தி.மு.கவுக்கு சொத்து சேர்த்த சசிகலா! - தீபாவின் ‘ஆர்.கே.நகர் வியூகம்’
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்திற்குத் தயாராகி வருகின்றன தமிழக அரசியல் கட்சிகள். 'தொகுதி முழுவதும் பரவிக் கிடக்கும் பெண்கள் வாக்குகளை குறிவைத்து உரை தயாரித்து வருகிறார் தீபா. 'சசிகலா குடும்பத்தை அழிக்க தன்னால் மட்டுமே முடியும்' என்பதை பிரசாரத்தின் மையக் கருத்தாக வைத்திருக்கிறார்' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக, சசிகலா தலைமையில் ஆட்சிமன்றக் குழுவை அமைத்திருக்கிறார் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். தி.மு.க சார்பில் போட்டியிட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். தே.மு.தி.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் மதிவாணன். அரசியல் கட்சிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஜெயலலிதா சமாதியில் தியானம், ஆதரவாளர்களுடன் ஆலோசனை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு அளிக்கப்பட இருக்கும் வாக்குறுதிகள் என பரபரப்பாக இயங்கி வருகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பெரிதும் நம்பியிருக்கிறார் தீபா. 'தேர்தல் வெற்றி ஒன்றுதான் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்' என்பதால், பேரவைக்குள் எழுந்த சர்ச்சைகளைத் தீர்ப்பதில் கவனத்தோடு இருக்கிறார். அரசியல் களத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைப் பற்றியும் அவருக்குப் பாடம் எடுத்து வருகின்றனர் அரசியல் ஆலோசகர்கள் சிலர்" என விவரித்த தீபா பேரவை நிர்வாகி ஒருவர்,
"ஆர்.கே.நகரில் ஐம்பது சதவீத அளவுக்குப் பெண்கள் வாக்குகள் உள்ளன. மீனவர்கள், தலித் மக்கள் என தொகுதி முழுக்கவே எளிய மக்கள் பரவிக் கிடக்கிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் ஜெயலலிதா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கின்றனர். இவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதில் தீபா உறுதியாக இருக்கிறார். இதுகுறித்து நேற்று நீண்டநேரம் விவாதித்தார். அப்போது பேசிய தீபா, 'முப்பது ஆண்டுகளாக ஜெயலலிதா கட்டிக் காத்த திராவிட இயக்கத்தை உறுதியாக நான் மீட்பேன். அவ்வளவு எளிதில் அ.தி.மு.கவை அழிய விடமாட்டேன். கட்சியைத் தொடங்கிய காலம் முதல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என ஒற்றைத் தலைமையுடன்தான் அ.தி.மு.க இயங்கி வருகிறது.
சசிகலா, தினகரன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் என ஒரு தலைமையும் பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன், கே.பி.முனுசாமி, செம்மலை என வேறு ஒரு கூட்டுத் தலைமையும் செயல்படுகிறது. இந்தக் கூட்டுத் தலைமைகளால் கட்சிக்கு எந்தவித நன்மையும் நடக்கப் போவதில்லை. அம்மா வழியில் ஒற்றைத் தலைமைதான் கட்சியை வழிநடத்தும். பதவிக்காக எந்தக் காலத்திலும் சமசரம் செய்து கொள்ளாதவர் ஜெயலலிதா. அதேவழியைத்தான் நானும் பின்பற்றுகிறேன். தற்போதுள்ள எடப்பாடி பழனிசாமி அரசு பா.ஜ.கவுக்கு வால் பிடிப்பதையே முழுநேர வேலையாகச் செய்கிறது' எனக் கொந்தளித்தவர்,
'பிரசாரத்தின்போது மக்கள் மத்தியில் சொல்வதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. அதற்கான ஆதாரத்தையும் முன்வைப்பேன்' எனப் பேசியவர், 'கருணாநிதி குடும்பத்துக்கும் சசிகலா குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு சசிகலா சொத்து வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அதுகுறித்த ஆதாரங்களையும் மக்கள் மன்றத்தில் வைப்பேன். 'அ.தி.மு.கவை எதிர்க்கிறோம்' என்ற பெயரில் தி.மு.கவினர் நடத்தும் பொய்ப் பிரசாரத்தை நம்ப வேண்டாம் என்பதை பிரசாரத்தில் முன்வைப்போம். சசிகலா குடும்பத்தை ஒழிக்க பன்னீர்செல்வத்தாலும் முடியாது. ஸ்டாலினாலும் முடியாது. என்னால் அவர்களை ஒழிக்க முடியும் என மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். மீனவ மக்களை இறுதிவரையில் பாதுகாத்தவர் ஜெயலலிதா. அவரது வரிசையில் அவரது ரத்த சம்பந்த உறவான என்னை ஆர்.கே.நகர் மக்கள் ஆதரிப்பார்கள்' எனப் பேசினார். தேர்தல் பிரசாரத்தின்போது, தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பிரசார அறிக்கை தயாரித்து வருகிறார். 'உழைக்கும் கை' சின்னத்தைக் கேட்டுப் பெறும் முடிவில் இருக்கிறார். இன்னும் ஓரிரு தினங்களில் பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார் தீபா" என்றார் விரிவாக.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பெண்கள் வாக்குகளைக் குறிவைத்தே தி.மு.கவும் களமிறங்கியுள்ளது. மகளிர் தினத்தில் கனிமொழி நடத்திய கருத்தரங்கில் பேசிய ஸ்டாலின், 'தி.மு.க நடத்தும் போராட்டத்தில் மகளிரணியைச் சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்தார். அதற்கேற்ப இன்று தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ரேசன் கடைகளை குறிவைத்து மாநிலம் முழுவதும் தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் அதகளம் செய்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க தாய்மார்களின் ஆதரவைப் பெறுவதற்குத்தான். 'ஆர்.கே.நகர் பெண்களின் வாக்குகளைக் கணிசமான அளவுக்கு நமது பக்கம் திசை திருப்பினாலே எளிதில் வெற்றி பெற்றுவிடுவோம்' என உறுதியாக நம்புகிறார் ஸ்டாலின். இதை அறிந்துதான், ஜெயலலிதா சாதனைகளை முன்வைத்து பிரசாரத்தை வடிவமைத்திருக்கிறார் தீபா. ஆளும்கட்சியான அ.தி.மு.கவும் எதிர்க்கட்சியான தி.மு.கவும் வலுவான வேட்பாளர் யார் என்பதைக் கணிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஜெயலலிதா வழியில் முன்கூட்டியே பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார் தீபா. 'ஜெயலலிதாவின் அசாத்திய நம்பிக்கை தீபாவுக்குப் பொருந்துமா?' என்பதற்கெல்லாம் வாக்கு எண்ணிக்கை நாளில் விடை தெரிந்துவிடும்.