பாகிஸ்தானில் இருந்து உஸ்மா தப்பியது எப்படி?
பாகிஸ்தானில் இருந்து உஸ்மா தப்பியது எப்படி?
புதுடில்லி: பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணத்திற்கு ஆளான இந்திய பெண் உஸ்மா அகமது, அங்கிருந்து தப்பி வந்தது எப்படி என்பது குறித்த ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. காதலித்தது தான் தவறு உஸ்மா அகமது மலேசியாவிற்கு சென்ற போது, பாகிஸ்தான் ஆசாமி தாகிர் அலியை சந்தித்தார். சில நாட்களிலேயே இருவரிடையே காதல் மலர்ந்தது. கடந்த மே, 1ம் தேதி தாகிர் அலியுடன் உஸ்மா பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு சென்ற பிறகு தான், தாகிர் அலிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. நான்கு குழந்தைகள் உள்ளன என தெரிய வந்தது. அதன் பிறகு துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டதால் தாகிர் அலியை உஸ்மா மணந்தார். அவருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் உஸ்மா தஞ்சம் அடைந்தார். இது எளிதில் நடக்கவில்லை. தூதரகத்தில் பணியாற்றும் இருவர் உஸ்மாவின் சகோதரன் மற்றும் அவரது மனைவியாக நடித்தனர். பண ஆசை உள்ள தாகிர் அலியிடம், ' என் சகோதரிடம் பணம் உள்ளது.
அதை வாங்கி வர இந்திய தூதரகம் செல்ல வேண்டும்' என, உஸ்மா கூறியுள்ளார். எனவே, அவரை இந்திய தூதரகத்திற்கு தாகிர் அலி அழைத்து சென்றார். தூதரக அலுவலகத்திற்குள் உஸ்மா சென்றார். வெளியே தாகிர் அலி காத்து இருந்தார்.
துரிதமாக செயல்பட்ட சுஷ்மா தூதரக அலுவலகத்தில் துணை ஹைகமிஷனர் ஜெ.பி.சிங்கை சந்தித்து உஸ்மா முறையிட்டார். அவர் உடனே டில்லியில் இருந்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை போனில் தொடர்பு கொண்டார். அவர் ஒரு ஆலோசனை கூட்டத்தில் இருந்ததால் போனை எடுக்கவில்லை. எனவே, அன்று இரவு தூதரக அலுவலகத்தில் உஸ்மா தங்க ஜெ.பி.சிங் அனுமதித்தார்.
அடுத்த நாள் காலை சுஷ்மா போனில் அழைக்க, அவரிடம் விவரம் எடுத்து கூறப்பட்டது.அடுத்த வினாடி சுஷ்மா, தஞ்சம் புகுந்த உஸ்மா உண்மையில் இந்திய குடியுரிமை பெற்றவரா என ஆய்வு செய்ய கூறினார். அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள அவரது சகோதரரின் முகவரியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதன் மூலம், உஸ்மா இந்திய பெண் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சுஷ்மா, ' இந்திய பெண்ணின் பிரச்னையை தீர்க்க வேணடும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாலும் சரி. அதுவரை அவர் தூதரக அலுவலகத்தில் தங்கலாம்' என, தெரிவித்தார். துப்பாக்கிகளுடன் வலம் வந்த தாகிர் இதன் பிறகு இந்திய தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பேசினர்.
அவர்களும் நல்லமுறையில் பதில் கூறினர். ஆனால், இந்த நேரத்தில் இரண்டு விஷயங்கள் சிக்கலை ஏற்படுத்தின. குல்பூஷண் ஜாதவிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. உஸ்மாவை கட்டாய திருமணம் செய்த தாகிர் அலி, தன் அடியாட்களுடன் துப்பாக்கிகளை சுமந்த படி, இந்திய தூதரக அலுவலகத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான்.
பாகிஸ்தான் சட்டப்படி உஸ்மாவை மீட்கவும் முயற்சி செய்ய இருந்தான். அப்போது மிகவும் மன உளச்சலுக்கு ஆளான உஸ்மா, 'மீண்டும் அவனிடம் செல்ல முடியாது. எனக்கு விஷம் கொடுத்து விடுங்கள்' என, இந்திய தூதரக அதிகாரிகளிடம் கதறினார். மே, 12ம் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு இப்பிரச்னையை இந்திய தூதரக அதிகாரிகள் முறையிட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். உஸ்மா இந்தியாவிற்கு திரும்ப நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதை கேள்விபட்ட உடன், 'உஸ்மா உடனே இந்தியாவிற்கு வர வேண்டும்' என, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா கூறினார். வாகா எல்லையில்...
ஆனால், அது உடனடியாக நடக்கவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவு பிற்பகல், 2:30 மணிக்கு தான் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவர் அட்டாரி - வாகா வழியாக தான் இந்தியாவுக்குள் நுழைய முடியும். இஸ்லாமாபாத்தில் இருந்து அங்கு செல்வதற்குள் அந்த கேட் மூடப்பட்டு விடும் என்பது தெரிந்தது.
எனவே, அன்று இரவு இந்திய தூதரக அலுவலகத்திலேயே உஸ்மாவை தங்க வைத்தனர்.அடுத்த அதிகாலை, 2:30 மணிக்கு துணை ைஹகமிஷனர் ஜெ.பி.சிங்குடன் உஸ்மா வாகா எல்லைக்கு புறப்பட்டார். அங்கு காலை, 9:30 மணிக்கு தான் கேட் திறக்கப்படும். ஆனால், அவர்கள் காலை, 7:30 மணிக்கே அங்கு சென்று விட்டனர். அப்போது ஜெ.பி.சிங்கை தொடர்பு கொண்ட அமைச்சர் சுஷ்மா,'' வாகா எல்லை கேட் திறக்கும் வரை உஸ்மாவை தனியாக விடாதீர்கள்.
புது பிரச்னை ஏதும் ஏற்பட வேண்டாம். காரில் இருந்து இறங்க வேண்டாம்,'' என ஜெ.பி.சிங்கிடம் உத்தரவிட்டார். அதன்படி கேட் திறக்கும் வரை காரில் காத்திருந்த உஸ்மா, கேட் திறக்கப்பட்ட உடன் இந்திய எல்லைக்குள் நுழைந்து மண்ணை தொட்டு முத்தமிட்டது உலக செய்தியானது.