சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தீபா ஆதரவாளர்கள் கைது - போலீசாருடன் வாக்குவாதம்

சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தீபா ஆதரவாளர்கள் கைது - போலீசாருடன் வாக்குவாதம்


சென்னை- சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தீபா ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள் மட்டும் சசிகலா தலைமையை ஆதரித்தனர். ஆனால் தொண்டர்கள் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆங்காங்கே ஒட்டப்பட்ட சசிகலா போஸ்டர்கள் அதிமுகவினரால் கிழிக்கப்பட்டது. போயஸ் இல்லம் மற்றும் ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்திலும் அதிமுக தொண்டர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதன் மூலம் சசிகலாவை கட்சியின் பெரும்பான்மையானோர் ஏற்கவில்லை என்பது தெளிவானது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்ய அவர் முன்மொழிந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் சசிகலா முதல்வராவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்சென்னை மாவட்ட தீபா பேரவை சார்பில் இன்று காலை கிண்டி கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடந்தது. சைதாப்பேட்டை நீதிமன்றம் முன் இன்று காலை ஏராளமான அதிமுகவினர் ஒன்று திரண்டனர். தீபா பேரவை நிர்வாகி ஆலந்தூர் கே.பி.கோபிநாத் தலைமையில் நடந்த இந்த முற்றுகைப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டக்காரர்கள் நீதிமன்ற சாலையில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று மனு அளிக்க முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அங்கிருந்த போலீசார் பேரணி சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேரிகார்டுஅமைத்து போலீசார் கூட்டத்தை தடுத்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். போராட்டத்தில் மயிலாப்பூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் நந்தனம் ஜி.ராமு, சதீஷ், சீனிவாசன், ஜெ.ஆர்.வெங்கடேசன், அண்ணா நகர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து தென்சென்னை மாவட்ட தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் வி.கே.சுகுமாறன் கூறியதாவது: அதிமுகவில் ஜெயலலிதாவுக்குப் பின் கட்சி பொதுச்செயலளாராகும் ஒரே தகுதி அவரது உண்மையான வாரிசு தீபாவுக்கு தான் உள்ளது.
அதிமுகவினருக்கே சசிகலாவை யார் என்று தெரியாது. அப்படி இருக்கும்போது மக்களால் எப்படி அவரை தெரிந்திருக்க முடியும். கட்சியில் ஆண்டாண்டு காலமாக உழைக்கும் அடிமட்ட தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் தலைமையில் நல்ல முறையில் இயங்கி கொண்டிருந்த அரசை வேண்டுமென்றே திட்டமிட்டு சசிகலா கலைத்துள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும். சசிகலா முதல்வராவதை உண்மையான அதிமுக தொண்டர், நிர்வாகி யாரும் விரும்ப மாட்டார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கவர்னரிடம் இதுகுறித்து முறையிடுவதற்காக மனு அளிக்க வந்தோம். ஆனால் போலீசார் எங்களை தடுத்து நிறுத்தி கைது செய்துவிட்டனர்’’ என்றார்.