டிஜிட்டல் மயம் மட்டுமே குறிக்கோளாகிறது ரயில் கட்டணம் எந்நேரமும் உயரலாம்

டிஜிட்டல் மயம் மட்டுமே குறிக்கோளாகிறது ரயில் கட்டணம் எந்நேரமும் உயரலாம்

மத்திய பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகள் ஏதும் இல்லாததால் தமிழக பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பட்ஜெட் அறிவிப்பாக இல்லாமல் ரயில்வே கட்டணமும் எந்த நேரத்திலும் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் உள்ள நடைமுறையை மாற்றி இவ்வாண்டு பொது பட்ஜெட்டோடு ரயில்வே பட்ஜெட்டும் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தனி ரயில்வே பட்ஜெட் இல்லாததால் பயணிகள் சந்தேகத்தோடு பட்ஜெட்டை எதிர்நோக்கினர். பயணிகள் எதிர்பார்த்ததுபோலவே பெரிய அளவில் ரயில்வே துறைக்கு திட்டங்கள் இம்முறை அறிவிக்கப்படவில்லை.
மத்தியில் பாஜ அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்று வரை தென்மாவட்டங்களுக்கு ஒரு தினசரி ரயில் அறிவிக்கப்படவில்லை. இரட்டை ரயில்பாதை குறித்த நிதி ஒதுக்கீடுகள் மட்டுமே யானை பசிக்கு சோளப்பொறியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய பட்ஜெட்டில் குறைந்தபட்சம் இரு ரயில்கள் அறிவிப்பு மற்றும் ஒரு சில ரயில்கள் நீட்டிப்பு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தமிழகத்தில் எவ்வித ரயில்களும் நடப்பு பட்ெஜட்டில் அறிவிக்கப்படவில்லை. புதிய ரயில்கள் அறிவிப்புக்கு பதிலாக சிறப்பு கட்டண ரயில்களை இயக்கி கொள்ள ரயில்வே துறை முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. பிரிமியம் மற்றும் சுவீதா உள்ளிட்ட கூடுதல் கட்டண ரயில்களை கூட்ட நேரங்களில் அறிவிப்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழக ரயில் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
டிஜிட்டல்மயம் என்ற ஒரு திட்டத்தை மட்டுமே ரயில்வே துறை அதிகளவில் வலியுறுத்தி வருவதாக புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ரயில்வே பட்ஜெட் குறித்து மக்கள் மத்தியில் மட்டுமின்றி, ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் மத்தியிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக பட்ெஜட் கருத்து கேட்புக்காக ஒவ்வொரு கோட்டத்திலும் இருமுறை கூட்டங்கள் நடத்தி, அதில் பயணிகள் சங்கத்தினர், எம்.பி.க்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. பலரும் கோட்ட அதிகாரிகளிடத்தில் மனுக்கள் அளித்தனர். தெற்கு ரயில்வேயில் மட்டுமே 500க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட சூழலில், எவ்வித கோரிக்கையையும் ரயில்வே நிர்வாகம் செவிமடுக்கவில்லை.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்ம நாயகம் கூறியதாவது: ரயில்வேயை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகளுக்கு மட்டுமே நடப்பு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இரட்டை ரயில்பாதை உள்ளிட்ட திட்டங்கள் மாநில அரசு, தனியார் பங்களிப்பு இருந்தால் மட்டுமே நிறைவேற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது. முன்பெல்லாம் ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கைகளை கொண்டு சென்றால், அவர்கள் மண்டல அதிகாரிகளுக்கு அனுப்புவதோடு, எம்.பி.க்களை வலியுறுத்தி பேச கூறுவர். இனிமேல் அதற்கு வழியில்லை. தமிழகத்தில் இம்முறை புதிய ரயில்களுக்கு அறிவிப்புகள் இல்லை. பட்ஜெட் அறிவிப்பாக இல்லாமல் ரயில்வே கட்டணமும் எந்த நேரத்திலும் கூட்டப்படலாம் என்ற அச்சத்தோடு பயணிகள் உள்ளனர்’’ என்றார்.