முதல்வராகிறார் சசிகலா.. சட்டசபை அதிமுக கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா
மறைவையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன்
பின்னர் முதல் முறையாக கடந்த மாதம் 27-ந் தேதி கட்சியின் தலைமை
அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மீண்டும் ஒரே வாரத்தில்
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில்
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டசபைக் குழு
தலைவராக முன் மொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் சட்டசபைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தக்
கூட்டத்தில் சசிகலா முதல்வர் ஆவதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று
ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று
சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து,
அவர் முதல்வர் ஆவதற்கான வழிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அரசியல்
வட்டாரங்களில் கூறியது போன்று பிப்ரவரி 9ம் தேதி தமிழக முதல்வராக சசிகலா
பதவியேற்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக,
போயஸ்கார்டனில் 2 மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவுடன் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையில் ஓபிஎஸ், அமைச்சர்கள், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி,
வேலுமணி, ஜெயக்குமார் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த நிலையில்,
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா
சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
