திமுக-வுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ் : ஆபரேஷன் 31?

திமுக-வுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ் : ஆபரேஷன் 31?


சென்னை, பிப்.07 (டி.என்.எஸ்) சசிகலாவுக்கு ஆதாரவு தெரிவிக்கும் வகையில் தனது முதல்வர் பதவியை ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தாலும், தற்போது வரை அமைதியாகவே உள்ளார்.
சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் நிலையில், ஓபிஎஸ் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாத வகையில், அவரது ஏரியாவில் அமைதி நிலவி வருகிறது.
இந்த நிலையில், சசிகலாவுக்கு வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, தற்போது களத்தில் இறங்கிவிட்டது. இன்று மாலை டெல்லி புறப்படும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து விளக்குவதுடன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்க இருக்கிறார்.
அதேபோல்,சசிகலாவை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதில் விருப்பம் இல்லாத மத்திய அரசு அவரது பதவி ஏற்பை ஆளுநர் மூலம் தள்ளி வைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த மத்திய அரசும், திமுக-வும், தற்போது நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும், அதன் மூலம் அவர் சசிகலாவுக்கு எதிரான திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் முதல் கட்டமாக அதிமுக-வில் உள்ள 31 எம்.எல்.ஏ-க்களிடம் ஓபிஎஸ் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம். இவர்கள் அனைவரும் ஒபிஎஸ் தலைமையில் திமுக-வுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் பொம்மை அரசாங்கத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இப்படி செய்தால், சசிகலா முதல்வராவதை தடுத்து விட முடியும் என்பதால், இந்த திட்டத்திற்கு ஆபரேஷன் 31, என்று பெயர் வைக்காத குறையாக, ரொம்ப தீவிரமாக செயல்படுத்தியும் வருவதாக அரசியல் ஏரியாவில் பேச்சு அடிபடுகிறது.
இதற்கிடையில், இன்று மாலை அல்லது நாளை ஆளுநர் வித்யாசாகர், சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.