ஓபிஎஸ்-ஸை இயக்குவது ஸ்டாலினா?

ஓபிஎஸ்-ஸை இயக்குவது ஸ்டாலினா?


சென்னை, பிப்.08 (டி.என்.எஸ்) முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டியும், அதனைத் தொடர்ந்து அவர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகளும், தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
தற்போது, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை கூட்டியுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, இதில் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகவும், அதில் ஒன்று, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பன்னீர் செல்வத்தை நீக்குவதாகவும், கூறப்படுகிறது.
பன்னீர் செல்வத்தின் இத்தகைய பேட்டிக்கும், நடவடிக்கைக்கும் பின்னாள், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பதாக, சசிகலா உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டசபை கூட்டத்தின் போது, ஸ்டாலினும், ஓபிஎஸும், ஒருவரை ஒருவர் பார்த்து அடிக்கடி சிரித்துக் கொள்வார்கள் என்றும், இதனால், ஓபிஎஸை இயக்குவது ஸ்டாலின் தான் என்றும் சசிகலா தரப்பு கூறியுள்ளது.
சசிகலாவின் இத்தகைய குற்றச்சாட்டை மறுத்துள்ள பன்னீர் செல்வம், ”10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பொருளாளர் பொறுப்பில் ஜெயலலிதா என்னை நியமித்தார். அம்மாவின் மன நிறைவு பெறும் வகையில் பணியாற்றி வந்துள்ளேன். ஜெயலலிதா அளித்த பொருளாளர் பதவியில் இருந்து என்னை அகற்ற தமிழகத்தில் யாருக்கும் உரிமை இல்லை.
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் சிரிப்பு தான். மனிதர்கள் தான் சிரிப்பார்கள், மிருகங்களால் முடியாது. மடியில் கனம் இல்லை. அதனால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.