எம்ஜிஆர்.,100 : முதல்வர் துவக்கி வைக்கிறார்

எம்ஜிஆர்.,100 : முதல்வர் துவக்கி வைக்கிறார்


மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், இதயக்கனி, புரட்சித் தலைவர், கொடைவள்ளல் என்றெல்லாம் அவரது ரசிகர்களால் வாயார புகழப்பட்டவர் மறைந்த முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆர். எம்ஜிஆர்-ன் 100வது பிறந்தநாள் நாளை(ஜன., 17-ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதிமுக., கட்சியிலும் சரி, திரையுலகத்திலும் சரி எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட உள்ளனர். குறிப்பாக தமிழ் சினிமா சார்பில் எம்ஜிஆரின் பிறந்தநாளை ஆண்டு முழுக்க கொண்டாட உள்ளனர். அதன் ஒருபகுதியாக நாளை சென்னை அபிராமி தியேட்டரில் எம்ஜிஆர்., நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், நடிகர் சங்கம், கில்டு, பெப்சி உள்ளிட்ட அனைத்தும் சங்கங்களும் இணைந்து இந்த விழாவை நடத்துகிறார்கள். இந்த விழாவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். எம்ஜிஆர்., திறந்து வைத்த தியேட்டர் அபிராமி என்பதால் இங்கு விழாவை நடத்துகிறார்கள். தொடர்ந்து எம்ஜிஆர்., நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து திரையுலகினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சில சுவாரசிய தகவல். "சக நடிகர்கள் மீது அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆ"  வீரப்பன் தயாரித்து சத்யா மூவிஸ் பேனரில் வெளிவந்த திரைப்படம் கண்ணன் என் காதலன்". படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப்போல் நடிப்பார். ஒருநாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர் புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும் போது இயக்குநரிடம் மதியம் என்ன காட்சி எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டார். சக்கர நாற்காலியில் இருந்து மாடிப்படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி என்ற இயக்குநரிடம் இருந்து பதில் வந்ததும் காரில் ஏறப்போன எம் ஜி ஆர் இறங்கிவிட்டார்.
அது ரிஸ்க்கான காட்சி நானும் உடன் இருக்கிறேன் அந்தப்பெண் (ஜெயலலிதா) விழுந்துவிட்டால் என்ன ஆவது? என்று கூறி அவரும் அங்கேயே இருந்துவிட்டார். படியில் உருள்வது டூப் தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும் சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார். எனவே முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்திற்கு மேல் நகர முடியாதபடி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர். ஒத்திகையின் போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர்., தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து அதற்கு மேல் நாற்காலி உருண்டு விடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒருமுறைக்கு பல முறை உறுதி செய்த பின்னர் தான் ஜெயலலிதா நடித்த அந்த காட்சி படமாக்கப்பட்டது. அந்த அளவு உடன் நடிப்பவர்கள் மற்றும் ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
கட்சி கொடியை படத்தில் தைரியமாக காண்பித்தவர் எம்ஜிஆர்.,
தி.மு.க.வில் இருந்த போது அக்கட்சியின் கொடியை திரையில் காண்பிக்க செய்து பெருமை சேர்த்தவர். அவரே தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்து வெளியான "நாடோடி மன்னன்" திரைப்படத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அக்கட்சியின் கொடியை ஏந்தியபடி திரும்புவது போல அமைத்து அதை தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் லோகோ வாக அமைத்திருந்தார். அவரது படங்களில் அறிஞர் அண்ணாதுரையை பற்றியும் கட்சியின் கொள்கைகள் பற்றிய வசனங்களும் பாடல்களும் இடம் பிடித்தன.