”ஒரு நாயகன் உருவாகிறார்” : ஓபிஎஸ் வீட்டில் குவியும் மக்கள் கூட்டம்
சென்னை, பிப்.08 (டி.என்.எஸ்) ஜல்லிக்கட்டு போராட்டத்தால் இந்தியாவே தமிழகத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் அத்தகைய நிலையை நேற்று இரவு தற்காலிக முதல்வரான ஓபிஎஸ் உருவாக்கியுள்ளார்.
ஜெயலலிதாவின் சமாதியில் தியானத்தில் ஈடுபட்ட அவர் பிறகு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியால், தற்போது தமிழகமே பரபரப்பில் உள்ளது.
இதற்கிடையில், பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சசிகலா, அவரது பொருளாளர் பதவியை பறிக்க, சில மூத்த நிர்வாகிகள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஓபிஎஸை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று ஓபிஎஸ் அளித்த பேட்டியால், அவருக்கு மக்களிடம் பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை யு.பி.எஸ் என்று கிண்டல் செய்த நெட்டிசன்கள் தற்போது, அவரை ஹீரோவாக பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். அவரது இந்த அதிரடியான நடவடிக்கையால், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், அவரது நடவடிக்கையை பாராட்டியும் சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்கள் அவரை ஹீரோவாகவே காட்டுகிறது. அதே சமயம், சசிகலாவக்கான எதிர்ப்பு குரல்கள் வலுத்துக்கொண்டே போகிறது.
மேலும், நேற்று இரவு முதல் சென்னை க்ரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கூடும் மக்கள், நீங்கள் (ஓபிஎஸ்) தான் அதிமுக-வுக்கு தலைமை தாங்க வேண்டும், மீண்டும் முதல்வராக வேண்டும்” என்று கோஷமிடுகிறார்கள்.
இது போதது, என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, ஒரு ஹீரோ உருவாகிறார், என்று ஓபிஎஸ் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இவர் மட்டுமல்ல, பல பிரபலங்களும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அவர்கள் சொல்வது போல, மக்கள் மனதில் தற்போது ஹீரோவாகவே உருவெடுத்துள்ளா முதல்வர் ஓபிஎஸ்.