கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏவை இழுக்க ஓபிஎஸ் மகன் பேசிய பேரம் - ஒரு மாதத்திற்கு பின் வாட்ஸ் அப்பில் பரவுகிறது

கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏவை இழுக்க ஓபிஎஸ் மகன் பேசிய பேரம் - ஒரு மாதத்திற்கு பின் வாட்ஸ் அப்பில் பரவுகிறது


சென்னை- அதிமுக எம்எல்ஏ ஒருவரிடம் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் செல்போனில் ஆதரவு கேட்ட உரையாடல் தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர், அதிமுக 2 ஆக பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுகவினர் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பிறகு, அவரது அரசு மீது கடந்த 16ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. முன்னதாக, அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக 15 நாட்களாக கூவத்தூரில் உள்ள பீச் ரிசாட்டில் அடைத்து வைத்திருந்தனர்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் அங்கிருந்த அதிமுக எம்எல்ஏவுடன் போனில் தொடர்பு ெகாண்டு தனது தந்தைக்கு ஆதரவு தெரிவிக்க கோரியுள்ளார். அந்த உரையாடல் தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், அவர் எந்த தொகுதி எம்எல்ஏவிடம் பேசுகிறார் என தெரியவில்லை. உரையாடல் வருமாறு:
ஓ.பி.ரவி: அண்ணே வணக்கம்...
எம்எல்ஏ: சொல்லுங்க, யார் பேசுறது...
ரவி : நான் ஓ.பி.ரவி பேசுறேன். எப்படின்ன இருக்கீங்க...
எம்எல்ஏ : நல்லா இருக்கேன் தம்பி...
ரவி: ரொம்ப சந்தோஷம். போனை அட்டன்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி. அண்ணன், ஒன்னுமில்ல... உங்களுக்கு தெரியாதது இல்ல. இப்ப நடக்கிற சூழல் உங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். என்னோட விருப்பம் என்னன்னா... எல்லாரோட விருப்பம். மக்களோட விருப்பம் என்னென்னு நல்லா தெரியும். அப்பாவுக்கு ஆதரவு தெரிவிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும். நீங்க வந்து அப்பாவுக்கு அவசியம் ஆதரவு தெரிவிச்சே ஆகணும்.
எம்எல்ஏ : தம்பி...(சிரிப்பு) உங்களுக்கே தெரியும். நம்ம எந்த இடத்துல இருந்தோம், இப்போ அப்பா வெளியில போயிட்டாங்க. நம்ம கட்சியே இரண்டாயிட்டது...
ரவி: அண்ணே, அண்ணே நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த எம்எல்ஏங்க போய் கேட்டாலே தெரியும். அங்க மக்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறாங்கன்னு... நான் சொல்ல வேண்டியதே இல்ல. இருந்தாலும் நான் அண்ணன நம்பி, ஒரு நம்பிக்கையில திருப்பி கூப்பிட்டுருக்கிறேன். என்ன சொல்றதுன்னு தெரில. நீங்க அவசியம் அப்பாவுக்கு ஆதரவு தெரிவிக்கனும். உங்களுக்கு என்ன செய்யனுமோ... அத போன்ல பேசக்கூடாது, உங்களுக்கும் நல்லாவே தெரியும். அத எதிர்பார்க்கிற ஆளு நீங்க கிடையாது. இருந்தாலும், என்னுடைய தரப்பில் இருந்து சொல்ற கடமையில் இருக்கேன். நம்ம மக்களுக்கு செய்ய வேண்டிய நல்ல காரியம் இது. தயவுசெய்து அப்பாவுக்கு நீங்க ஆதரவு தெரிவிக்கனும்.
எம்எல்ஏ : போன்ல வேண்டாம்... இல்ல தம்பி... நம்ம வந்துட்டு... நீங்க சொல்லுங்க தம்பி... ஆனா, போன்ல வேண்டாம் தம்பி.
ரவி : அண்ணே... நேரா சந்தித்து கண்டிப்பா பேசுவோம்..
இவ்வாறு உரையாடல் முடிந்து இணைப்பு துண்டிக்கப்படுகிறது.