பலாத்காரம் செய்ய முயன்றபோது அலறி கூச்சலிட்டதால் சிறுமியை கொன்று எரித்த இன்ஜினியர் கைது

பலாத்காரம் செய்ய முயன்றபோது அலறி கூச்சலிட்டதால் சிறுமியை கொன்று எரித்த இன்ஜினியர் கைது


சென்னை: போரூர் அருகே கடந்த 5ம் தேதி மாயமான பள்ளி சிறுமி, கொலை செய்யப்பட்டு, முட்புதரில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலாத்காரம் செய்ய முயன்றபோது, அலறி கூச்சலிட்டதால் சிறுமியை கொன்றதாக சாப்ட்வேர் இன்ஜினியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பாபு (35). போரூர், மதனந்தபுரம் 10வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். பெருங்களத்தூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி. மதனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹாசினி (6) என்ற மகளும், தேஜஸ் (4) என்ற மகனும் உள்ளனர். ஹாசினி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பும், தேஜஸ் யுகேஜியும் படித்து வந்தனர்.
கடந்த 5ம் தேதி மாலை வீட்டிற்கு வெளியே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். பாபுவும், அவரது மனைவியும் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, விளையாடிக் கொண்டிருந்த ஹாசினியை காணவில்லை. உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாங்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அடுக்கமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி கடைசியாக அவர்கள் குடியிருந்த அபார்ட்மென்ட்டுக்குள் செல்லும் காட்சி பதிவாகி இருப்பது தெரியவந்தது. சிறுமியை யாரும் அழைத்து செல்வது போல காட்சிகள் எதுவும் பதிவாக வில்லை. இதையடுத்து அருகில் இருந்த கிணறு, கால்வாய் உள்ளிட்ட இடங்களிலும் தேடினர். மேலும் பாபுவுக்கு விரோதிகள் யாரும் உள்ளனரா? அவர்களில் யாராவது சிறுமியை கடத்தினார்களா? அல்லது வழிதவறி வேறு எங்காவது சென்று விட்டாளா? எனும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆராய்ந்தபோது, இரவு 9 மணி அளவில் அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் (23) என்பவர் டிராவல் பேக் ஒன்றை வீட்டிலிருந்து எடுத்துச்செல்வதும், பின்னர் 10 மணி அளவில் பேக் இல்லாமல் வீட்டிற்கு திரும்புவதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் நடத்திய கிடுக்கிப்படி விசாரணையில், சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தஷ்வந்த் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: நான், மயிலாப்பூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 5ம் தேதி மாலை எனது பெற்றோர் ஒரு திருமணத்திற்காக வெளியே சென்றுவிட்டனர். நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது, சிறுமி ஹாசினி விளையாடிவிட்டு தனியாக வீட்டுக்கு சென்றாள். அவளை நைசாக பேசி வீட்டிற்குள் அழைத்து சென்று, பலாத்காரம் செய்ய முயன்றேன்.
அப்போது, சிறுமி அலறி கூச்சலிட்டாள். இதனால் நான் மாட்டிக்கொண்டு விடுவேனோ என்று பயந்து பெட்ஷீட்டால் சிறுமியின் வாயை பொத்தி கழுத்தை நெறித்து கொலை செய்தேன். இதையடுத்து என்ன செய்வது என நீண்ட நேரம் யோசித்தேன். பின்னர், வீட்டில் இருந்த டிராவல் பேக்கில் சிறுமியின் சடலத்தை வைத்து எடுத்துக்கொண்டு மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றேன்.
அனகாபுத்தூர் மேம்பாலம் அருகே உள்ள புதரில் பேக்கை வைத்துவிட்டு, அருகில் உள்ள பங்க்கில் பெட்ரோல் வாங்கி வந்து பேக்குடன் சேர்த்து சிறுமியின் சடலத்தை எரித்து விட்டு, வீட்டுக்கு வந்துவிட்டேன். ஆனால் சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் என்னை கண்டு பிடித்துவிட்டனர்.
இவ்வாறு தஷ்வந்த் அளித்த வாக்குமூலமாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மாங்காடு போலீசார் தஷ்வந்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கொலை செய்தது எப்படி என்று விசாரிக்க கொலையாளியை சம்பவம் நடந்த வீட்டுக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சரமாரியாக அவனை அடித்து உதைத்து தாக்கினர். போலீசார் தலையிட்டு பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்களிடமிருந்து மீட்டு அவனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.