ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது ஒருமுறை கூட பார்க்க அனுமதிக்கவில்லை – ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது ஒருமுறை கூட பார்க்க அனுமதிக்கவில்லை – ஓ.பன்னீர்செல்வம்

சென்னையில் திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
“28 ஆண்டு காலம் கழக பொதுச்செயலாளராக அம்மா பல்வேறு சோதனைகளை சவால்களை வென்று கட்சியையும், ஆட்சியையும் நடத்தினார். எம்.ஜி.ஆர். எந்த நோக்கத்துக்காக கட்சியை வளர்த்து ஆளாக்கினாரோ அதற்கு சிறிதும் மாசுபடாமல் கட்சியை நடத்தினார்.
16 லட்சம் உறுப்பினர்கள் இருந்த அ.தி.மு.க வை 1½ கோடி தொண்டர்களை கொண்ட எக்கு கோட்டையாக நமது கையில் தந்துள்ளார்.
மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்தி வந்தவர் புரட்சித்தலைவி அம்மா. 2016-ம் ஆண்டு மீண்டும் நமக்கு ஆட்சியை தந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக நம்மைவிட்டு பிரிந்து விட்டார். அம்மாவின் நோக்கம் குறிக்கோள் கோட்பாடின் அடிப்படையில் ஆட்சியை நடத்தினோம்.
ஆனாலும்ஒரு குடும்ப ஆட்சி இடையில் புகுந்து விட்டது. ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் கட்சியில் இருக்க கூடாது என்பதற்காக தான் 2011-ம் ஆண்டு சசிகலா உள்பட அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால் அந்த குடும்பம் மீண்டும் உள்ளே வந்து விட்டது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அம்மா சிகிச்சையில் இருந்த போது நாங்கள் 75 நாட்களும் சென்று வந்தோம். ஆனால் ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க அனுமதிக்கவில்லை. அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று சொன்னதை கூட அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் மரண செய்தி தான் வந்தது.
அதன் பிறகு என்னை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தார்கள். அப்போதும் நான் வேண்டாம் என்று தான் சொன்னேன். ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் சுதந்திரமாக செயல்பட முடியாது என்று கருதிவேண்டாம் என்றேன். அனைவரும் வற்புறுத்தியதால் முதல்-அமைச்சராக நான் ஒப்புக்கொண்டேன். ஆட்சி நல்லா தான் போய்க்கொண்டிருந்தது. வர்தாபுயல், ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தது. அதில் நம்மால் முயன்றதை மக்களுக்காக செய்து கொடுத்தோம். அது சசிகலா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. அதில் இருந்து தான் பிரச்சினை ஆரம்பமானது.
அம்மாவின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டு வருகிற 8-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசின் உத்தரவு அமையும்.
அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கு விளக்கம் அளிக்காமல் எந்த விதத்திலும் தப்ப முடியாது. விளக்கம் அளிக்காவிட்டால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். 8-ந் தேதி நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதத்தை பார்த்து டெல்லி அதை ஆராய்ந்து மாலை 5 மணிக்கு நீதி விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது என்ற செய்தி அமைய வேண்டும். அதற்கேற்ப திரளாக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். ஒரு குடும்ப ஆட்சியை நீக்கி அம்மா ஆட்சி மலர தொடர்ந்து பாடுபடுவோம்.