப்பது, அனைத்து தரப்பினரிடம் இருந்தும் வரவேற்பு பெற்றுள்ளது.
தற்போதுள்ள சூழலில், பன்னீர்செல்வத்திற்கு நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் ஆதரவு பெருகி வருகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
1. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளதாக கருதும் பொதுமக்கள், அதன் பின்னணி குறித்த விஷயத்தில் சசிகலாவை சந்தேக கண்ணோடு பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சசிகலா முதல்வராவதை விரும்பவில்லை. ஆனால், ஒட்டு மொத்த எம்.எல். ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களின் ஆதரவு சசிகலாவிற்கு இருப்பதால், சசிகலா பதவிக்கு வருவதை தடுக்க முடியவில்லை. யாருமே எதிர்ப்பு காட்டாத நிலையில், பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக போர்க் கொடி தூக்கியது, மகிழ்ச்சியளிக்கிறது . இதனால், அடிமட்ட தொண்டர்களும், பொதுமக்களும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நிற்கின்றனர். எல்லாருக்கும் பயம்
2. அ.தி.மு.க., கடந்த காலங்களில் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தபோது, சசிகலாவின் சொந்தங்கள் பலர் அத்துமீறி, அரசு நிர்வாகத்தில் புகுந்து தங்கள் காரியத்தை சாதித்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஜெயலலிதா இருந்தபோதே, மன்னர்குடி வகையறாக்களின் கைவரிசை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தற்போது அவர்களே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் நாடு, ஆட்சி நிர்வாகம் என்ன ஆகும் என்ற பயம் எல்லாருக்கும் வந்துவிட்டது. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தால் மட்டுமே சசிகலா சொந்தங்களை கட்டுப்படுத்த முடியும் என்று கருதுவதால், பன்னீருக்கு ஆதரவு பெருகுகிறது.
3. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், முதல்வராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், வார்தா புயல் நேரத்திலும், கிருஷ்ணாநீரை பெறுவதிலும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந்தரமாக நீக்குவதிலும், கடலில் கலந்த கச்சா எண்ணையை துரிதமாக அகற்றும் பணியிலும் மக்களிடம் நல்ல பெயரை பெற்றார். ஜெயலலிதாவை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டார் . இவரே தொடர்ந்து முதல்வராக இருந்தால் பல நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவார் என்று நம்பிக்கை உள்ளது. இதுவும், பன்னீர்செல்வத்திற்கு பெரும் ஆதரவிற்கு முக்கிய காரணம்.
4. அதிகாரம் மிக்க முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தாலும், பன்னீர்செல்வத்தின் தன்னடக்கம், எளிமை, நிதானம், பொறுமை ஆகியவை அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளன. அ.தி.மு.க,வினர் மட்டுமல்லாமல், எதிர்கட்சியினர் கூட பன்னீர்செல்வத்தின் இந்த குணத்தை பாராட்டுகின்றனர். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, சட்டசபை கூட்டத்தை அமைதியாகவும், பொறுப்பாகவும் பன்னீர்செல்வம் நடத்தி சென்றது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கிடைப்பதற்கு இதையும் காரணமாக கூறலாம்.
5. அ.தி.மு.க.,வில், சசிகலா குடும்பத்தினரால் பழிவாங்கப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர். ஜெயலலிதாவை பக்கபலமாக வைத்து, கட்சி நிர்வாகிகளையும், அதிகாரிகளையும் சசிகலாவின் உறவினர்கள் சிலர் பந்தாடியது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம், தற்போது பன்னீர்செல்வத்தை ஆதரிக்க முன் வந்துள்ளனர். இவர்களில், கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் அதிகம். இவர்களின் ஆதரவு, பன்னீர்செல்வத்திற்கு ஒருவகையில் பலத்தை கூட்டி உள்ளது என்று கூறலாம்.
6. அ.தி.மு.க, தொண்டர்களை பொறுத்த வரையில், பன்னீர்செல்வமா, சசிகலாவா என்று கேட்டால், பன்னீர்செல்வத்தை தான் கை காட்டுகின்றனர். ஏனெனில், இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம், தனது அதிகாரத்தை பன்னீர்செல்வத்திடம் தான் ஜெயலலிதா கொடுத்தார். விசுவாசத்திற்கு பன்னீர் தான் எடுத்துக்காட்டு என குறிப்பிட்டு, பல கூட்டங்களில், ஜெயலலிதா பாராட்டி பேசினார். அந்த அளவிற்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற பன்னீர்செல்வம் தான் கட்சி பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பது சாதாரண மக்களின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு பொமக்கள் பேசிக்கொள்கின்றனர்.
நன்றி
தினமலர்.