ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் செப். 22ல் நடந்ததை விசாரிக்க வேண்டும் - பொது செயலாளர், முதல்வராக சசிகலா தகுதி அற்றவர் பி.எச்.பாண்டியன் பரபரப்பு பேட்டி
சென்னை- ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் போயஸ்கார்டன் வீட்டில் செப்டம்பர் 22ம் தேதி நடந்த நிகழ்வுகளை விசாரிக்க வேண்டும் என்றும், பொது செயலாளர், முதல்வராக சசிகலா தகுதி அற்றவர் என்றும் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார். ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி அப்பலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அன்று இரவே பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். தற்போது முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளார். சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு மாநிலம் முழுவதும் அதிமுகவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான கே.பி.முனுசாமி, இது குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக, ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் எம்பியும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன், அவரது மகனும் முன்னாள் எம்எல்ஏ, எம்பி, வழக்கிறஞர் பிரிவு செயலாளருமான பால்மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று காலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் கூட்டாக பேட்டியளித்தனர்.
அதில், அதிமுக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அளித்த பேட்டி:
முதல்வர் ஜெயலலிதா மரணம் தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். அவர் இறந்ததில் இருந்து நான் மவுனமாக இருந்தேன். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது எனது கருத்துக்களை தெரிவிப்பதற்காக மவுனத்தை கலைத்துள்ளேன். செப்டம்பர் 22ம் தேதி முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மயக்கமடைந்து, மூச்சு திணறல், உடலில் நீர்ச்சத்து குறைவு காரணமாக சுய நினைவை இழந்த நிலையில் அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்டேன். அன்று இரவு என்ன நடந்தது என்பதை யோசித்து பார்த்தேன். வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது முற்றி கைக்கலப்பில் போய் முடிந்து போனதாகவும், அதில் ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டார். அவர் என்னை தூக்குங்கள் என்று கூறியும், யாரும் தூக்கவில்லை என்ற செய்தியை மறுநாள் பத்திரிகைகளில் பார்த்தேன். அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பிரச்னை என்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாவும் தகவல் வெளியானது.
நான் ஆஸ்பத்திரியில் சென்று பார்த்த போது மாலையில் வீடு திரும்பி விடுவார் என்றும் தெரிவித்தனர். ஆஸ்பத்திரியில் உள்ளே நுழைந்த போது இரண்டு விதமான உடையில் அங்கு பாதுகாப்பு பணிக்காக ஆட்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அதற்கு வெளியே தான் போலீசார் நின்று கொண்டிருந்தார்கள். உள்ளே சென்ற போது ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை சொல்ல அங்கு யாரும் கிடையாது. மெய்க்காப்பாளர்கள் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். சிக்கீரம் வந்து விடுவார் என்றார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 4 நாட்கள் கழித்து முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் ஏதாவது செய்தி வராதா? என்று காத்திருந்தோம். அப்போதும் கூட முதல்வருக்கான சிகிச்சை குறித்து எதுவும் சொல்லவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். மறுநாள் ஆஸ்பத்திரிக்கு நாங்கள் வந்த போது மெய்காப்பாளர்கள் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார், சாப்பிடுகிறார், பேசுகிறார் என்று நாங்கள் கேட்பதற்கு முன்பாக தானாக வந்து கூறினார்கள். சொன்னதை திருப்பி சொல்லும் கிளிப்பிள்ளைபோல அவர்கள் பேசினர். ஆனால், அங்கு எந்த முன்னேற்றமும் இல்லை.
விசாரித்த போது டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் வருகிறார்கள், லண்டன் டாக்டர் வர போகிறார்கள் என்றார்கள். அவர்கள் மூலம் சிகிக்சை நடந்து கொண்டிருக்கிறது என்றார்கள். அங்கும் இங்குமாக தலைமை செயலாளர், ஆலோசகர், பாதுகாவலர் என்று வந்து போய் கொண்டிருந்தார்கள். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் அரவக்குறிச்சி, திருப்பரக்குன்றம் தேர்தலுக்கு போக போகிறோம் என்றார்கள். இதற்கு எங்கே இருந்து இதற்கான உத்தரவு வந்தது என்று சொல்லவில்லை. 15 நாட்கள் கழித்து தேர்தல் முடிந்து அமைச்சர்கள், நிர்வாகிகள் வந்தார்கள். டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வந்து விட்டது என்று செய்தி கேட்டு மருத்துவமனைக்கு சென்றோம். அப்போது ஜெயலலிதா சாதாரண வார்டில் இருந்தார். இரவு 8.30 மணியளவில் அப்போலோ மருத்துவமனை சேர்மன் டாக்டர் பிரதாப் ரெட்டி மற்றும் அவரது மகள் ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் எங்களிடம் ‘‘சாரி என்ன ெசய்வது, ஆண்டவனை பிரார்த்திப்போம்’’ என்றார்கள்.
