மூட்டுவலிக்கு மருந்தாகும் எலுமிச்சைப்புல்

மூட்டுவலிக்கு மருந்தாகும் எலுமிச்சைப்புல்

அன்றாடம் நமக்கு அருகிலே, எளிதிலே, வீட்டிலும், சாலையோரங்களில் கிடைக்க கூடிய மூலிகை பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் எலுமிச்சைப்புல் எனப்படும் கற்பூரப்புல்லின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வாசனை மிகுந்த எலுமிச்சைப்புல், நெஞ்சக சளியை அகற்றி, தொண்டை கட்டு அகற்றுவது, காய்ச்சல், நுரையீரல் சம்பந்தமான நோய்களை தடுக்கிறது. மேலும் மூட்டு வலி, தசை பிடிப்பு, மூட்டு ஜவ்வு தேய்வால் வரும் எரிச்சல், கெட்ட கொழுப்புகளை அகற்றி ரத்தத்தை சுத்திகரிப்பது, புற்றநோய் வராமல் தடுக்க அற்புதமான உள்மருந்தாக இருக்கிறது. வைட்டமின் சி சத்து, பாஸ்பரஸ், மெக்னீஷியம், இரும்பு போன்ற வேதிப்பொருட்களை உள்ளடக்கியுள்ள இந்த கற்பூர புல்லினை, உள் மற்றும் வெளிமருந்தாக பயன்படுத்தலாம். புல்லினை கசக்கும் போது நறுமணத்தையும், உட்கொள்ளும்போது புளிப்பு தன்மையும் தருவதால், தேநீராக உட்கொள்ளும்போது, வயிற்றில் உள்ள நுண்கிருமிகளை வெளியேற்றுகிறது.

எலுமிச்சை புல்லினை பயன்படுத்தி, சளி, காய்ச்சல், இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இடித்த எலுமிச்சை புல்- 1 ஸ்பூன், சுக்குப்பொடி-1/4 ஸ்பூன், தேன். ஒரு ஸ்பூன் இடித்த எலுமிச்சை புல்லுடன், 1/4 ஸ்பூன் சுக்கு பொடி சேர்த்து, ஒரு கப் நீரில் நன்கு கொதிக்க விடவும். பின்னர் அதனை வடிகட்டி தேன் சேர்த்து தொடர்ந்து 3மற்றும் 4 நாட்கள் அருந்தினால் காய்ச்சல், சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ரத்தத்தில் உள்ள கொளுப்பை நீக்கும், உடல் எடையை குறைக்க செய்யும் மருந்து ஒன்றை தயார் செய்யலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை புல்-1 ஸ்பூன் (இடித்தது), கருஞ்சீரகம்-1/2 ஸ்பூன், தேன். இடித்த புல், கருஞ்சீரகம் சேர்த்து ஒரு கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். பின்னர் அதனுடன் சேர்த்து காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இந்த தேநீரானது உடலில் சேருகின்ற கெட்ட கொழுப்புகள், ரத்த நாளங்களில் மெழுகு போல் படிந்து மாரடைப்பு ஏற்படுத்தும் கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.

மேலும் ரத்தத்தில் கலந்து இருக்கும் சர்க்கரை அளவையும் மட்டுப்படுத்துகிறது. வாயு தொல்லையை சரிசெய்து, பசியை தூண்டுவதுடன், மாதவிடாயை சீர்செய்கிறது. காளான் தொற்று, அரிப்பு, தோல் நோய்க்கு சிறந்த மேல்பூச்சு மருந்தை தயார் செய்யலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை புல் (நீர் விடாமல் நசுக்கியது)- 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய். எலுமிச்சை புல்லுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்த்து வடிகட்டிக்கொள்ளவும். இதனை கை, கால் உடல் தசைகளில் வலிஏற்படும்போதோ, காளானால் தோலில் தொற்று ஏற்படும்போதோ, சேற்று புண், விரல் இடுக்குகளில் தோன்றும் அரிப்பு உள்ளிட்டவைகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இது அரிப்பு தரும் தோல் நோய்களுக்கு அருமையான மருந்தாகவும், தசை பிடிப்புகளுக்கு சிறந்த மேல் பூச்சு மருந்தாகவும் இருக்கிறது.
70% சத்து நிறைந்த இந்த கற்பூர புல், வயிறு விட்டு விட்டு வலிப்பது, வயிறு கடுப்பு, மேல் வீக்கம் போன்றவற்றுக்கு மருந்தாக விளங்குகிறது.