சசிகலாநடராஜன் முதல்வர் பதவி ஏற்க போயஸ் கார்டன் இல்லம் முன் சங்கு ஊதி அதிமுகவினர் எதிர்ப்பு; நள்ளிரவில் போலீசார் கைது செய்து மிரட்டல்

சசிகலாநடராஜன் முதல்வர் பதவி ஏற்க போயஸ் கார்டன் இல்லம் முன் சங்கு ஊதி அதிமுகவினர் எதிர்ப்பு; நள்ளிரவில் போலீசார் கைது செய்து மிரட்டல்


சென்னை- சசிகலாநடராஜன் முதல்வர் பதவியை ஏற்கக்கூடாது என்று, போயஸ் கார்டன் இல்லம் முன் நேற்று நள்ளிரவு பாப் பாடியும், சங்கு ஊதியும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் மற்றும் பாடகர் குழுவை போலீசார் கைது செய்து மிரட்டி அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலாநடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழக முதல்வராக அவர் பதவியேற்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அவர் முதல்வர் பதவியேற்க உள்ளார் என்ற செய்தி கேள்விப்பட்ட நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து, வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதள ஊடகங்களில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். “நாங்கள் கடந்த தேர்தலில் ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்றுதான் வாக்களித்தோம்.
ஆனால் தற்போது பின்வாசல் வழியாக சசிகலாநடராஜன் முதல்வராக முயற்சி செய்கிறார். தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் ஆக வேண்டும்” என்ற கருத்துக்களை அவர்கள் பதிவு செய்தனர். இதுபோன்ற விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், இன்று முதல்வராக பதவியேற்க சென்னை, பல்கலைக்கழகத்தில் விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக செய்யப்பட்டது. ஆனால், தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் டெல்லியில் இருந்து சென்னை வர மறுத்து விட்டார். இதனால், இன்று முதல்வராக பதவியேற்க உள்ள நிகழ்ச்சி நேற்று இரவு ரத்து செய்யப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் வெளியாகும் தீர்ப்புக்கு பிறகே முதல்வராக பதவியேற்பார் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில், சென்னையை சேர்ந்த சோபியா தேன்மொழி என்ற இளம்பெண் தலைமையிலான ராப் பாடல் குழுவினர் 10 பேர் நேற்று நள்ளிரவு, போயஸ் கார்டன் இல்லம் அமைந்துள்ள பின்னி சாலையில் கித்தார் உள்ளிட்ட சில இசை கருவிகளுடன் பாடல் பாடியபடி சென்றனர். அப்போது, “ஊர் முழுவதும் பொய் வாக்கு... வெறும் நாக்கு, ஊர் பக்கம் கொஞ்சம் எட்டிப்பார்... உன் கிட்ட பதவி கேட்டானா? உன்னோட பதவி கேட்டேனா?” என்று வலியுறுத்தி ராப் பாடியபடி சென்றனர்.
இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். ராப் பாடல் குழுவினர், போலீசாரிடம் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அனைவரின் பெயர், செல்போன் எண், வீட்டு விலாசம் உள்ளிட்ட தகவல்களை போலீசார் பெற்றுக்கொண்டு ராப் பாடல் குழுவினரை அங்கிருந்து அகற்றினர். முன்னதாக, நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் போரூரை சேர்ந்த 10 அதிமுக தொண்டர்கள் சசிகலாவை புகழ்ந்து பாடியபடி போயஸ் தோட்டம் அருகே வந்தனர். அங்கிருந்த போலீசாரும், சசிகலாவை புகழ்ந்து தானே பாடுகிறார்கள் என நினைத்து அவர் தங்கியுள்ள வீடு வரை செல்ல அனுமதித்தனர். போயஸ் இல்லம் அருகே சென்ற அதிமுக இளைஞர்கள், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த சங்கை எடுத்து ஊத தொடங்கினர். இதனால், போயஸ் கார்டன் இல்லத்துக்குள் இருந்த போலீசார் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். அந்த சமயம், சசிகலாவும் பால்கனி வரை வந்து வெளியே யார் சங்கு ஊதுகிறார்கள் என்று எட்டிப்பார்த்தார்.
பின்னர் அந்த பகுதியில் இருந்த ஏராளமான போலீசார், அதிமுக கும்பலை சுற்றி வளைத்து கைது செய்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். சசிகலாநடராஜன் முதல்வர் பதவி ஏற்க கூடாது என்று, நேற்று நள்ளிரவு போயஸ் கார்டன் இல்லம் எதிரே நடந்த இந்த இரண்டு சம்பவங்களை தொடர்ந்து ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.