ஆதலினால் காதல் செய்வீர்..!
பிப்ரவரி 14... உலக இளைஞர்கள் கொண்டாடி மகிழ்கின்ற ஒரு திருநாள். காதலாகி... கசிந்து உருகி... கண்களில் நம்பிக்கையோடு... வழிந்தோடும் அன்புப் பெருக்கோடு... இதய ரோஜாவுக்காக... ஒற்றை ரோஜாவை உயிராய் ஏந்தித் திரிகின்ற தருணம்...
விழியில் விழுந்து... இதயம் நுழைந்து... உயிரில் கலந்த உறவாய்... காதலை கவிஞர்கள் சித்தரிக்கிறார்கள்.
காதல் என்ற மூன்றெழுத்து நம் உயிரிலும் உணர்விலும் ஏற்படுத்துகின்ற அதிர்வைக் கடக்காது மனித இனத்தின் வாழ்வியல் ஒருபோதும் முற்றுப் பெறுவதற்கில்லை...
ஏழை-பணக்காரன், ஆண்டான்-அடிமை, உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற பிரிவினைக்குள் உண்மையான காதல் ஒருபோதும் சிக்கிக் கொள்வதில்லை.
சமயங்களும், மதங்களும், இனங்களும், சாதிகளும் கற்பிக்கின்ற ஏற்றத்தாழ்வை நொடிப்பொழுதில் வெட்டிச் சாய்க்கின்ற அசாதாரண ஆற்றல் காதலுக்கே உண்டு.
'கண்ணின் கடைப்பார்வை கன்னியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்..' என்று காதலின் ஆற்றலை பாவேந்தன் கவிதையாக வடிப்பது உண்மைக்கு மாறானதா என்ன..?
'காதல் போயிற் காதல் போயிற் சாதல்... சாதல்... சாதல்...' என்று வெடித்துக் கிளம்பிய முண்டாசுக் கவிஞனின் வரிகள்... முட்டுச் சந்துக்குள் முக்காடிட்டு நின்றுவிடுமா என்ன..?
'இம் என்றால் உள்ளதடி சொர்க்கம்... நீ இல்லையென்றால் இடுகாடு பக்கம்...' என்று காதலுக்கு தேசிய கீதம் பாடிய கள்ளிக்காட்டு கவிஞன், பொய்த்தா போய்விடுவான்..?
காதலில் தோற்றுப்போன நம் அப்பாக்கள் கால தலைமுறை தாடி வளர்த்தது... அதன் வழியே வேதனையால் வெம்பியது... முடிவாக... தன்னை மாய்த்துக் கொண்டு முடிவை எய்தியது... காரணம் அன்று இதயத்தின்
ஆழத்தில் வெடித்துக் கிளம்பிய உணர்வூற்று அஃது...
இன்றைய தலைமுறையின் காதலெல்லாம்... காமத்தில் கசிந்துருகி... பொய்மைகளில் வழிந்தோடுவதால்தான்... ஆஷா இல்லாவிட்டால் அனிதா... அவளும் இல்லாவிட்டால் வினிதா... என்று புத்தியில் விழுந்து
இதயத்தை எங்கோ தொலைத்துவிட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது...
இந்த நிலையில் இவர்கள் கொண்டாடும் காதலர் தினத்தில் மட்டும் என்ன உண்மை இருக்க முடியும்..?
ஓராண்டில் இந்திய தேசத்தின் நீதிமன்றப் படிக்கட்டுகளில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் விவாகரத்து வழக்குகள் அறம் தவறி... நெறி தவறி... திருமண பந்தமே நெறிபட்டு மிதிபட்டுக் கொண்டிருக்கிறதாம். அவற்றுள்
பெரும்பாலானவை காதல் திருமணங்கள் எனும்போது, கொண்டாடப்படும் காதலர் தினம் சொல்கின்ற சேதிதான் என்ன..?
காதல் என்ற உன்னதத்தைக் காட்டிலும் காமம் என்ற உணர்வை முன்னிறுத்திய இன்றைய தலைமுறை, தனது பொருளற்ற பயணத்தின் நிறைவிடமாக குடும்ப நீதிமன்றங்களைத் தேர்ந்தெடுப்பது சகித்துக் கொள்ளக்கூடியதுதானா..?
மோட்டார் வாகனத்தில் முகத்தை மறைத்து முக்காடிட்டுக் கொண்டு, அப்போதைய காதலனோடு கணப்பொழுதில் கடந்து மறைவதல்ல காதல்... நாளுக்கொரு காதலி... வேளைக்கொரு பெண் என்று வேடிக்கை காட்டுகின்ற தீராத விளையாட்டுப் பிள்ளைகளின் லீலைகளுக்கு உட்பட்டதல்ல காதல்...
காலமெல்லாம் வாழ்க்கை வானத்தில் தொடர்ந்து பயணம் செய்கின்ற அப்பழுக்கற்ற வாகனமாய் காதலைக் கொண்டாடுகின்ற தலைமுறைக்காகவே 'வாலண்டைன்களால்' இந்த தினம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆணவத்தாலும் அதிகாரத்தாலும் காதலர் பலர் கொலை செய்யப்பட்டிருந்தாலும், காலங்கடந்தும் அவர்கள் வரலாற்றில் வாழ்ந்து கொண்டுதானிருப்பர்... ஏனென்றால் இங்கு கொலைக்கு ஆளானவர்கள் காதலர்கள்தானே தவிர... ஒருபோதும் காதல் அல்ல...
காதல் என்றாலே வெறுப்பை உமிழும் மனநிலையிலிருந்து சமூகம் மாறித்தான் ஆக வேண்டும்... இல்லாவிடில் உங்களின் அழுகிய புத்தியால் வரலாற்றுப் பக்கங்கள் நாறித்தான் போகும்...
உள்ளத்து வயப்படும் உண்மைக் காதலை ஆதரியுங்கள்... உடலால் வயப்படும் பொய்மைக் காதலை நிராகரியுங்கள்...
எல்லாவற்றையும் கடந்து காதல் தலைமுறை தலைமுறையாக வாழட்டும்...
ஆதலால் காதல் செய்வீர்..!