20 கிராமங்களைக் காப்பாற்றும் சீமைக்கருவேல மரங்கள்...மாற்று ஏற்பாடுகள் செய்யுமா அரசு?
20 கிராமங்களைக் காப்பாற்றும் சீமைக்கருவேல மரங்கள்...மாற்று ஏற்பாடுகள் செய்யுமா அரசு?
சீமைக்கருவேல மரங்கள் மண்ணை பாதிக்கிறது. தண்ணீரை உறிஞ்சுகிறது. இதனால் மனிதர்களுக்கு எந்த பலனும் இல்லை. இதை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்ததையடுத்து, அதை வெட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையான மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. தற்போது நீதிமன்றத்தால் மரங்களை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாம் அழிக்க வேண்டும் என்று சொன்ன அந்த சீமைக் கருவேல மரங்கள்தான் சுமார் 20 கடற்கரையோர கிராமங்களைக் காப்பாற்றி வருகிறது என்கிற உண்மை தெரியுமா? ஆம்... நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேட்டிலிருந்து கோடியக்கரை வரையுள்ள 20 கிராமங்கள் சீமைக் கருவேல மரங்களால் காப்பாற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விரிவாகப் பேசினார் வாய்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான ராமநாதன். அவர், "வாய்மேட்டிலிருந்து கோடியக்கரை வரையுள்ள சுமார் 20 கிராமங்களில் வைகாசி விசாக நட்சத்திர நாளிலிருந்து ஆடி மாதம் வரை வேகமாகக் காற்று வீசும். இதை 'விசாகக் காற்று' என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள். இந்தக் காற்று வீசும்போது கடல்நீர் கிராமங்களை நோக்கி வரும். இந்த நீர் உள்ளே வந்தால், நிலத்தடி நீர்மட்டம் உப்புத் தண்ணீராக மாறும். இதைத் தடுப்பதற்காக தடுப்பணையெல்லாம் கட்டியிருக்கிறோம்.
இந்த விசாக காற்று வீசும்போது, தண்ணீர் மட்டும் உள்ளே வராது, அந்தக் காற்றோடு மணலும் கலந்து வரும். அதை தடுப்பது மிகவும் சிரமம். இந்த உப்பு மண் காற்றில் கலந்து வந்து மரம், செடி கொடி, வீடு மட்டுமல்லாமல் மனிதர்களின் மீதும் படியும். நாங்கள் வெளியே நடமாடவே முடியாது. அந்தளவுக்கு மணல்காற்று இருக்கும். ஒருகட்டத்தில் இந்த பிரச்னையால் எங்கள் ஊர் வாலிபர்களுக்கு பெண்கூட கொடுக்க மறுத்திருக்கிறார்கள். எங்கள் ஊர் இளைஞர்களுக்குத் திருமணங்களை எளிதில் நடத்தமுடியாத சூழலும் இருந்து வந்தது.
1950-ல் அப்போதைய எம்.எல்.ஏ. சர்தார் வேதரத்தினம், இந்த சீமைக்கருவேல மரங்களை கடலுக்கும் ஊருக்குமிடையேயுள்ள நிலப்பகுதியில் விதைக்க ஏற்பாடு செய்தார். அதன்பிறகு விதைகள் முளைத்து, மரங்களாக உயர்ந்தது. இன்று கம்பீரமாக வளர்ந்து நிற்கும் மரங்கள்தான், இந்த உப்புக்காற்றையும் மணல்காற்றையும் தடுத்து, இங்குள்ள கிராமங்களைப் பாதுகாத்து வருகிறது.
விசாகக்காற்றின் கெடுதலை இந்த மரங்கள் தடுத்து வருவதால்தான் சீமைக் கருவேல மரங்களை, காவல் தெய்வமாக வணங்கி வருகிறோம். இதோடு, தேவைக்கேற்றமாதிரி இந்த மரங்களை வெட்டி அடுப்பு எரிக்கவும், செங்கல் சூளைக்கும் பயன்படுத்திக்கிட்டு வர்றோம். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி சீமைக்கருவேல மரங்களை அழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளாக உப்புக் காற்று பிரச்னை இல்லாமல் நிம்மதியாக இருந்து வருகிறோம். சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையால், மீண்டும் நாங்கள் பழைய சூழலுக்கே தள்ளப்பட்டு விடுவோமோ? என்று பயமாக இருக்கிறது. நீதிமன்றம்தான் 20 கிராம மக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஆதங்கத்துடன் முடித்தார் ராமநாதன்.
இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியிடம் பேசினோம். "உப்புக்காற்று, மணல்காற்றைத் தடுக்க இதுநாள்வரை சீமைக்கருவேல மரங்கள் பயன்பட்டிருக்கலாம். ஆனால், இந்த மரங்களால் நீராதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது சீமைக் கருவேல மரங்களை வெட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. அதனால், மரங்களை வெட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. உப்புக்காற்றைத் தடுக்க எத்தனையோ நல்ல மரங்கள் இருக்கின்றன. அவை மக்களுக்கும், நிலத்துக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் நல்ல மரக்கன்றுகள் நடப்பட்டு, அந்த 20 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்" என்றார்.