மாசற்ற மாணிக்கமே... மங்காத பிளாட்டினமே..!' - மக்களே சின்னம்மாவை பாராட்டலாமா?

மாசற்ற மாணிக்கமே... மங்காத பிளாட்டினமே..!' - மக்களே சின்னம்மாவை பாராட்டலாமா?


சசிகலா முதல்வராகப் பதவியேற்றதும், காலில்விழுந்தான்பட்டிக் கடைக்கோடித் தொண்டர்கள் 'மக்களின் துயர் துடைக்கத் தோன்றிய குலமகளே...' பாடல் ஒலிக்க சின்னம்மாவுக்கு வாழ்த்து மழை பொழியத் தொடங்கிவிட்டார்கள். தமிழகத்தில் அடுத்த வருடம் இந்நேரம் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும்? ஒரு 'சின்ன' கற்பனை பாஸ்...

"அம்மா'வின் ஆதி அந்தமே... எமையாளும் சக்தியே..!
சோழர்குலக் கொடியே... சோதனை தீர்க்க வந்த சின்னத்தாயே..!
மாசற்ற மாணிக்கமே... மங்காத பிளாட்டினமே..!"
'பளிச் பளிச்' பேனர்களில் 'சின்னம்மா' முகம் காட்ட அந்தத் தமிழன்னையே தலைகீழாக நின்று கவிதை பாடக் கோலாகலமாய்த் தொடங்குகிறது விழா...
'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை' - தமிழர்கள் போற்றும் தங்கநிகர்த் தலைவியின் தலைமையில் ஆரம்பமாகிறது அந்தச் சரித்திர நிகழ்வு.
'நான் இப்போ என்ன பண்ணிட்டேன்னு எனக்குப் பாராட்டுவிழா..?' எனப் பெருந்தன்மையோடு, ஜெயலலிதாவைப் போலவே விரலை வாயில் வைத்தபடி 'எந்தக் கையா இருக்கும்..?' எனக் குழப்பான பார்வையோடு மேதகு 'சின்னம்மா' மேடையில் அமர்ந்திருக்கிறார்.
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் சின்னம்மாவின் உண்மை விசுவாசிகளில் ஒருவர் சாதனைப் பத்திரம் வாசிக்க ஆரம்பிக்கிறார்.
"சின்ன இதயதெய்வம், சின்னப் புரட்சித் தலைவி, சின்னத் தங்கத்தாரகை, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், மாண்புமிகு 'சின்னம்மா' பதவியேற்று ஓராண்டு மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் மகத்தான பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. தெய்வத்தின் மகிமைகளை மனிதனான நான் வாசிக்கும் பேறு பெற்றிருக்கிறேன். (தேம்பித் தேம்பி அழுது மைக்கை நனைக்கும் அவரை ஒரு ர.ர தேற்றித் திரும்பவும் பேச வைக்கிறார்.)
நம் சின்னம்மா பதவியேற்ற நாள்முதலே, பாலாற்றங்கரை மதகு உடையும் அளவுக்குப் பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓட, தமிழகம் முழுவதும் உடைந்த நீர்நிலைகளைச் சீர்செய்யும் பணிகளுக்காக பல்லாயிரம் கோடிரூபாய் செலவில் சின்னம்மா தலைமையில் சீரிய திட்டம் தீட்டப்பட்டது.
சாமானியர்களின் ஆட்சி மலர்ந்த இந்தத் தருணத்தில் சாமானிய மக்கள் அனைவருக்கும் விலையில்லா 'சின்னம்மா' சோப்புடப்பா முதல் 'சின்னம்மா' வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம் வரை எல்லாவற்றையும் தொடங்கிவைத்து, சாம்பிளாக மூன்று அ.தி.மு.க தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் படிப்படியாக இன்னும் முப்பது ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்.
