கிரிவலப்பாதை விரிவாக்கம், செக் வைத்தது பசுமைத் தீர்ப்பாயம்!

கிரிவலப்பாதை விரிவாக்கம், செக் வைத்தது பசுமைத் தீர்ப்பாயம்!


'கிரிவலப்பாதை விரிவாக்கம், செக் வைத்தது பசுமைத் தீர்ப்பாயம்!

திருவண்ணாமலையில், கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைப் பசுமைத் தீர்ப்பாயம் நீக்கி யுள்ளது. அதேநேரத்தில், ஒரு மரத்தைக்கூட வெட்டக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வது வழக்கம். முக்கியமாக, பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதுபோன்ற நாள்களில், கூட்டநெரிசல் ஏற்படாமல் தவிர்க்க, கிரிவலப்பாதையை அகலப்படுத்தி, விரிவாக்கம்செய்யும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.

கிரிவலப்பாதை விரிவாக்கப் பணியின்போது, அதிக அளவிலான மரங்கள் வெட்டப்படுவதாகச் செய்திகள் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து இதுகுறித்து விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டது. அதன்பின்னர், ஒரு சில நிபந்தனைகளுடன் பணிகள் மீதான தடை விலக்கப்பட்டது.

இதனிடையே, அரசு சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகளுக்காக 65-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைப் பசுமைத் தீர்ப்பாயம் இன்று நீக்கிவிட்டது. 'ஒரு மரத்தைக்கூட வெட்டாமல், விரிவாக்கம் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, 'தீர்த்தங்கள், பாதங்கள் உள்ளிட்ட வழிபாட்டு இடங்கள் பாதிக்கப்படக்கூடாது' என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.