அப்போது அங்கிருந்த ரூமில் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள், நான் மற்றும் கே.பி.முனுசாமி உள்பட 150 பேர் இருந்தோம். அப்போது ஐசியூவில் இருந்து வராண்டா வரை ஜேம்ஸ்பாண்ட் கோட் போட்டு சசிகலா வந்தார். அவரது பின்னால் உறவினர்கள் புடை சூழ வந்தனர். யாருக்கும் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் யாரும் அழவில்லை. அவர்களது முகத்தில் எந்தவிதமான சோகமும் இல்லை, கவலையும் தெரியவில்லை. மீண்டும் அதே குரூப் மறுபடியும் அதே பாணியில் திரும்பிச் சென்றது. அப்போது மெய்க்காப்பாளர்கள் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் வர போகிறார்கள். முதல்வருக்கு இன்னும் மூளை சாவு ஏற்படவில்லை. முதல்வர் உயிர்பித்து விடுவார் என்றனர். இதனால் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். அதன் பிறகு சிறிது நேரத்தில் முதல்வர் மரணம் அடைந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். 75 நாட்கள் அம்மாவை பார்க்கவில்லை. அவரை பார்த்து விட்டு வருகிறோம் என்ேறாம். கீழ்த்தளத்தில் போய் நில்லுங்கள். ஆம்புலன்சில் ஏற்றும் போது பாருங்கள் என்றனர். அம்மாவின் உடலில் எம்பாமிங் செய்ய 5 மணி நேரம் ஆகும். அதனால் கீழே போய் இருங்கள் என்றனர். நாங்கள் இங்கே தான் இருப்போம் என்றோம். பின்னர் லிப்டில் ஏற்றி கீழே கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றார்கள்.
நாங்கள் வீட்டுக்கு போய் குளித்து விட்டு, நள்ளிரவிலேயே ராஜாஜி ஹால் சென்றோம். ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடலை சுற்றி நின்றவர்களை பார்த்த போது அதிர்ச்சியடைந்தோம். 2012ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டதாக முதல்வரால் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் உடலை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்ததற்காக சசிகலா சாதாரண உறுப்பினராக தான் கட்சியில் இருந்து வந்தார். கட்சியில் எந்த பொறுப்புக்கும் வர மாட்டேன் என்று கூறியதால்தான் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஜெயலலிதா இறந்து 20 நாட்கள் ஆன நிலையில், அதாவது அவரது கல்லறையின் ஈரம் கூட காய்ந்திருக்காது. அதற்குள் எல்லோரையும் பேசவைத்து, “சசிகலா தான் பொது செயலாளராக தகுதி உள்ளது, உங்களால் தான் கட்சியை காப்பாற்ற முடியும்” என்று காய் நகர்த்தி பொது செயலாளர் பதவியை பிடிக்க சசிகலா நினைத்தார்.
அதன்படி பொதுக்குழுவை கூட்டி சசிகலா பொது செயலாளர் ஆக்கப்பட்டார். 1973ம் ஆண்டு பொது செயலாளர் தேர்தல் எப்படி நடத்த வேண்டும் என்று எம்ஜிஆர் வரன்முறைகளை அறிவித்தார். பொது செயலாளர் என்பவரை அடிமட்ட தொண்டன் தான் கொண்டுவர வேண்டும். ஆனால் அந்த வீதியை மீறி யாரும் பொதுச்செயலாளர் ஆக முடியாது. அந்த விதிமுறைகளை மீறி சசிகலா பொது செயலாளர் ஆகியுள்ளார். எங்களின் எல்லாருடைய உரிமையை கபளீகரம் செய்து பொது செயலாளர் ஆனதை எதிர்க்கிறோம். பழைய வரலாறு தெரிந்தவர்கள் இறந்து விட்டார்கள், சிலர் பிற கட்சிகளுக்கு சென்று விட்டார்கள் என்பதற்காக இது போன்று விதியை மீறி இருக்கிறார்கள். சசிகலா பொது செயலாளர், முதல்வர் பதவி ஏற்க தகுதி அற்றவர். ஏனென்றால் சசிகலா குடும்பத்தினர் மிடாஸ் மதுபான பங்குத்தாரராக இருந்து வருகிறார்கள்.
அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.16,000 கோடி வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர் பொது செயலாளராக தகுதி அற்றவர் ஆகிறார். உழைத்து சம்பாதித்த சொத்துக்கள், நகைகள் எனக்கு பிறகு மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று அன்றே முதல்வர் ஜெயலலிதா அன்றே பிரகடனம் செய்தார். அரவக்குறிச்சி தேர்தலின் போது கைரேகை பெற்றது போல், சொத்துக்களையும், நகைகளையும் கபளீகரம் செய்து விடக்கூடாது. செப்டம்பர் 22ம் தேதி போயஸ்கார்டனில் என்ன நடந்தது. எத்தனை பேர் அப்போது அங்கு இருந்தார்கள், சொந்தக்காரர்கள் யார், யார் ஜெயலலிதாவுடன் இருந்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டாமா?. அங்கு நடந்த சம்பவங்களை உடனடியாக விசாரிக்க வேண்டும். மேலும் வீட்டில் இருந்து அப்பலோ மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் நடந்ததையும் விசாரிக்க வேண்டும் என்றார்.