சின்னம்மாவுக்கு எதிராகக் கம்பு சுற்றுபவர்களைக் கண்காணிப்பதற்காக முக்குக்கு முக்கு தொடங்கப்பட்ட அ.தி.மு.க-வின் கிளைப் பிரிவான 'சின்னம்மா பேரவை' சார்பில் கலாய்ப்பவர்களின் ஸ்டேட்டஸ்களில் 'ஹாஹா' கமெண்ட் போட்டு நீர்த்துப் போகச் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சின்னம்மாவின் தம்பி முதல், ஒண்ணுவிட்ட தம்பி மகனின் சகலை மற்றும் அவர்களின் கடைசிப் பங்காளி வகையறா வரை அனைவருக்கும் அவரவர் தகுதிகளுக்கு மீறி மாவட்ட கவுன்சிலர் முதல் ஆணையத் தலைவர், அமைச்சர் வரை சண்டை சச்சரவில்லாமல் பிரித்துக் கொடுத்துக் கழகத்தையும், தமிழகத்தையும் கட்டிக்காக்கும் பொறுப்பான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சின்னம்மாவின் சாதனைகளைப் பார்த்து மக்கள் புளகாங்கிதமடைந்தும், எதிர்க்கட்சியினர் மிரண்டுபோயும் கிடக்கின்றனர். ஆகவே, சின்னம்மாவின் ஆணைக்கிணங்க, இனிமேல் தேர்தல்கள் நடத்தி மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல், சின்னம்மாவையே நிரந்தர முதல்வராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம். அந்தப் பணத்தை மிச்சப்படுத்தி, 'நீங்க அமெரிக்காவுக்கே போயிடுங்க சிவாஜி...' எனக் கலாய்த்த நெட்டிஸன்கள் அமெரிக்காவுக்குச் செல்வதற்காக கடலுக்கு நடுவே பாலம் அமைக்கலாம் எனவும் சின்னம்மா தலைமையிலான இந்த அரசு பரிந்துரை செய்தது.
சின்னம்மாவின் செம்மையான புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்குகள் எல்லாம் மாண்புமிகு சின்னம்மாவின் ஆணைக்கிணங்க மிஸ்டர் குமாரசாமிகளால் 'சிறப்பான முறையில்' முடித்து வைக்கப்பட்டதோடு, இனிமேல், சின்னம்மா மீது தொடுக்கப்படும் வழக்குகள் யாவும் 'சின்னம்மா சிறப்பு நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்படும் எனவும் அந்தத் தீர்ப்பினை வேறு எந்த நீதிமன்றங்களிலும் மேல்முறையீடு செய்ய முடியாது' எனவும் புதிய சட்டமுன்வடிவு ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மாண்புமிகு சின்னம்மா அவர்கள், தமிழர்களின் ஏகோபித்த ஆதரவோடு முதலமைச்சர் ஆனதைப் போலவே, பிரதமராக வேண்டும் எனவும் விரும்புவதால், மாண்புமிகு சின்னம்மாவுக்கு இந்தி தெரியாத காரணத்தாலும், அதுமட்டுமல்லாமல் மாண்புமிகு சின்னம்மாவுக்கு டெல்லியின் குளிர் ஒத்துக்கொள்ளாது என்கிற காரணத்தாலும், தமிழ்நாட்டைத் தனிநாடாக்கும் கோரிக்கையை குடியரசுத்தலைவருக்குக் கடிதம் மூலமாக அனுப்பியிருக்கிறார். #சின்னம்மா_for_PM!"
தொண்டை வறளக் கத்தியவர் மூச்சு வாங்கியபடியே, இன்னும் மிச்சமிருக்கும் சாதனைகளை மூத்த அமைச்சர் வணங்காமுடி பேசுவார் என அறிவிக்கிறார்.
தொண்டர்கள் வணங்காமுடியைத் தேட, அவரோ சின்னம்மா பொற்பாதங்களில் இருந்து ஆனந்தக் கண்ணீரோடு அடுத்த ரவுண்டுக்கு எழுந்து நிற்கிறார்.
( இந்தக் கட்டுரையில் எத்தனை 'சின்னம்மா' வந்துள்ளது என எண்ணிச் சரியாக கமெண்ட் செய்பவர்களுக்கு சின்னம்மாவைச் சந்தித்து ஆசிபெறும் வாய்ப்பு கிடைக்கும் என சிவபெருமான் கனவில் வந்து சொன்னதாக...)
- விக்கி

நன்றி
விகடன்